குறுந்தொகை உரை

Wikibooks தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

குறுந்தொகை உரை:

பொருளடக்கம்

[தொகு] கடவுள் வாழ்த்து

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவளத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏமம் வைக லெய்தின்ற லுலகே

உரை:

தாமரை மலரைப் போன்ற சிவந்த அடிகள்(காலடி), பவழம் போல் சிவந்த உடல், உடலில் இருந்து பரவித் திகழும் ஒளி, குன்றி மணி போல் சிவந்த ஆடை, குன்றே இரண்டாய்ப் பிளக்குமாறு நெடிய வேல் படை, இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப் பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களைப் பெற்று விளங்குகிறது.

[தொகு] பாடல் 1

குறிஞ்சி - தோழி கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கொ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

முதற் குறிப்பு:

தோழியற் கூட்டத்தை விரும்பிய தலைவன், செங்காந்தள் பூவைத் தோழிக்குக் கையுறையாகக் கொடுத்துத் தன் குறை கூறுகையில், 'இஃது எமது மலையிலும் பெருமளவு உள்ளது, ஆதலின் இதனை வேண்டேம்' என மறுத்துக் கூறியது.

உரை:

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி, பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/ வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களை உடைய யானையையும், இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையிலே செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்து உள்ளன.

[தொகு] பாடல் 2

குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
நறியவும் உளவொ றீயறியும் பூவே.

முதற் குறிப்பு:

இயற்கைப் புணர்ச்சிக்கண், தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.

உரை:

பூக்களைத் தேர்ந்து/ ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே சிறையாதலையும் இயல்பாகக் கொண்ட வண்டே, நீ சொல்வாயாக! நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக! மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ!


[தொகு] பாடல் 3

குறிஞ்சி - தலைவி கூற்று

நிலதினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறுங்சிப் பூக்கொண்டு
பொருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

முதற் குறிப்பு:

தலைவனின் இயல்பைப் பழித்துக் கூறிய தோழிக்கு, தலைவி பதிலாகக் கூறியது.

உரை:

மலைச்சாரலில் வளரக் கூடிய, கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரத்தின் பூவிலிருந்து பெருமளவு தேன் உருவாகும் நாட்டைச் சேர்ந்தவனாகிய தலைவனிடம் நான் கொண்ட நட்பானது, இந்த புவியைக் காட்டிலும் பெரியது; வானை விடவும் உயர்ந்தது; கடலின் ஆழத்தை விடவும் அளத்தற்கரிய ஆழம் உடையது.

"http://ta.wikibooks.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்