1.4 புணரியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > எழுத்ததிகாரம்
- மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்
- இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருபஃது
- அறு நான்கு ஈறொடு நெறி நின்று இயலும்
- எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
- மெய்யே உயிர் என்று ஆயீர் இயல. 1
- அவற்றுள்,
- மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு-நிலையல். 2
- குற்றியலுகரமும் அற்று என மொழிப. 3
- உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே. 4
- உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
- உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்
- மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
- மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று
- இவ் என அறியக் கிளக்கும் காலை
- நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று
- ஆயீர் இயல புணர் நிலைச் சுட்டே. 5
- அவற்றுள்,
- நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு
- குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய
- பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
- பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
- தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
- தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
- மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என
- ஆங்கு அந் நான்கே மொழி புணர் இயல்பே. 6
- அவைதாம்,
- மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று
- இவ் என மொழிப திரியும் ஆறே. 7
- நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும்
- அடையொடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய. 8
- மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
- உரியவை உளவே புணர் நிலைச் சுட்டே. 9
- வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்
- வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும்
- எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்
- ஒழுக்கல் வலிய புணரும் காலை. 10
- ஐ ஒடு கு இன் அது கண் என்னும்
- அவ் ஆறு என்ப வேற்றுமை உருபே. 11
- வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு
- ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும். 12
- ஆறன் உருபின் அகரக் கிளவி
- ஈறு ஆகு அகர முனைக் கெடுதல் வேண்டும். 13
- வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே. 14
- உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயர் என்று
- ஆயிரண்டு என்ப பெயர் நிலைச் சுட்டே. 15
- அவற்று வழி மருங்கின் சாரியை வருமே. 16
- அவைதாம்,
- இன்னே வற்றே அத்தே அம்மே
- ஒன்னே ஆனே அக்கே இக்கே
- அன் என் கிளவி உளப்பட பிறவும்
- அன்ன என்ப சாரியை மொழியே. 17
- அவற்றுள்,
- இன்னின் இகரம் ஆவின் இறுதி
- முன்னர்க் கெடுதல் உரித்தும் ஆகும். 18
- அளபு ஆகு மொழி முதல் நிலைஇய உயிர்மிசை
- னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே. 19
- வஃகான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன்
- அஃகான் நிற்றல் ஆகிய பண்பே. 20
- னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு. 21
- ஆனின் னகரமும் அதன் ஓரற்றே
- நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே. 22
- அத்தின் அகரம் அகர முனை இல்லை. 23
- இக்கின் இகரம் இகர முனை அற்றே. 24
- ஐயின் முன்னரும் அவ் இயல் நிலையும். 25
- எப் பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி
- அக்கின் இறுதி மெய்ம் மிசையொடும் கெடுமே
- குற்றியலுகரம் முற்றத் தோன்றாது. 26
- அம்மின் இறுதி க ச தக் காலை
- தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும். 27
- மென்மையும் இடைமையும் வரூஉம் காலை
- இன்மை வேண்டும் என்மனார் புலவர். 28
- இன் என வரூஉம் வேற்றுமை உருபிற்கு
- இன் என் சாரியை இன்மை வேண்டும். 29
- பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப
- வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்
- தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும்
- ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி
- சொற் சிதர் மருங்கின் வழி வந்து விளங்காது
- இடை நின்று இயலும் சாரியை இயற்கை
- உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும். 30
- அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்
- ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்றே
- அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. 31
- காரமும் கரமும் கானொடு சிவணி
- நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை. 32
- அவற்றுள்,
- கரமும் கானும் நெட்டெழுத்து இலவே. 33
- வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய. 34
- ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும். 35
- புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது
- மெய்யொடும் சிவணும் அவ் இயல் கெடுத்தே. 36
- மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும். 37
- எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
- உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். 38
- எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி
- இசையின் திரிதல் நிலைஇய பண்பே. 39
- அவைதாம்,
- முன்னப் பொருள புணர்ச்சிவாயின்
- இன்ன என்னும் எழுத்துக் கடன் இலவே. 40