2.9 எச்சவியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > சொல்லதிகாரம்
- இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
- அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. 1
- அவற்றுள்,
- இயற்சொல்தாமே
- செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி
- தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே. 2
- ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும்
- வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
- இரு பாற்று என்ப திரிசொல் கிளவி. 3
- செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
- தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி. 4
- வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
- எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. 5
- சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். 6
- அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை
- வலிக்கும் வழி வலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும்
- விரிக்கும் வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும்
- நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும்
- நாட்டல் வலிய என்மனார் புலவர். 7
- நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
- அவை நான்கு என்ப மொழி புணர் இயல்பே. 8
- அவற்றுள்,
- நிரல்நிறைதானே
- வினையினும் பெயரினும் நினையத் தோன்றி
- சொல் வேறு நிலைஇ பொருள் வேறு நிலையல். 9
- சுண்ணம்தானே
- பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர்
- ஒட்டு வழி அறிந்து துணித்தனர் இயற்றல். 10
- அடிமறிச் செய்தி அடி நிலை திரிந்து
- சீர் நிலை திரியாது தடுமாறும்மே. 11
- பொருள் தெரி மருங்கின்
- ஈற்று அடி இறு சீர் எருத்துவயின் திரியும்
- தோற்றமும் வரையார் அடிமறியான. 12
- மொழிமாற்று இயற்கை
- சொல் நிலை மாற்றி பொருள் எதிர் இயைய
- முன்னும் பின்னும் கொள் வழிக் கொளாஅல். 13
- த ந நு எ எனும் அவை முதல் ஆகிய
- கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. 14
- இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல் என்று
- அவை மூன்று என்ப ஒரு சொல் அடுக்கே. 15
- வேற்றுமைத்தொகையே உவமத்தொகையே
- வினையின்தொகையே பண்பின்தொகையே
- உம்மைத்தொகையே அன்மொழித்தொகை என்று
- அவ் ஆறு என்ப தொகைமொழி நிலையே. 16
- அவற்றுள்,
- வேற்றுமைத்தொகையே வேற்றுமை இயல. 17
- உவமத்தொகையே உவம இயல. 18
- வினையின்தொகுதி காலத்து இயலும். 19
- வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் என்று
- அன்ன பிறவும் அதன் குணம் நுதலி
- இன்னது இது என வரூஉம் இயற்கை
- என்ன கிளவியும் பண்பின்தொகையே. 20
- இரு பெயர் பல பெயர் அளவின்பெயரே
- எண்ணியற்பெயரே நிறைப்பெயர்க் கிளவி
- எண்ணின்பெயரொடு அவ் அறு கிளவியும்
- கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே. 21
- பண்பு தொக வரூஉம் கிளவியானும்
- உம்மை தொக்க பெயர்வயினானும்
- வேற்றுமை தொக்க பெயர்வயினானும்
- ஈற்று நின்று இயலும் அன்மொழித்தொகையே. 22
- அவைதாம்,
- முன் மொழி நிலையலும் பின் மொழி நிலையலும்
- இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்
- அம் மொழி நிலையாது அல் மொழி நிலையலும்
- அந் நான்கு என்ப பொருள் நிலை மரபே. 23
- எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய. 24
- உயர்திணை மருங்கின் உம்மைத்தொகையே
- பலர்சொல் நடைத்து என மொழிமனார் புலவர். 25
- வாரா மரபின வரக் கூறுதலும்
- என்னா மரபின எனக் கூறுதலும்
- அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயல்பான்
- இன்ன என்னும் குறிப்புரை ஆகும். 26
- இசைப் படு பொருளே நான்கு வரம்பு ஆகும். 27
- விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும். 28
- கண்டீர் என்றா கொண்டீர் என்றா
- சென்றது என்றா போயிற்று என்றா
- அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி
- நின்ற வழி அசைக்கும் கிளவி என்ப. 29
- கேட்டை என்றா நின்றை என்றா
- காத்தை என்றா கண்டை என்றா
- அன்றி அனைத்தும் முன்னிலை அல் வழி
- முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே. 30
- இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற
- சிறப்புடை மரபின் அம் முக் காலமும்
- தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
- அம் மூ இடத்தான் வினையினும் குறிப்பினும்
- மெய்ம்மையானும் இவ் இரண்டு ஆகும்
- அவ் ஆறு என்ப முற்று இயல் மொழியே. 31
- எவ் வயின் வினையும் அவ் இயல் நிலையும். 32
- அவைதாம்,
- தம்தம் கிளவி அடுக்குந வரினும்
- எத் திறத்தானும் பெயர் முடிபினவே. 33
- பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
- எதிர்மறை உம்மை எனவே சொல்லே
- குறிப்பே இசையே ஆயீர் ஐந்தும்
- நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி. 34
- அவற்றுள்,
- பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின. 35
- வினையெஞ்சுகிளவிக்கு வினையும் குறிப்பும்
- நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே
- ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே. 36
- பெயரெஞ்சுகிளவி பெயரொடு முடிமே. 37
- ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. 38
- எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின. 39
- உம்மை எச்சம் இரு ஈற்றானும்
- தன் வினை ஒன்றிய முடிபு ஆகும்மே. 40
- தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை
- நிகழும் காலமொடு வாராக் காலமும்
- இறந்த காலமொடு வாராக் காலமும்
- மயங்குதல் வரையார் முறைநிலையான. 41
- என என் எச்சம் வினையொடு முடிமே. 42
- எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும்
- எஞ்சு பொருட் கிளவி இல என மொழிப. 43
- அவைதாம்,
- தம்தம் குறிப்பின் எச்சம் செப்பும். 44
- சொல் என் எச்சம் முன்னும் பின்னும்
- சொல் அளவு அல்லது எஞ்சுதல் இன்றே. 45
- அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். 46
- மறைக்கும் காலை மரீஇயது ஒராஅல். 47
- ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
- இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 48
- அவற்றுள்,
- ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 49
- தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 50
- கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 51
- கொடு என் கிளவி படர்க்கை ஆயினும்
- தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பின்
- தன்னிடத்து இயலும் என்மனார் புலவர். 52
- பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும்
- திசைநிலை கிளவியின் ஆஅகுநவும்
- தொல் நெறி மொழிவயின் ஆஅகுநவும்
- மெய்ந் நிலை மயக்கின் ஆஅகுநவும்
- மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்
- அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே. 53
- செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
- செய் என் கிளவி ஆகு இடன் உடைத்தே. 54
- முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
- அந் நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே. 55
- கடி சொல் இல்லை காலத்துப் படினே. 56
- குறைச்சொற் கிளவி குறைக்கும் வழி அறிதல். 57
- குறைத்தன ஆயினும் நிறைப் பெயர் இயல. 58
- இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே. 59
- உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய. 60
- வினையெஞ்சுகிளவியும் வேறு பல் குறிய. 61
- உரையிடத்து இயலும் உடனிலை அறிதல். 62
- முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே
- இன்ன என்னும் சொல் முறையான. 63
- ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல வரையார். 64
- ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி
- பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே. 65
- முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
- பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே
- ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும். 66
- செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
- மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
- பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
- சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல். 67