மென்நுகர் நியதிகள்

விக்கிநூல்கள் இலிருந்து

இலட்சக்கணக்கில் பணம் புரளும் வியாபாரத்தினை மேற்கொண்டுள்ள ஒருவர். எத்தனைக் காலம் தான் கையாலேயே கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டிருப்பது? கணினியின் துணையுடன் சுலபப் படுத்த சித்தம் கொண்டு தமது தேவைக் கேற்ப மென்பொருளொன்றினை உருவாக்க உத்தேசம் கொண்டார்.

நண்பரை நாடி அதற்குரிய சிறியதொரு நிறுவனத்தையும் இனங் கண்டு பல ஆயிரம் கொடுத்து தமது தேவைகளுக்கு ஏற்ப மென்பொருளொன்றினையும் வடிவமைத்துக் கொண்டார். கணக்கெழுதும் அவரது பணி கணப்பொழுதில் நிறைவடைவது கண்டு அளவிலா ஆனந்தம் அவருக்கு.

காலம் கடந்தது வர்த்தமும் வளர்ந்தது. அரசின் புதிய சட்டங்கள் வேறு. கணக்கு வழக்குகளுக்கெல்லாம் இப்போது கணினியினை விட்டால் வேறு வழியில்லை. மென்பொருளிடமிருந்த எதிர்பார்ப்பு கூடியது. புதிய தேவைகளுக்கேற்ப மாற்ற வேண்டும். என்ன செய்ய? ஆக்கியவரைத் தேடிச் சென்றார்.

ஆக்கியவரோ அவ் வர்த்தகத்தை விட்டு விட்டு வேறு பிழைப்பைப் பார்த்துக் கொண்டு வெளியூருக்கு சென்றுவிட்டாராம். அதனால் என்ன? மோட்டார் வண்டிக்கு ஒரு மெக்கானிக் இல்லைனா இன்னொரு மெக்கானிக் இருக்கறது இல்லையா! அதே மாதிரிதானே இதுவுமென்று நினைத்து இன்னொருவரைத் தேடிச் சென்றவருக்கு தலையில் இடி இறங்கியது.

முடியாதுங்க ! அதை மாத்த எங்களால முடியாதுங்க! வேணும்னா சொல்லுங்க இன்னி தேதிக்கு இன்னும் இருபது முப்பதாயிரம் கூட ஆகும். மொதல்லேர்ந்து புதுசாத் தான் செய்யணும். விருப்பப் பட்டா சொல்லுங்க ஒரு மாசத்துல செய்து தரோம் என்றனர்.

என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க ! ஒரு வண்டி மெக்கானிக் பழுது பாக்கற மாதிரி தானே இதுவும் . அவர மாதிரியே படிப்புப் படிச்சுட்டுத் தானே நீங்களும் தொழில் செய்யறீங்க அப்பறம் என்ன?

ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் . எங்களால இதை மாத்திக் கொடுக்க முடியும் . ஆனா உங்ககிட்ட மென்பொருளோட மூல நிரல்கள் இல்லையே என்ன செய்ய? யார் செய்து தந்தாங்களோ அவங்க கிட்ட போய் மூல நிரல்களை வாங்கிக் கிட்டு வாங்க. நாங்க செய்து கொடுக்கிறோம் என்றனர்.

அப்பாடி ! நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியவேயில்லை. கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன் . அப்போ இதை மாத்தவே முடியாதா? என்னோட தரவுகள் எல்லாம் இப்போ இதை நம்பியில்ல இருக்கு என்றார் தழு தழுத்தக் குரலில்.

பாருங்க ஐயா! உங்ககிட்ட மென்பொருள் இருக்கு. இதுக்காக பல நூறு வரிகள் நிரலெழுதியிருப்பாங்க. அது இருந்தாதான் அவங்க எப்படி எழுதியிருக்காங்கன்னு படிச்சு உங்க புது தேவைகளுக்கு ஏற்ப மாற்ற முடியும். இல்லைனா ஒன்னும் செய்ய முடியாது. இருக்கறதை வச்சு காலந்தள்ள வேண்டியதுதான்.

வேறு வழியில்லா அவ்வியாபாரி மீண்டும் பல்லாயிரம் செலவுச் செய்து தம் தேவைக் கேற்ப புதிய மென்பொருளை உருவாக்கிக் கொண்டார். ஆனால் இம்முறை மறவாமல் தமது மென்பொருளின் மூல நிரல்களையும் வாங்கிக் கொண்டார்.

ஆம். நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருட்களின் மூல நிரல்களைப் பெறுவது என்பது நமது தார்மீக உரிமை. அதைத் தருவது அம்மென்பொருளை உருவாக்குபவரின் தலையாயக் கடமை. அங்ஙனம் தராத மென்பொருட்களைப் புறக்கணிப்பது பகிர்ந்து வாழும் சமூக அமைப்பினை ஏற்படுத்த நாம் செய்யும் மகத்தான கைமாறு.

வேறென்ன எதிர்பார்ப்புகள் இருக்கமுடியும் ஒரு மென்பொருளிடமிருந்து ?

"https://ta.wikibooks.org/w/index.php?title=மென்நுகர்_நியதிகள்&oldid=11604" இலிருந்து மீள்விக்கப்பட்டது