1.7 உயிர் மயங்கியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > எழுத்ததிகாரம்
- அகர இறுதிப் பெயர் நிலை முன்னர்
- வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின்
- தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே. 1
- வினையெஞ்சுகிளவியும் உவமக் கிளவியும்
- என என் எச்சமும் சுட்டின் இறுதியும்
- ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
- ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. 2
- சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின்
- ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும். 3
- ய வ முன் வரினே வகரம் ஒற்றும். 4
- உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது. 5
- நீட வருதல் செய்யுளுள் உரித்தே. 6
- சாவ என்னும் செய என் எச்சத்து
- இறுதி வகரம் கெடுதலும் உரித்தே. 7
- அன்ன என்னும் உவமக் கிளவியும்
- அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்
- செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும்
- ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
- செய்த என்னும் பெயரெஞ்சுகிளவியும்
- செய்யிய என்னும் வினையெஞ்சுகிளவியும்
- அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்
- பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட
- அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப. 8
- வாழிய என்னும் செய என் கிளவி
- இறுதி யகரம் கெடுதலும் உரித்தே. 9
- உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். 10
- பலவற்று இறுதி நீடு மொழி உளவே
- செய்யுள் கண்ணிய தொடர்மொழியான. 11
- தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின்
- லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே. 12
- வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும். 13
- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 14
- மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 15
- மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை. 16
- அத்து அவண் வரினும் வரை நிலை இன்றே. 17
- பலவற்று இறுதி உருபு இயல் நிலையும். 18
- ஆகார இறுதி அகர இயற்றே. 19
- செய்யா என்னும் வினையெஞ்சுகிளவியும்
- அவ் இயல் திரியாது என்மனார் புலவர். 20
- உம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி
- மெய்ம்மையாக அகரம் மிகுமே. 21
- ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
- யா என் வினாவும் பலவற்று இறுதியும்
- ஏவல் குறித்த உரையசை மியாவும்
- தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு
- அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப. 22
- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 23
- குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
- அறியத் தோன்றும் அகரக் கிளவி. 24
- இரா என் கிளவிக்கு அகரம் இல்லை. 25
- நிலா என் கிளவி அத்தொடு சிவணும். 26
- யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்
- ஆ முப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. 27
- வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 28
- மாமரக் கிளவியும் ஆவும் மாவும்
- ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன
- அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா
- னகரம் ஒற்றும் ஆவும் மாவும் 29
- ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே. 30
- ஆன் முன் வரூஉம் ஈகார பகரம்
- தான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே. 31
- குறியதன் இறுதிச் சினை கெட உகரம்
- அறிய வருதல் செய்யுளுள் உரித்தே. 32
- இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
- வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 33
- இனி அணி என்னும் காலையும் இடனும்
- வினையெஞ்சுகிளவியும் சுட்டும் அன்ன. 34
- இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி
- நின்ற இகரம் உகரம் ஆதல்
- தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே. 35
- சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே. 36
- பதக்கு முன் வரினே தூணிக் கிளவி
- முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே. 37
- உரி வரு காலை நாழிக் கிளவி
- இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே
- டகாரம் ஒற்றும் ஆவயினான. 38
- பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு
- அத்தும் இன்னும் சாரியை ஆகும். 39
- வளி என வரூஉம் பூதக் கிளவியும்
- அவ் இயல் நிலையல் செவ்விது என்ப. 40
- உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 41
- புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை. 42
- ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே. 43
- வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை
- ஒல்வழி அறிதல் வழக்கத்தான. 44
- நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு
- ஆன் இடை வருதல் ஐயம் இன்றே. 45
- திங்கள் முன் வரின் இக்கே சாரியை. 46
- ஈகார இறுதி ஆகார இயற்றே. 47
- நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்
- மீ என மரீஇய இடம் வரை கிளவியும்
- ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 48
- இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம்
- உடன் நிலை மொழியும் உள என மொழிப. 49
- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 50
- நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும்
- ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 51
- உகர இறுதி அகர இயற்றே. 52
- சுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும். 53
- ஏனவை வரினே மேல் நிலை இயல்பே. 54
- சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே. 55
- அன்று வரு காலை ஆ ஆகுதலும்
- ஐ வரு காலை மெய் வரைந்து கெடுதலும்
- செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப. 56
- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 57
- எருவும் செருவும் அம்மொடு சிவணி
- திரிபு இடன் உடைய தெரியும் காலை
- அம்மின் மகரம் செருவயின் கெடுமே
- தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை. 58
- ழகர உகரம் நீடு இடன் உடைத்தே
- உகரம் வருதல் ஆவயினான. 59
- ஒடுமரக் கிளவி உதி மர இயற்றே. 60
- சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்
- ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை. 61
- ஊகார இறுதி ஆகார இயற்றே. 62
- வினையெஞ்சுகிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்
- நினையும் காலை அவ் வகை வரையார். 63
- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 64
- குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்
- நிற்றல் வேண்டும் உகரக் கிளவி. 65
- பூ என் ஒரு பெயர் ஆயியல்பு இன்றே
- ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. 66
- ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும். 67
- அக்கு என் சாரியை பெறுதலும் உரித்தே
- தக்க வழி அறிதல் வழக்கத்தான. 68
- ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்
- இன் இடை வரினும் மானம் இல்லை.- 69
- எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா
- முன்னிலை மொழிய என்மனார் புலவர்
- தேற்றமும் சிறப்பும் அல் வழியான. 70
- தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்
- மேற் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா. 71
- ஏகார இறுதி ஊகார இயற்றே. 72
- மாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும்
- கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். 73
- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 74
- ஏ என் இறுதிக்கு எகரம் வருமே. 75
- சே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே. 76
- பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும். 77
- ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
- வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 78
- சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும். 79
- விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்
- ஆ முப் பெயரும் சேமர இயல. 80
- பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
- நினையும் காலை அம்மொடு சிவணும்
- ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே
- மெய் அவண் ஒழிய என்மனார் புலவர். 81
- பனையின் முன்னர் அட்டு வரு காலை
- நிலை இன்று ஆகும் ஐ என் உயிரே
- ஆகாரம் வருதல் ஆவயினான. 82
- கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப
- கடி நிலை இன்றே வல்லெழுத்து மிகுதி. 83
- திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன. 84
- மழை என் கிளவி வளி இயல் நிலையும். 85
- செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
- ஐ என் இறுதி அவா முன் வரினே
- மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர்
- டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும். 86
- ஓகார இறுதி ஏகார இயற்றே. 87
- மாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும்
- கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். 88
- ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே. 89
- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே
- ஒகரம் வருதல் ஆவயினான. 90
- இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும். 91
- உருபு இயல் நிலையும் மொழியுமார் உளவே
- ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 92
- ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
- அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும்
- வல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே
- அவ் இரு ஈற்றும் உகரம் வருதல்
- செவ்விது என்ப சிறந்திசினோரே. 93