2.2 வேற்றுமையியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > சொல்லதிகாரம்
- வேற்றுமைதாமே ஏழ் என மொழிப. 1
- விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே. 2
- அவைதாம்,
- பெயர் ஐ ஒடு கு
- இன் அது கண் விளி என்னும் ஈற்ற. 3
- அவற்றுள்,
- எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே. 4
- பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
- வினை நிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
- பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று
- அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே. 5
- பெயரின் ஆகிய தொகையுமார் உளவே
- அவ்வும் உரிய அப்பாலான. 6
- எவ் வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி
- அவ் இயல் நிலையல் செவ்விது என்ப. 7
- கூறிய முறையின் உருபு நிலை திரியாது
- ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப. 8
- பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா
- தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே. 9
- இரண்டாகுவதே,
- ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
- எவ் வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
- அவ் இரு முதலின் தோன்றும் அதுவே. 10
- காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
- ஒப்பின் புகழின் பழியின் என்றா
- பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
- செறலின் உவத்தலின் கற்பின் என்றா
- அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்
- நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
- ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
- நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா
- அன்ன பிறவும் அம் முதற் பொருள
- என்ன கிளவியும் அதன் பால என்மனார். 11
- மூன்றாகுவதே,
- ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
- வினைமுதல் கருவி அனை முதற்று அதுவே. 12
- அதனின் இயறல் அதன் தகு கிளவி
- அதன் வினைப்படுதல் அதனின் ஆதல்
- அதனின் கோடல் அதனொடு மயங்கல்
- அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி
- அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி
- அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை
- இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம்
- அன்ன பிறவும் அதன் பால என்மனார். 13
- நான்காகுவதே,
- கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
- எப் பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே. 14
- அதற்கு வினை உடைமையின் அதற்கு உடம்படுதலின்
- அதற்குப் படு பொருளின் அது ஆகு கிளவியின்
- அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின்
- நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று
- அப் பொருட் கிளவியும் அதன் பால என்மனார். 15
- ஐந்தாகுவதே,
- இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
- இதனின் இற்று இது என்னும் அதுவே. 16
- வண்ணம் வடிவே அளவே சுவையே
- தண்மை வெம்மை அச்சம் என்றா
- நன்மை தீமை சிறுமை பெருமை
- வன்மை மென்மை கடுமை என்றா
- முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
- புதுமை பழமை ஆக்கம் என்றா
- இன்மை உடைமை நாற்றம் தீர்தல்
- பன்மை சின்மை பற்று விடுதல் என்று
- அன்ன பிறவும் அதன் பால என்மனார். 17
- ஆறாகுவதே,
- அது எனப் பெரிய வேற்றுமைக் கிளவி
- தன்னினும் பிறிதினும் இதனது இது எனும்
- அன்ன கிளவிக் கிழமைத்து அதுவே. 18
- இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
- செயற்கையின் முதுமையின் வினையின் என்றா
- கருவியின் துணையின் கலத்தின் முதலின்
- ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா
- தெரிந்து மொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
- திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன
- கூறிய மருங்கின் தோன்றும் கிளவி
- ஆறன் பால என்மனார் புலவர். 19
- ஏழாகுவதே,
- கண் எனப் பெயரிய வேற்றுமை கிளவி
- வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
- அனை வகைக் குறிப்பின் தோன்றும் அதுவே. 20
- கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல்
- பின் சார் அயல் புடை தேவகை எனாஅ
- முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ
- அன்ன பிறவும் அதன் பால என்மனார். 21
- வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை
- ஈற்று நின்று இயலும் தொகைவயின் பிரிந்து
- பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்
- எல்லாச் சொல்லும் உரிய என்ப. 22