2.6 வினையியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > சொல்லதிகாரம்
- வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
- நினையும் காலை காலமொடு தோன்றும். 1
- காலம்தாமே மூன்று என மொழிப. 2
- இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
- அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
- மெய்ந் நிலை உடைய தோன்றலாறே. 3
- குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
- காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
- உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
- ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
- அம் மூ உருபின தோன்றலாறே. 4
- அவைதாம்,
- அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும்
- உம்மொடு வரூஉம் க ட த ற என்னும்
- அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்
- பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே. 5
- க ட த ற என்னும்
- அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு
- ஏன் அல் என வரூஉம் ஏழும்
- தன் வினை உரைக்கும் தன்மைச் சொல்லே. 6
- அவற்றுள்,
- செய்கு என் கிளவி வினையொடு முடியினும்
- அவ் இயல் திரியாது என்மனார் புலவர். 7
- அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்
- ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. 8
- அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்
- பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. 9
- மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
- காலக் கிளவியொடு முடியும் என்ப. 10
- பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
- அந் நால் ஐந்தும் மூன்று தலை இட்ட
- முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே. 11
- அவற்றுள்,
- பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி
- எண் இயல் மருங்கின் திரிபவை உளவே. 12
- யாஅர் என்னும் வினாவின் கிளவி
- அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே. 13
- பால் அறி மரபின் அம் மூ ஈற்றும்
- ஆ ஓ ஆகும் செய்யுளுள்ளே. 14
- ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும். 15
- அதுச் சொல் வேற்றுமை உடைமையானும்
- கண் என் வேற்றுமை நிலத்தினானும்
- ஒப்பினானும் பண்பினானும் என்று
- அப் பால் காலம் குறிப்பொடு தோன்றும். 16
- அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
- அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
- என்ன கிளவியும் குறிப்பே காலம். 17
- பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
- அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
- காலக் கிளவி உயர்திணை மருங்கின்
- மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே. 18
- அ ஆ வ என வரூஉம் இறுதி
- அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை. 19
- ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த
- குன்றியலுகரத்து இறுதி ஆகும். 20
- பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
- அம் மூ இரண்டும் அஃறிணையவ்வே. 21
- அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும்
- ஒக்கும் என்ப எவன் என் வினாவே. 22
- இன்று இல உடைய என்னும் கிளவியும்
- அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும்
- பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும்
- பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்
- ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ
- அப் பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும். 23
- பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
- அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
- காலக் கிளவி அஃறிணை மருங்கின்
- மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே. 24
- முன்னிலை வியங்கோள் வினையெஞ்சுகிளவி
- இன்மை செப்பல் வேறு என் கிளவி
- செய்ம்மன செய்யும் செய்த என்னும்
- அம் முறை நின்ற ஆயெண் கிளவியும்
- திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி
- இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய. 25
- அவற்றுள்,
- முன்னிலைக் கிளவி
- இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும்
- ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். 26
- இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும்
- பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
- சொல் ஓரனைய என்மனார் புலவர். 27
- எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
- ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே. 28
- அவற்றுள்,
- முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு
- மன்னாது ஆகும் வியங்கோட் கிளவி. 29
- பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
- அவ் வயின் மூன்றும் நிகழும் காலத்துச்
- செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா. 30
- செய்து செய்யூ செய்பு செய்தென
- செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என
- அவ் வகை ஒன்பதும் வினையெஞ்சுகிளவி. 31
- பின் முன் கால் கடை வழி இடத்து என்னும்
- அன்ன மரபின் காலம் கண்ணிய
- என்ன கிளவியும் அவற்று இயல்பினவே. 32
- அவற்றுள்,
- முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின. 33
- அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின்
- சினையொடு முடியா முதலொடு முடியினும்
- வினை ஓரனைய என்மனார் புலவர். 34
- ஏனை எச்சம் வினைமுதலானும்
- ஆன் வந்து இயையும் வினைநிலையானும்
- தாம் இயல் மருங்கின் முடியும் என்ப. 35
- பல் முறையானும் வினையெஞ்சுகிளவி
- சொல் முறை முடியாது அடுக்குந வரினும்
- முன்னது முடிய முடியுமன் பொருளே. 36
- நிலனும் பொருளும் காலமும் கருவியும்
- வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
- அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய
- செய்யும் செய்த என்னும் சொல்லே. 37
- அவற்றொடு வரு வழி செய்யும் என் கிளவி
- முதற்கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே. 38
- பெயரெஞ்சுகிளவியும் வினையெஞ்சுகிளவியும்
- எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா. 39
- தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்
- எச் சொல் ஆயினும் இடைநிலை வரையார். 40
- அவற்றுள்,
- செய்யும் என்னும் பெயரெஞ்சுகிளவிக்கு
- மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்
- அவ் இடன் அறிதல் என்மனார் புலவர். 41
- செய்து என் எச்சத்து இறந்த காலம்
- எய்து இடன் உடைத்தே வாராக் காலம். 42
- முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
- எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து
- மெய்ந் நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும். 43
- வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
- ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
- இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
- விரைந்த பொருள என்மனார் புலவர். 44
- மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி
- அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி
- செய்வது இல் வழி நிகழும் காலத்து
- மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே. 45
- இது செயல் வேண்டும் என்னும் கிளவி
- இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே
- தன் பாலானும் பிறன் பாலானும். 46
- வன்புற வரூஉம் வினா உடை வினைச்சொல்
- எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே. 47
- வாராக் காலத்து வினைச்சொல் கிளவி
- இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
- இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை. 48
- செயப்படுபொருளைச் செய்தது போலத்
- தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே. 49
- இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
- சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. 50
- ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். 51