2.5 பெயரியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > சொல்லதிகாரம்
- எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. 1
- பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
- சொல்லின் ஆகும் என்மனார் புலவர். 2
- தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
- இரு பாற்று என்ப பொருண்மை நிலையே. 3
- சொல் எனப்படுப பெயரே வினை என்று
- ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே. 4
- இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
- அவற்று வழி மருங்கின் தோன்றும் என்ப. 5
- அவற்றுள்,
- பெயர் எனப்படுபவை தெரியும் காலை
- உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
- ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
- அம் மூ உருபின தோன்றல் ஆறே. 6
- இரு திணைப் பிரிந்த ஐம் பால் கிளவிக்கும்
- உரியவை உரிய பெயர்வயினான. 7
- அவ்வழி,
- அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும்
- அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்
- அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்
- யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்
- யாவன் யாவள் யாவர் என்னும்
- ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
- பால் அறி வந்த உயர்திணைப் பெயரே. 8
- ஆண்மை அடுத்த மகன் என் கிளவியும்
- பெண்மை அடுத்த மகள் என் கிளவியும்
- பெண்மை அடுத்த இகர இறுதியும்
- நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்
- முறைமை சுட்டா மகனும் மகளும்
- மாந்தர் மக்கள் என்னும் பெயரும்
- ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும்
- சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும்
- அவை முதல் ஆகிய பெண்டு என் கிளவியும்
- ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ
- அப் பதினைந்தும் அவற்று ஓரன்ன. 9
- எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
- எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
- பெண்மை அடுத்த மகன் என் கிளவியும்
- அன்ன இயல என்மனார் புலவர். 10
- நிலப் பெயர் குடிப் பெயர் குழுவின் பெயரே
- வினைப் பெயர் உடைப் பெயர் பண்பு கொள் பெயரே
- பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயரே
- பல்லோர்க் குறித்த சினை நிலைப் பெயரே
- பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயரே
- கூடி வரு வழக்கின் ஆடு இயற் பெயரே
- இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரொடு
- அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே. 11
- அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
- பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
- என்ன பெயரும் அத் திணையவ்வே. 12
- அது இது உது என வரூஉம் பெயரும்
- அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்
- அவை இவை உவை என வரூஉம் பெயரும்
- அவை முதல் ஆகிய வகரப் பெயரும்
- யாது யா யாவை என்னும் பெயரும்
- ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
- பால் அறி வந்த அஃறிணைப் பெயரே. 13
- பல்ல பல சில என்னும் பெயரும்
- உள்ள இல்ல என்னும் பெயரும்
- வினைப் பெயர்க் கிளவியும் பண்பு கொள் பெயரும்
- இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்
- ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட
- அப் பால் ஒன்பதும் அவற்று ஓரன்ன. 14
- கள்ளொடு சிவணும் அவ் இயற்பெயரே
- கொள் வழி உடைய பல அறி சொற்கே. 15
- அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்
- பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
- என்ன பெயரும் அத் திணையவ்வே. 16
- தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
- ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. 17
- இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்
- திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்
- நினையும் காலை தம்தம் மரபின்
- வினையொடு அல்லது பால் தெரிபு இலவே. 18
- நிக ழூஉ நின்ற பலர் வரை கிளவியின்
- உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே
- அன்ன மரபின் வினைவயினான. 19
- இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயரே
- முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
- எல்லாம் நீயிர் நீ எனக் கிளந்து
- சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு
- அன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே. 20
- அவற்றுள்,
- நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
- நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே
- முறைப்பெயர்க் கிளவி இரண்டு ஆகும்மே
- ஏனைப் பெயரே தம்தம் மரபின. 21
- அவைதாம்,
- பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
- பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று
- அந் நான்கு என்ப இயற்பெயர் நிலையே. 22
- பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
- பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் என்று
- அந் நான்கு என்ப சினைப்பெயர் நிலையே. 23
- பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே
- ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரே
- பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே
- ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் என்று
- அந் நான்கு என்ப சினைமுதற்பெயரே. 24
- பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று
- ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே. 25
- பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
- ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. 26
- ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
- ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. 27
- பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
- ஒன்றே பலவே ஒருவர் என்னும்
- என்று இப் பாற்கும் ஓரன்னவ்வே. 28
- ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
- ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. 29
- தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே. 30
- தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 31
- எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
- பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே 32
- தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது
- உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை. 33
- நீயிர் நீ என வரூஉம் கிளவி
- பால் தெரிபு இலவே உடன் மொழிப் பொருள. 34
- அவற்றுள்,
- நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 35
- ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே. 36
- ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
- இரு பாற்கும் உரித்தே தெரியும் காலை. 37
- தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும். 38
- இன்ன பெயரே இவை எனல் வேண்டின்
- முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல். 39
- மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி
- மகடூஉ இயற்கை தொழில்வயினான. 40
- ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே
- ஆயிடன் அறிதல் செய்யுளுள்ளே. 41
- இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
- இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா
- நிலத்துவழி மருங்கின் தோன்றலான. 42
- திணையொடு பழகிய பெயர் அலங்கடையே. 43