2.8 உரியியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > சொல்லதிகாரம்
- உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை
- இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி
- பெயரினும் வினையினும் மெய் தடுமாறி
- ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும்
- பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்
- பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி
- தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின்
- எச் சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல். 1
- வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
- வெளிப்பட வாரா உரிச்சொல் மேன. 2
- அவைதாம்,
- உறு தவ நனி என வரூஉம் மூன்றும்
- மிகுதி செய்யும் பொருள என்ப. 3
- உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும். 4
- குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே. 5
- சல்லல் இன்னல் இன்னாமையே. 6
- மல்லல் வளனே ஏ பெற்று ஆகும். 7
- உகப்பே உயர்தல் உவப்பே உவகை. 8
- பயப்பே பயன் ஆம். 9
- பசப்பு நிறன் ஆகும். 10
- இயைபே புணர்ச்சி. 11
- இசைப்பு இசை ஆகும். 12
- அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி. 13
- மழவும் குழவும் இளமைப் பொருள. 14
- சீர்த்தி மிகு புகழ் மாலை இயல்பே. 15
- கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும். 16
- கதழ்வும் துனைவும் விரைவின் பொருள. 17
- அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும். 18
- வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
- நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள. 19
- தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும். 20
- கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. 21
- தடவும் கயவும் நளியும் பெருமை. 22
- அவற்றுள்,
- தட என் கிளவி கோட்டமும் செய்யும். 23
- கய என் கிளவி மென்மையும் செய்யும். 24
- நளி என் கிளவி செறிவும் ஆகும். 25
- பழுது பயம் இன்றே. 26
- சாயல் மென்மை. 27
- முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே. 28
- வம்பு நிலை இன்மை. 29
- மாதர் காதல். 30
- நம்பும் மேவும் நசை ஆகும்மே. 31
- ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
- ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். 32
- புலம்பே தனிமை. 33
- துவன்று நிறைவு ஆகும். 34
- முரஞ்சல் முதிர்வே. 35
- வெம்மை வேண்டல். 36
- பொற்பே பொலிவு. 37
- வறிது சிறிது ஆகும். 38
- எற்றம் நினைவும் துணிவும் ஆகும். 39
- பிணையும் பேணும் பெட்பின் பொருள. 40
- பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும். 41
- படரே உள்ளல் செலவும் ஆகும். 42
- பையுளும் சிறுமையும் நோயின் பொருள. 43
- எய்யாமையே அறியாமையே. 44
- நன்று பெரிது ஆகும். 45
- தாவே வலியும் வருத்தமும் ஆகும் 46
- தெவுக் கொளல் பொருட்டே. 47
- தெவ்வுப் பகை ஆகும். 48
- விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே. 49
- அவற்றுள்,
- விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும். 50
- கம்பலை சும்மை கலியே அழுங்கல்
- என்று இவை நான்கும் அரவப் பொருள. 51
- அவற்றுள்,
- அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும். 52
- கழும் என் கிளவி மயக்கம் செய்யும். 53
- செழுமை வளனும் கொழுப்பும் ஆகும். 54
- விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும். 55
- கருவி தொகுதி. 56
- கம நிறைந்து இயலும். 57
- அரியே ஐம்மை. 58
- கவவு அகத்திடுமே. 59
- துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
- இசைப் பொருட் கிளவி என்மனார் புலவர். 60
- அவற்றுள்,
- இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும். 61
- இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை. 62
- ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள. 63
- கவர்வு விருப்பு ஆகும். 64
- சேரே திரட்சி. 65
- வியல் என் கிளவி அகலப் பொருட்டே. 66
- பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி
- ஆ முறை மூன்றும் அச்சப் பொருள. 67
- வய வலி ஆகும். 68
- வாள் ஒளி ஆகும். 69
- துய என் கிளவி அறிவின் திரிபே. 70
- உயாவே உயங்கல். 71
- உசாவே சூழ்ச்சி. 72
- வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம். 73
- கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள. 74
- நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப. 75
- நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை. 76
- புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே. 77
- நனவே களனும் அகலமும் செய்யும். 78
- மதவே மடனும் வலியும் ஆகும். 79
- மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. 80
- புதிதுபடல் பொருட்டே யாணர்க் கிளவி. 81
- அமர்தல் மேவல். 82
- யாணுக் கவின் ஆம். 83
- பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. 84
- கடி என் கிளவி
- வரைவே கூர்மை காப்பே புதுமை
- விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
- அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும்
- மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே. 85
- ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே. 86
- ஐ வியப்பு ஆகும். 87
- முனைவு முனிவு ஆகும். 88
- வையே கூர்மை. 89
- எறுழ் வலி ஆகும். 90
- மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
- முன்னும் பின்னும் வருபவை நாடி
- ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல்
- தம்தம் மரபின் தோன்றும்மன் பொருளே. 91
- கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல
- வேறு பிற தோன்றினும் அவற்றொடு கொளலே. 92
- பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே 93
- பொருட்குத் திரிபு இல்லை உணர்த்த வல்லின். 94
- உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. 95
- மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. 96
- எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே 97
- அன்ன பிறவும் கிளந்த அல்ல
- பல் முறையானும் பரந்தன வரூஉம்
- உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட
- இயன்ற மருங்கின் இனைத்து என அறியும்
- வரம்பு தமக்கு இன்மையின் வழி நனி கடைப்பிடித்து
- ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான்
- பாங்குற உணர்தல் என்மனார் புலவர். 98