1. பூகம்பம்
Wikibooks தளத்திலிருந்து
பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும்.
இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரகாரம் அதாவது பிராமணர் வீதி, இருந்தது. அந்த அக்ரகாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும் பட்சிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ, வேறு எந்தக் காரணத்தாலோ, மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக்குழந்தைகள்-விசேஷமாகப் பெண் குழந்தைகள்-பேசும்போது சாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையைக் குயில்கள் போலவும் கிளிகள் போலவும் நாகணவாய்ப் புட்கள் போலவும் அற்புதமான குரலில் பேசின.
அந்த அக்ரகாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்கு பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும். அல்லது, சில பசுக்கள் கிருஷ்ணன் சந்நிதிக்கெதிரே படுத்துக்கொண்டு சுவாமியை நோக்கி ஜபம் பண்ணிக் கொண்டிருப்பது போல் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளைக் கொத்தி இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணோரத்தைக் கொத்துவது போல் விளையாடி மாட்டுக்குப் பொழுது போகச் செய்து கொண்டிருக்கும். இதையெல்லாம் மரக் கிளைகளின் மீதுள்ள பட்சிகள் பார்த்து வியப்புரை கூறிக்கொண்டிருக்கும்.
அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அழகுக்கும் இலக்கியமாகத் திகழ்ந்தது அவ்வேளாண்குடியூர் அக்ரகாரம். அங்கு, பெண்மக்கள் எல்லாரும் மகாசுந்தரிகள். ஆண்மக்கள் மிகவும் நல்ல குணமுடையோர், ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீக சொத்து, நிலம், தோட்டம் முதலியன-எல்லோருக்கும் சிறிது சிறிதுண்டு. ஆனால், அதிலிருந்து வரும் வரும்படி வெறுமே போஜனத்துக்குக் கூடக் காணாது. இதில் வேஷ்டிகள், புடவைகள், ரவிக்கைகள், பாவாடைகள், குடுமிக் கலியாணம், பூணூல் கலியாணம், விவாகங்கள், ருது ஸ்நானங்கள், ருது சாந்திகள், சீமந்தங்கள், பல பல பண்டிகைகள், உற்சவங்கள், விழாக்கள் என்பன ஓயாமல் நிகழுமாதலால், அவ்வூர் கிருஹஸ்தர்கள், மேன்மேலும் தம் நில முதலியன சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும், ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறைவும் குடிகொண்டிருந்தன என்ற செய்தி அவ்வூர்க் குழந்தைகளுக்குத் தெரியாது; பட்சிகளுக்குந் தெரியாது, கோயிலெதிரே எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கும், கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், பாட்டிலும், ஆனந்தக் களியிலும் மூழ்கிக் கிடந்தன.
இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லா பிராமணர்களைக் காட்டிலும் அதிக ஏழையான மகாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந்தார். அவ்ருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத்தாய் தந்தையர் இருவர்; விதவையான தங்கை ஒருத்தி; சுமார் முப்பது வயதுள்ள மனைவி ஒருத்தி; அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது பிரசவம் நெருங்கிய சமயம்.
இத்தனை பேருக்கும் ஆகாரம் வேண்டுமே? மகாலிுங்கையருக்கு பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் சம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை விட்டுப் பிரிந்து நெடுங்காலமாய் விட்டது.