2.1 கிளவியாக்கம்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > சொல்லதிகாரம்
- உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
- அஃறிணை என்மனார் அவர் அல பிறவே
- ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே. 1
- ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல்
- பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
- அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே. 2
- ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று
- ஆயிரு பாற்சொல் அஃறிணையவ்வே. 3
- பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
- ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்
- தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்
- இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே
- உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும். 4
- னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல். 5
- ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல். 6
- ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
- மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
- நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே. 7
- ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த
- குன்றியலுகரத்து இறுதி ஆகும். 8
- அ ஆ வ என வரூஉம் இறுதி
- அப் பால் மூன்றே பல அறி சொல்லே. -9
- இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய
- ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்
- தோற்றம்தாமே வினையொடு வருமே. 10
- வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்
- பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்
- மயங்கல் கூடா தம் மரபினவே. 11
- ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி
- ஆண்மை அறி சொற்கு ஆகு இடன் இன்றே. 12
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல். 13
- வினாவும் செப்பே வினா எதிர் வரினே. 14
- செப்பே வழீஇயினும் வரை நிலை இன்றே
- அப் பொருள் புணர்ந்த கிளவியான. 15
- செப்பினும் வினாவினும் சினை முதல் கிளவிக்கு
- அப் பொருள் ஆகும் உறழ் துணைப் பொருளே. 16
- தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
- பகுதிக் கிளவி வரை நிலை இலவே. 17
- இனச் சுட்டு இல்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை
- வழக்கு ஆறு அல்ல செய்யுள் ஆறே. 18
- இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல். 19
- செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல். 20
- ஆக்கம்தானே காரணம் முதற்றே. 21
- ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்
- போக்கு இன்று என்ப வழக்கினுள்ளே. 22
- பால் மயக்கு உற்ற ஐயக் கிளவி
- தான் அறி பொருள்வயின் பன்மை கூறல். 23
- உருபு என மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
- இரு வீற்றும் உரித்தே சுட்டும் காலை. 24
- தன்மை சுட்டலும் உரித்து என மொழிப
- அன்மைக் கிளவி வேறு இடத்தான. 25
- அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை
- நடை பெற்று இயலும் வண்ணச் சினைச் சொல். 26
- ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
- ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
- வழக்கின் ஆகிய உயர் சொல் கிளவி
- இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல. 27
- செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
- நிலை பெறத் தோன்றும் அந் நாற் சொல்லும்
- தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
- அம் மூ இடத்தும் உரிய என்ப. 28
- அவற்றுள்,
- தரு சொல் வரு சொல் ஆயிரு கிளவியும்
- தன்மை முன்னிலை ஆயீர் இடத்த. 29
- ஏனை இரண்டும் ஏனை இடத்த. 30
- யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்
- அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும். 31
- அவற்றுள்,
- யாது என வரூஉம் வினாவின் கிளவி
- அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத்
- தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே. 32
- இனைத்து என அறிந்த சினை முதல் கிளவிக்கு
- வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். 33
- மன்னாப் பொருளும் அன்ன இயற்றே. 34
- எப் பொருள் ஆயினும் அல்லது இல் எனின்
- அப் பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறல். 35
- அப் பொருள் கூறின் சுட்டிக் கூறல். 36
- பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் ஆயினும்
- பொருள் வேறுபடாஅது ஒன்று ஆகும்மே. 37
- இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
- வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்
- சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
- இயற்பெயர் வழிய என்மனார் புலவர். 38
- முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே. 39
- சுட்டு முதல் ஆகிய காரணக் கிளவியும்
- சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும். 40
- சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
- இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். 41
- ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி
- தொழில் வேறு கிளப்பின் ஒன்று இடன் இலவே. 42
- தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி என்று
- எண்ணு வழி மருங்கின் விரவுதல் வரையார். 43
- ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற்சொல்
- ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது. 44
- வியங்கோள் எண்ணுப்பெயர் திணை விரவு வரையார். 45
- வேறு வினைப் பொதுச் சொல் ஒரு வினை கிளவார். 46
- எண்ணுங்காலும் அது அதன் மரபே. 47
- இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா. 48
- ஒரு பெயர்ப் பொதுச் சொல் உள் பொருள் ஒழியத்
- தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
- உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும். 49
- பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்
- மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. 50
- பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர்
- அஃறிணை முடிபின செய்யுளுள்ளே. 51
- வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்
- வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல் என்று
- ஆயிரு வகைய பல பொருள் ஒரு சொல். 52
- அவற்றுள்,
- வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்
- வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்
- தேறத் தோன்றும் பொருள் தெரி நிலையே. 53
- ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும். 54
- வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல்
- நினையும் காலை கிளந்தாங்கு இயலும். 55
- குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி. 56
- குடிமை ஆண்மை இளமை மூப்பே
- அடிமை வன்மை விருந்தே குழுவே
- பெண்மை அரசே மகவே குழவி
- தன்மை திரி பெயர் உறுப்பின் கிளவி
- காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று
- ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ
- அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
- முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
- உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்
- அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும். 57
- காலம் உலகம் உயிரே உடம்பே
- பால் வரை தெய்வம் வினையே பூதம்
- ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்
- ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன
- ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
- பால் பிரிந்து இசையா உயர்திணை மேன. 58
- நின்றாங்கு இசைத்தல் இவண் இயல்பு இன்றே. 59
- இசைத்தலும் உரிய வேறிடத்தான. 60
- எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்தே. 61
- கண்ணும் தோளும் முலையும் பிறவும்
- பன்மை சுட்டிய சினை நிலைக் கிளவி
- பன்மை கூறும் கடப்பாடு இலவே
- தம் வினைக்கு இயலும் எழுத்து அலங்கடையே. 62