திருப்பொற் சுண்ணம்/உரை 129-136

விக்கிநூல்கள் இலிருந்து

தேனக மாமலர்க் கொன்றைபாடிச்

சிவபுரம் பாடித் திருச்சடைமேல்

வானக மாமதிப் பிள்ளைபாடி

மால்விடை பாடி வலக்கையேந்தும்

ஊனக மாமழுச் சூலம்பாடி

உம்பரு இம்பரும் உய்யஅன்று

போனக மாகநஞ் சுண்டல்பாடிப்

பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

தேன் அகம் - சிவபெருமானது தேன் நிறைந்த உள்ளிடத்தையுடைய, மா - பெருமை பொருந்திய, கொன்றை மலர் பாடி - கொன்றை மலரைப் பாடி, சிவபுரம் பாடி - சிவலோகத்தைப் பாடி, திருச்சடைமேல் - அழகிய சடையின் மேலுள்ள, வான் அகம் - விண்ணிடத்து உலாவுகின்ற, மாமதிப் பிள்ளை பாடி - பெருமையமைந்த இளம்பிறையைப் பாடி, மால் விடை பாடி - பெரிய இடபத்தைப் பாடி, வலக்கையேந்தும் - வலக்கையில் தாங்கிய, ஊன் அகம் ஆம் - தசை தன்னிடத்தில் பொருந்திய, மழு சூலம் பாடி - மழுவினையும் முத்தலை வேலினையும் பாடி, உம்பரும் - விண்ணுலகத்தாரும், இம்பரும் - மண்ணுலகத்தாரும், உய்ய - பிழைக்கும் வண்ணம், அன்று - அந்நாளில், நஞ்சு - விடத்தை, போனகமாக - உணவாக, உண்டல் பாடி - உண்டதைப் பாடி, பொற்றிருச் சுண்ணம் - பொன்போலும் அழகிய வாசனைப்பெடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

சரணடைந்தார்க்குத் தஞ்சமளித்துக் காக்க வல்ல பெருமான் என்பதை, ‘திருச்சடைமேல் வானக மாமதிப்பிள்ளை’ காட்டுகிறது. இனி, தான் துன்பத்தையேற்றும் தன்னையடைந்தவர்க்கு இன்பம் தருபவன் பெருமான் என்பதை, ‘உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனகமாக நஞ்சுண்டல்’ காட்டுகிறது.

இதனால், இறைவனது அறக்கருணை கூறப்பட்டது.