1.3 பிறப்பியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > எழுத்ததிகாரம்
- உந்தி முதலா முந்து வளி தோன்றி
- தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
- பல்லும் இதழும் நாவும் மூக்கும்
- அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
- உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
- எல்லா எழுத்தும் சொல்லும் காலை
- பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
- திறப்படத் தெரியும் காட்சியான. 1
- அவ் வழி,
- பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
- மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2
- அவற்றுள்,
- அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும். 3
- இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
- அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
- அவைதாம்,
- அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. 4
- உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
- அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5
- தம்தம் திரிபே சிறிய என்ப. 6
- ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7
- சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8
- டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9
- அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10
- அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
- நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
- தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11
- அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
- றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12
- நுனி நா அணரி அண்ணம் வருட
- ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13
- நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
- ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
- லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14
- இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15
- பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16
- அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
- கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17
- மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
- சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
- மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18
- சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்
- தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
- தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி
- ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19
- எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
- சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
- பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
- அகத்து எழு வளி இசை அரில் தப நாடி
- அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20
- அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
- மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21