அச்சப் பத்து/உரை 37-40

விக்கிநூல்கள் இலிருந்து

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்

நீணிலா அணியி னானை நினைந்துநைந் துருகி நெக்கு

வாணிலாம் கண்கள் சோரா வாழ்த்திநின் றேத்த மாட்டா

ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பதப்பொருள் :

கோள் நிலா - கொலைத் தன்மை தங்கிய, வாளி அஞ்சேன் - அம்புக்கு அஞ்ச மாட்டேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் - இயமானது கோபத்துக்கும் அஞ்ச மாட்டேன்; நீள்நிலா - நீண்ட பிறையாகிய, அணியினானை - அணிகலத்தையுடைய சிவபெருமானை, நினைந்து - எண்ணி, நைந்து உருகி - கசிந்து உருகி, நெக்கு - நெகிழ்ந்து, வாள் நிலாம் - ஒளி பொருந்திய, கண்கள் - விழிகளில், சோர - ஆனந்தக் கண்ணீர் பெருக, வாழ்த்தி நின்று - துதித்து நின்று, ஏத்த மாட்டா - புகழ மாட்டாத, ஆண் அலாதவரைக் கண்டால் - ஆண்மையுடையரல்லாரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் :

இறைவனே உடலிடங்கொண்டிருத்தலின், கொடுமையான வாள் அதனுள் ஊடுருவிச் செல்ல முடியாது என்பார், 'கோணிலா வாளி அஞ்சேன்' என்றார். நோற்றலில் தலைப்பட்டார்க்குக் கூற்றம் குதித்தலும் கை கூடுமாதலின், 'கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்' என்றார். ஆனால், இறைவனது திருவடிவத்தை நினைந்து பேரின்பத்தில் திளைத்திராதவரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார்.

இதனால், இறைவனைத் தியானம் செய்து ஆனந்தத்தில் அழுந்தியிருத்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=அச்சப்_பத்து/உரை_37-40&oldid=2399" இலிருந்து மீள்விக்கப்பட்டது