2.3 வேற்றுமை மயங்கியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > சொல்லதிகாரம்
- கருமம் அல்லாச் சார்பு என் கிளவிக்கு
- உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை. 1
- சினை நிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும்
- வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர். 2
- கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. 3
- முதற்சினைக் கிளவிக்கு அது என் வேற்றுமை
- முதற்கண் வரினே சினைக்கு ஐ வருமே. 4
- முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை
- சினை முன் வருதல் தெள்ளிது என்ப. 5
- முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ
- நுவலும் காலை சொற்குறிப்பினவே. 6
- பிண்டப் பெயரும் ஆயியல் திரியா
- பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே. 7
- ஒரு வினை ஒடுச் சொல் உயர்பின் வழித்தே. 8
- மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
- ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
- நோக்கு ஓரனைய என்மனார் புலவர். 9
- இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அவ்
- இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும். 10
- அது என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
- அது என் உருபு கெட குகரம் வருமே. 11
- தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
- கடி நிலை இலவே பொருள்வயினான. 12
- ஈற்றுப் பெயர் முன்னர் மெய் அறி பனுவலின்
- வேற்றுமை தெரிப உணருமோரே. 13
- ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும்
- தாம் பிரிவு இலவே தொகை வரு காலை. 14
- ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
- ஏழும் ஆகும் உறை நிலத்தான. 15
- குத் தொக வரூஉம் கொடை எதிர் கிளவி
- அப் பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும், 16
- அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்
- எச்சம் இலவே பொருள்வயினான. 17
- அன்ன பிறவும் தொல் நெறி பிழையாது
- உருபினும் பொருளினும் மெய் தடுமாறி
- இரு வயின் நிலையும் வேற்றுமை எல்லாம்
- திரிபு இடன் இலவே தெரியுமோர்க்கே. 18
- உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி
- ஒரு சொல் நடைய பொருள் செல் மருங்கே. 19
- இறுதியும் இடையும் எல்லா உருபும்
- நெறி படு பொருள்வயின் நிலவுதல் வரையார். 20
- பிறிது பிறிது ஏற்றலும் உருபு தொக வருதலும்
- நெறிபட வழங்கிய வழி மருங்கு என்ப. 21
- ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்
- மெய் உருபு தொகாஅ இறுதியான. 22
- யாதன் உருபின் கூறிற்று ஆயினும்
- பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும். 23
- எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின்
- பொருள் நிலை திரியா வேற்றுமைச் சொல்லே. 24
- கு ஐ ஆன் என வரூஉம் இறுதி
- அவ்வொடு சிவணும் செய்யுளுள்ளே. 25
- அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்
- குவ்வும் ஐயும் இல் என மொழிப. 26
- இதனது இது இற்று என்னும் கிளவியும்
- அதனைக் கொள்ளும் பொருள்வயினானும்
- அதனான் செயற்படற்கு ஒத்த கிளவியும்
- முறை கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும்
- பால் வரை கிளவியும் பண்பின் ஆக்கமும்
- காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்
- பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழிக் கிளவியும்
- அன்ன பிறவும் நான்கன் உருபின்
- தொல் நெறி மரபின தோன்றல் ஆறே. 27
- ஏனை உருபும் அன்ன மரபின
- மானம் இலவே சொல் முறையான. 28
- வினையே செய்வது செயப்படுபொருளே
- நிலனே காலம் கருவி என்றா
- இன்னதற்கு இது பயன் ஆக என்னும்
- அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ
- ஆயெட்டு என்ப தொழில் முதனிலையே. 29
- அவைதாம்,
- வழங்கு இயல் மருங்கின் குன்றுவ குன்றும். 30
- முதலின் கூறும் சினை அறி கிளவியும்
- சினையின் கூறும் முதல் அறி கிளவியும்
- பிறந்தவழிக் கூறலும் பண்பு கொள் பெயரும்
- இயன்றது மொழிதலும் இருபெயரொட்டும்
- வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ
- அனை மரபினவே ஆகுபெயர்க் கிளவி. 31
- அவைதாம்,
- தம்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்
- ஒப்பு இல் வழியான் பிறிது பொருள் சுட்டலும்
- அப் பண்பினவே நுவலும் காலை. 32
- வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 33
- அளவு நிறையும் அவற்றொடு கொள்வழி
- உள என மொழிப உணர்ந்திசினோரே. 34
- கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்
- கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே. 35