12 கலிங்கத்துப் பரணி போர் பாடியது

Wikibooks தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

கலிங்கத்துப் பரணி>


போரின் பேரொலி

404 எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே

விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1

405 வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே

செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2


இருபடைகளும் குதிரைகளும்

406 எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே

மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே. 3


யானைப் படையும் குதிரைப் படையும்

407 கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே

இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே. 4


வீரர்களும் அரசர்களும்

408 பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே

அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே. 5

விற்போர்

409 விளைகனல் விழிகளின் முளைக்கவே மினலொளி கனலிடை யெறிக்கவே

வளைசிலை யுருமென விடிக்கவே வடிகணை நெடுமழை படைக்கவே. 6


குருதி ஆறு

410 குருதியின் நதிவெளி பரக்கவே குடையின நுரையென மிதக்கவே

கரிதுணி படுமுட லடுக்கியே கரையென விருபுடை கிடக்கவே. 7


யானைப் போர்

411 மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே

நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே. 8


412 நிழற்கொடி தழற்கது வலிற்கடி தொளித்தவை நினைப்பவர் நினைப்ப தன்முனே

அழற்படு புகைக்கொடி யெடுத்தன புதுக்கொடி யனைத்தினு நிரைத்த தெனவே. 9

413 இடத்திடை வலத்திடை யிருத்திய துணைக்கரம் நிகர்த்தன வடுத்த கரியின்

கடத்தெழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன வவற்றி னெயிறே. 10

414 எயிறுக ளுடையபொ ருப்பை வலத்திடை எதிரெதி ரிருபணை யிட்டுமு றுக்கிய

கயிறுக ளிவையென அக்கர டக்கரி கரமொடு கரமெதிர் தெற்றிவ லிக்கவே. 11


குதிரைகளின் தோற்றம்

415 முடுகிய பவனப தத்திலு கக்கடை முடிவினி லுலகமு ணச்சுடர் விட்டெழு

கடுகிய வடவன லத்தினை வைத்தது களமுறு துரகக ணத்தின்மு கத்திலே. 12


வீரர்களின் பெருமிதம்

416 களமுறு துரகக ணத்தின்மு கத்தெதிர் கறுவிலர் சிலர்கல வித்தலை நித்தில

இளமுலை யெதிர்பொரு மப்பொழு திப்பொழு தெனவெதிர் கரியின்ம ருப்பின்மு னிற்பரே. 13


வாள் வீரர்களின் சிறப்பு

417 எதிர்பொரு கரியின்ம ருப்பையு ரத்தினில் இறவெறி படையினி றுத்துமி றைத்தெழு

சதுரர்கண் மணியக லத்தும ருப்பவை சயமகள் களபமு லைக்குறி யொத்ததே. 14


குதிரை வீரர்களின் சிறப்பு

418 சயமகள் களபமு லைக்கணி யத்தகு தனிவட மிவையென மத்தக முத்தினை

அயமெதிர் கடவிம தக்கரி வெட்டினர் அலைபடை நிரைகள்க ளத்துநி ரைக்கவே. 15


வில் வீரரின் சிறப்பு

419 அலைபடை நிரைகள்நி றைத்தசெ ருக்களம் அமர்புரி களமென வொப்பில விற்படை

தலைபொர வெரியநெ ருப்பினின் மற்றது தழல்படு கழைவன மொக்கினு மொக்குமே. 16

420 தழல்படு கழைவன மெப்படி யப்படி சடசட தமரமெ ழப்பக ழிப்படை

அழல்படு புகையொடி ழிச்சிய கைச்சிலை அடுசிலை பகழிதொ டுத்துவ லிப்பரே. 17

421 அடுசிலை பகழிதொ டுத்துவி டப்புகும் அளவினி லயமெதிர் விட்டவர் வெட்டின

உடல்சில இருதுணி பட்டன பட்டபின் ஒருதுணி கருதுமி லக்கைய ழிக்குமே. 18

422 ஒருதுணி கருதுமி லக்கைய ழித்தன உருவிய பிறைமுக வப்பக ழித்தலை

அரிதரி திதுவுமெ னப்பரி யுய்ப்பவர் அடியொடு முடிகள்து ணித்துவி ழுத்துமே. 19


குதிரை வீரரின் சிறப்பு

423 அடியொடு முடிகள்து ணித்துவி ழப்புகும் அளவரி தொடைசம ரத்தொட ணைத்தனர்

நெடியன சிலசர மப்படிப் பெற்றவர் நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவே. 20


424 நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவர் நெறியினை யொடியெறி கிற்பவ ரொத்தெதிர்

அறைகழல் விருதர்செ ருக்கற வெட்டலின் அவருட லிருவகிர் பட்டன முட்டவே. 21


கலிங்க வீரர் தடுத்தனர்

425 விடுத்த வீர ராயு தங்கள் மேல்வி ழாம லேநிரைத்

தெடுத்த வேலி போற்க லிங்கர் வட்ட ணங்க ளிட்டவே. 22


கேடகங்கள் துளைக்கப்பட்டன

426 இட்ட வட்ட ணங்கண் மேலெ றிந்த வேல்தி றந்தவாய்

வட்ட மிட்ட நீண்ம திற்கு வைத்த பூழை யொக்குமே. 23


வாளும் உலக்கையும்

427 கலக்க மற்ற வீரர் வாள்க லந்த சூரர் கைத்தலத்

துலக்கை யுச்சி தைத்தபோ துழுங்க லப்பை யொக்குமே. 24

துதிக்கையும் சக்கரமும்

428 மத்த யானை யின்க ரஞ்சு ருண்டு வீழ வன்சரந்

தைத்த போழ்தி னக்க ரங்கள் சக்க ரங்க ளொக்குமே. 25

வீழ்ந்த முத்துக்கள்

429 வெங்க ளிற்றின் மத்த கத்தின் வீழு முத்து வீரமா

மங்கை யர்க்கு மங்க லப்பொ ரிசொ ரிந்த தொக்குமே. 26


கேடகங்களுடன் வீரர்கள்

430 மறிந்த கேட கங்கி டப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர்

பறிந்த தேரின் நேமி யோடு பார்கி டப்ப தொக்குமே. 27


தண்டும் மழுவும்

431 களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடைக்

குளித்த போழ்து கைப்பி டித்த கூர்ம ழுக்க ளொக்குமே. 28


குறையுடல்களும் பேய்களும்

432 கவந்த மாட முன்பு தங்க ளிப்பொ டாடு பேயினம்

நிவந்த வாட லாட்டு விக்கும் நித்த கார ரொக்குமே. 29


ஒட்டகம் யானை குதிரை

433 ஒட்டகங்கள் யானை வாலு யர்த்தமா வழிந்த போர்

விட்ட கன்று போகி லாது மீள்வ போலு மீளுமே. 30


யானைகள் மேகங்களை ஒத்தன

434 பிறங்கு சோரி வாரி யிற்பி ளிற்றி வீழ்க ளிற்றினங்

கறங்கு வேலை நீரு ணக் கவிழ்ந்த மேக மொக்குமே. 31


வீரர் துருத்தியாளரை ஒத்தனர்

435 வாளில் வெட்டி வாரணக்கை தோளி லிட்ட மைந்தர் தாம்

தோளி லிட்டு நீர்வி டுந் துருத்தி யாள ரொப்பரே. 32


வில் வீரர் செயல் 436 நேர்முனையிற் றொடுத்த பகழிகள் நேர்வளைவிற் சுழற்று மளவினின்

மார்பிடையிற் குளித்த பகழியை வார்சிலையிற் றொடுத்து விடுவரே. 33


குதிரை வீரர் செயல் 437 அசையவுரத் தழுத்தி யிவுளியை அடுசவளத் தெடுத்த பொழுதவை

விசையமகட் கெடுத்த கொடியென விருதர்களத் தெடுத்து வருவரே. 34


தொடை அறுந்த வீரர் செயல்

438 இருதொடையற் றிருக்கு மறவர்கள் எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட

ஒருதொடையைச் சுழற்றி யெறிவர்கள் ஒருதொடையிட் டுவைப்ப ரெறியவே. 35


வாள் வீரர் மடிந்தனர்

439 இருவருரத் தினுற்ற சுரிகையின் எதிரெதிர்புக் கிழைக்கு மளவினில்

ஒருவரெனக் கிடைத்த பொழுதினில் உபயபலத் தெடுத்த தரவமே. 36


யானை வீரரோடு பொருநர்

440 பொருநர்கள் சிலர்தமு ரத்தி னிற்கவிழ் புகர்முக மிசையடி யிட்ட திற்பகை

விருதரை யரிவர்சி ரத்தை யச்சிரம் விழுபொழு தறையெனு மக்க ளிற்றையே. 37


படைக்கருவி இல்லாதவர் செயல்

441 விடுபடை பெறுகிலர் மற்றி னிச்சிலர் விரைபரி விழவெறி தற்கு முற்பட

அடுகரி நுதற்பட விட்ட கைப்படை அதனையொர் நொடிவரை யிற்ப றிப்பரே. 38


வீரர்கள் நாணினர்

442 அமர்புரி தமதக லத்தி டைக்கவிழ் அடுகரி நுதலில டிப்ப ரிக்களி

றெமதென விருகண்வி ழிக்க வுட்கினர் எனவிடு கிலர்படை ஞர்க்கு வெட்கியே. 39


கருணாகரன் போரில் ஈடுபட்டான்

443 அலகில் செருமுதிர் பொழுது வண்டையர் அரச னரசர்கள் நாதன் மந்திரி

உலகு புகழ்கரு ணாக ரன்றன தொருகை யிருபணை வேழ முந்தவே. 40


இருபடைகளும் வெற்றிகாண முற்படல்

444 உபய பலமும்வி டாது வெஞ்சமம் உடலு பொழுதினில் வாகை முன்கொள

அபயன் விடுபடை யேழ்க லிங்கமும் அடைய வொருமுக மாகி முந்தவே. 41


இருபுறப் படைகளும் அழிந்தன

445 அணிக ளொருமுக மாக வுந்தின அமர ரமரது காண முந்தினர்

துணிகள் படமத மாமு றிந்தன துரக நிரையொடு தேர்மு றிந்தவே. 42


காலாட் படையின் அழிவு

446 விருத ரிருதுணி பார்நி றைந்தன விடர்கள் தலைமலை யாய்நெ ளிந்தன

குருதி குரைகடல் போற்ப ரந்தன குடர்கள் குருதியின் மேன்மி தந்தவே. 43


களத்தில் பேரொலி

447 கரிகள் கருவிக ளோடு சிந்தின கழுகு நரியொடு காக முண்டன

திரைகள் திசைமலை யோட டர்ந்தன திமில குமிலமெ லாம்வி ளைந்தவே. 44


அனந்தவன்மன் தோற்று ஓடினான்

448 புரசை மதமலை யாயி ரங்கொடு பொருவ மெனவரு மேழ்க லிங்கர்தம்

அரச னுரைசெய்த வாண்மை யுங்கெட அமரி லெதிர்விழி யாதொ துங்கியே. 45

449 அறியு முழைகளி லோப துங்கிய தரிய பிலனிடை யோம றைந்தது

செறியு மடவியி லோக ரந்தது தெரிய வரியதெ னாவ டங்கவே. 46


கலிங்கர் நடுங்கினர்

450 எதுகொ லிதுவிது மாயை யொன்றுகொல் எரிகொன் மறலிகொ லூழி யின்கடை

அதுகொ லெனவல றாவி ழுந்தனர் அலதி குலதியொ டேழ்க லிங்கரே. 47


கலிங்கர் சிதைந்தோடினர்

451 வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்

இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் இருவ ரொருவழி போக லின்றியே. 48


452 ஒருவ ரொருவரி னோட முந்தினர் உடலி னிழலினை யோட வஞ்சினர்

அருவர் வருவரெ னாவி றைஞ்சினர் அபய மபயமெ னாந டுங்கியே. 49


குகைகளில் நுழைந்தனர்

453 மழைக ளதிர்வன போலு டன்றன வளவன் விடுபடை வேழ மென்றிருள்

முழைகள் நுழைவர்கள் போரி லின்றுநம் முதுகு செயுமுப கார மென்பரே. 50


கலிங்கம் இழந்த கலிங்கர்

454 ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்

ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே. 51


சோழர் யானை குதிரைகளைக் கைப்பற்றினர்

455 அப்படிக் கலிங்க ரோட அடர்த்தெறி சேனை வீரர்

கைப்படு களிறும் மாவுங் கணித்துரைப் பவர்கள் யாரே. 52


களிறுகளின் தன்மை

456 புண்டரு குருதி பாயப் பொழிதரு கடமும் பாய

வண்டொடும் பருந்தி னோடும் வளைப்புண்ட களிற நேகம். 53

457 ஒட்டறப் பட்ட போரி லூர்பவர் தம்மை வீசிக்

கட்டறுத் தவர்போல் நின்று கட்டுண்ட களிற நேகம். 54

458 வரைசில புலிக ளோடு வந்துகட் டுண்ட வேபோல்

அரைசருந் தாமுங் கட்டுண் டகப்பட்ட களிற நேகம். 55


சோழ வீரர்கள் கைப்பற்றியவை

459 நடைவ யப்பரி யிரத மொட்டகம் நவநி திக்குல மகளிரென்

றடைவ வப்பொழு தவர்கள் கைக்கொளும் அவைக ணிப்பது மருமையே. 56


கருணாகரன் கட்டளை இட்டான்

460 இவைக வர்ந்தபி னெழுக லிங்கர்தம் இறையை யுங்கொடு பெயர்துமென்

றவனி ருந்துழி யறிக வென்றனன் அபயன் மந்திரி முதல்வனே. 57


ஒற்றர்கள் தேடினர்

461 உரைகள் பிற்படு மளவி லொற்றர்கள் ஒலிக டற்படை கடிதுபோய்

வரைக ளிற்புடை தடவி யப்படி வனமி லைப்புரை தடவியே. 58


ஒற்றர்களின் பேச்சு

462 சுவடு பெற்றில மவனை மற்றொரு சுவடு பெற்றன மொருமலைக்

குவடு பற்றிய தவன டற்படை அதுகு ணிப்பரி தெனலுமே. 59


மலையை அடைந்தனர்

463 எக்குவடு மெக்கடலு மெந்தக் காடும் இனிக்கலிங்கர்க் கரணாவ தின்றே நாளும்

அக்குவடு மக்கடலும் வளைந்து வெய்யோன் அத்தமனக் குவடணையு மளவிற் சென்றே. 60


விடியளவும் வெற்பைக் காத்தனர்


464 தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார்போல

வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பதனை விடியளவுங் காத்து நின்றே. 61


மலை சிவந்தது

465 செம்மலையா யொளிபடைத்த தியாதோ வென்றுஞ்

செங்கதிரோ னுதயஞ்செய் துதய மென்னும்

அம்மலையோ விம்மலையு மென்னத் தெவ்வர்

அழிகுருதி நதிபரக்க வறுக்கும் போழ்தில். 62


சிலர் திகம்பரரானார்

466 வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை யேற்றி

வன்றூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி

அரைக்கலிங்க முரிப்புண்ட கலிங்க ரெல்லாம்

அமணரெனப் பிழைத்தாரு மநேக ராங்கே. 63


சிலர் வேதியரானார்

467 வேடத்தாற் குறையாது முந்நூ லாக

வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை

ஆடப்போந் தகப்பட்டேங் கரந்தோ மென்றே

அரிதனைவிட் டுயிர்பிழைத்தா ரநேக ராங்கே. 64


சிலர் புத்தத் துறவியரானார்


468 குறியாகக் குருதிகொடி யாடை யாகக்

கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்

தறியீரோ சாக்கியரை யுடைகண் டாலென்

அப்புறமென் றியம்பிடுவ ரநேக ராங்கே. 65


சிலர் பாணர் ஆனார்


469 சேனைமடி களங்கண்டேந் திகைத்து நின்றேம்

தெலுங்கரே மென்றுசில கலிங்கர் தங்கள்

ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்

டடிப்பாண ரெனப்பிழைத்தா ரநேக ராங்கே. 66


கலிங்க வீரர் முற்றும் அழிந்தனர்

470 இவர்கண்மே லினியொருவர் பிழைத்தா ரில்லை

எழுகலிங்கத் தோவியர்க ளெழுதி வைத்த

சுவர்கண்மே லுடலன்றி யுடல்க ளெங்குந்

தொடர்ந்துபிடித் தறுத்தார்முன் னடைய வாங்கே. 67


அடி சூடினான் தொண்டைமான்

471 கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்

கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்

சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்

சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே. 68

தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்