1.5 தொகை மரபு
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > எழுத்ததிகாரம்
- க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும்
- மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான்
- ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே
- அன்ன மரபின் மொழிவயினான. 1
- ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும்
- உயிர் முதல் ஆகிய மொழியும் உளப்பட
- அன்றி அனைத்தும் எல்லா வழியும்
- நின்ற சொல் முன் இயல்பு ஆகும்மே. 2
- அவற்றுள்,
- மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார்
- சொல்லிய தொடர்மொழி இறுதியான. 3
- ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும்
- வினை ஓரனைய என்மனார் புலவர். 4
- மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும்
- வரு வழி நின்ற ஆயிரு புள்ளியும்
- வேற்றுமை அல் வழித் திரிபு இடன் இலவே. 5
- வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி
- மேற் கூறு இயற்கை ஆவயினான. 6
- ல ன என வரூஉம் புள்ளி முன்னர்
- த ந என வரின் ற ன ஆகும்மே. 7
- ண ள என் புள்ளி முன் ட ண எனத் தோன்றும். 8
- உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும்
- புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும்
- இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று
- ஆயீர் இயல வல்லெழுத்து வரினே. 9
- ஔ என வரூஉம் உயிர் இறு சொல்லும்
- ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும்
- குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட
- முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. 10
- உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும்
- புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்
- எல்லா வழியும் இயல்பு என மொழிப. 11
- அவற்றுள்,
- இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. 12
- அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே. 13
- புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்
- வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான்
- தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின்
- மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்
- அம் முறை இரண்டும் உரியவை உளவே
- வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 14
- மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும்
- வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும்
- இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
- உயிர் மிக வரு வழி உயிர் கெட வருதலும்
- சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும்
- சாரியை உள் வழித் தன் உருபு நிலையலும்
- சாரியை இயற்கை உறழத் தோன்றலும்
- உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்
- அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ் இயல் நிலையலும்
- மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும்
- அன்ன பிறவும் தன் இயல் மருங்கின்
- மெய் பெறக் கிளந்து பொருள் வரைந்து இசைக்கும்
- ஐகார வேற்றுமைத் திரிபு என மொழிப. 15
- வேற்றுமை அல்வழி இ ஐ என்னும்
- ஈற்றுப் பெயர்க் கிளவி மூ வகை நிலைய
- அவைதாம்,
- இயல்பு ஆகுநவும் வல்லெழுத்து மிகுநவும்
- உறழ் ஆகுநவும் என்மனார் புலவர். 16
- சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும்
- எகர முதல் வினாவின் இகர இறுதியும்
- சுட்டுச் சினை நீடிய ஐ என் இறுதியும்
- யா என் வினாவின் ஐ என் இறுதியும்
- வல்லெழுத்து மிகுநவும் உறழ் ஆகுநவும்
- சொல்லிய மருங்கின் உள என மொழிப. 17
- நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும்
- குறியதன் முன்னர்த் தன் உருபு இரட்டலும்
- அறியத் தோன்றிய நெறி இயல் என்ப. 18
- ஆறன் உருபினும் நான்கன் உருபினும்
- கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை
- ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும்
- நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன. 19
- நும் என் இறுதியும் அந் நிலை திரியாது. 20
- உகரமொடு புணரும் புள்ளி இறுதி
- யகரமும் உயிரும் வரு வழி இயற்கை. 21
- உயிரும் புள்ளியும் இறுதி ஆகி
- அளவும் நிறையும் எண்ணும் சுட்டி
- உள எனப்பட்ட எல்லாச் சொல்லும்
- தம்தம் கிளவி தம் அகப்பட்ட
- முத்தை வரூஉம் காலம் தோன்றின்
- ஒத்தது என்ப ஏ என் சாரியை. 22
- அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு
- புரைவது அன்றால் சாரியை இயற்கை. 23
- குறை என் கிளவி முன் வரு காலை
- நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை. 24
- குற்றியலுகரக்கு இன்னே சாரியை. 25
- அத்து இடை வரூஉம் கலம் என் அளவே. 26
- பனை என் அளவும் கா என் நிறையும்
- நினையும் காலை இன்னொடு சிவணும். 27
- அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதல் ஆகி
- உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே
- அவைதாம்,
- க ச த ப என்றா ந ம வ என்றா
- அகர உகரமொடு அவை என மொழிப. 28
- ஈறு இயல் மருங்கின் இவை இவற்று இயல்பு எனக்
- கூறிய கிளவிப் பல் ஆறு எல்லாம்
- மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி
- ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே. 29
- பலர் அறி சொல் முன் யாவர் என்னும்
- பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை
- ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை
- ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்
- மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே. 30