யாத்திரைப் பத்து/உரை 9-12

விக்கிநூல்கள் இலிருந்து

தாமே தமக்குச் சுற்றமுந்

தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார்

என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப்

புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.


பதப்பொருள் :

தமக்குச் சுற்றமும் தாமே - ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே, தமக்கு விதி வகையும் தாமே - நடைமுறைகளை வகுத்துக்கொள்பவரும் அவரே; ஆதலால், அடியவர்களே, நீங்கள், யாம் ஆ£¢ - நாம் யார், எமது ஆர் - எம்முடையது என்பது யாது, பாசம் ஆர் - பாசம் என்பது எது, என்ன மாயம் - இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து, இவை போக - இவை நம்மை விட்டு நீங்க, கோமான் - இறைவனுடைய, பண்டைத் தொண்டரொடும் - பழைய அடியாரொடும் சேர்ந்து, அவன்றன் குறிப்பே - அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே, குறிக்கொண்டு - உறுதியாகப் பற்றிக்கொண்டு, பொய் நீக்கி - பொய் வாழ்வை நீத்து, புயங்கன் - பாம்பணிந்தவனும், ஆள்வான் - எமையாள்வோனுமாகிய பெருமானது, பொன் அடிக்கு - பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ், போம் ஆறு அமைமின் - போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

விளக்கம் :

ஒவ்வொருவருக்கும் வரும் நன்மை தீமைகளுக்குக் காரணம் அவரவர் செய்யும் செய்கையேயன்றி வேறில்லையாதலின், 'தாமே தமக்குச் சுற்றமும்' என்றும், இவ்வாறு நடத்தல் வேண்டும், இவ்வாறு நடத்தல் கூடாது என்று உறுதி செய்துகொண்டு அவ்வாறு நடப்பவரும் அவரேயாதலின், 'தாமே தமக்கு விதி வகையும்' என்றும் கூறினார்.

"தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனு மாமே."

என்ற திருமூலர் வாக்கை இங்கு நினைவுகூர்க. இங்ஙனமாகவே, பின் வருவனவற்றைக் கடைப்பிடித்தல் அனைவருக்கும் இன்றியமையாதது என்பதாம். இவ்வுடம்பும் உலகமும் நிலையாமையுடையவை என்று உணர்ந்து அவற்றினின்றும் நீங்க வேண்டும் என்பார், 'யாமார் எமதார் பாசமார் என்ன மாயம்' என்று உணர்த்தினார். இறைவன் குறிப்பாவது, ஆன்மாக்களெல்லாம் வீடுபேறு எய்த வேண்டும் என்பது, இதனை உணர்ந்து அவனது திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பார், 'அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு பொன்னடிக்கே போமாறு அமைமின்' என்று அறிவுறுத்துகிறார்.

இதனால், இறைவனது அடியார் கூட்டம் திருவடிப் பேற்றினை நல்கும் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாத்திரைப்_பத்து/உரை_9-12&oldid=2372" இலிருந்து மீள்விக்கப்பட்டது