3.1 அகத்திணையியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > பொருளதிகாரம்
- கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
- முற்படக் கிளந்த எழு திணை என்ப. 1
- அவற்றுள்,
- நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய
- படு திரை வையம் பாத்திய பண்பே. 2
- முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
- நுவலும் காலை முறை சிறந்தனவே
- பாடலுள் பயின்றவை நாடும் காலை. 3
- முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
- இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே. 4
- மாயோன் மேய காடு உறை உலகமும்
- சேயோன் மேய மை வரை உலகமும்
- வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
- வருணன் மேய பெரு மணல் உலகமும்
- முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
- சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. 5
- காரும் மாலையும் முல்லை. 6
- குறிஞ்சி,
- கூதிர் யாமம் என்மனார் புலவர். 7
- பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப. 8
- வைகறை விடியல் மருதம். 9
- எற்பாடு,
- நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும். 10
- நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
- முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே. 11
- பின்பனிதானும் உரித்து என மொழிப. 12
- இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
- உரியது ஆகும் என்மனார் புலவர். 13
- திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே
- நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப
- புலன் நன்கு உணர்ந்த புலமையோரே. 14
- உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. 15
- புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
- ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
- தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. 16
- கொண்டு தலைக்கழிதலும் பிரிந்து அவண் இரங்கலும்
- உண்டு என மொழிப ஓர் இடத்தான. 17
- கலந்த பொழுதும் காட்சியும் அன்ன. 18
- முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே. 19
- தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
- செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
- அவ் வகை பிறவும் கரு என மொழிப. 20
- எந் நில மருங்கின் பூவும் புள்ளும்
- அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
- வந்த நிலத்தின் பயத்த ஆகும். 21
- பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய
- திணைதொறும் மரீஇய திணை நிலைப் பெயரே. 22
- ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்
- ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே. 23
- ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை
- ஆனா வகைய திணை நிலைப் பெயரே. 24
- அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
- கடிவரை இல புறத்து என்மனார் புலவர். 25
- ஏவல் மரபின் ஏனோரும் உரியர்
- ஆகிய நிலைமை அவரும் அன்னர். 26
- ஓதல் பகையே தூது இவை பிரிவே. 27
- அவற்றுள்,
- ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன. 28
- தானே சேறலும் தன்னொடு சிவணிய
- ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. 29
- மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
- முல்லை முதலாச் சொல்லிய முறையான்
- பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்
- இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே. 30
- மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே. 31
- மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப. 32
- உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான. 33
- வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய
- ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே. 34
- பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே. 35
- உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான. 36
- முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை. 37
- எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
- பொற்புடை நெறிமை இன்மையான. 38
- தன்னும் அவனும் அவளும் சுட்டி
- மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்
- நன்மை தீமை அச்சம் சார்தல் என்று
- அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
- முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
- தோழி தேஎத்தும் கண்டோ ர் பாங்கினும்
- போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
- ஆகிய கிளவியும் அவ் வழி உரிய. 39
- ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்
- தாமே செல்லும் தாயரும் உளரே. 40
- அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே. 41
- தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும்
- போக்கற்கண்ணும் விடுத்தற்கண்ணும்
- நீக்கலின் வந்த தம் உறு விழுமமும்
- வாய்மையும் பொய்ம்மையும் கண்டோ ற் சுட்டித்
- தாய் நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
- நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை
- அழிந்தது களை என மொழிந்தது கூறி
- வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு
- என்று இவை எல்லாம் இயல்புற நாடின்
- ஒன்றித் தோன்றும் தோழி மேன. 42
- பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி
- வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்
- ஊரது சார்பும் செல்லும் தேயமும்
- ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்
- புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு
- அழிந்து எதிர் கூறி விடுப்பினும் ஆங்கத்
- தாய் நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்
- சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்
- கண்டோ ர் மொழிதல் கண்டது என்ப. 43
- ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்
- ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும்
- இடைச் சுர மருங்கின் அவள் தமர் எய்திக்
- கடைக் கொண்டு பெயர்தலின் கலங்கு அஞர் எய்திக்
- கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட
- அப் பால் பட்ட ஒரு திறத்தானும்
- நாளது சின்மையும் இளமையது அருமையும்
- தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
- இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
- அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
- ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்
- வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு
- ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்
- புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்
- தூது இடையிட்ட வகையினானும்
- ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்
- மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்
- தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
- பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்
- பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்
- காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்
- பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி
- இரத்தலும் தெளித்தலும் என இரு வகையொடு
- உரைத் திற நாட்டம் கிழவோன் மேன. 44
- எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே. 45
- நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும். 46
- நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே. 47
- மரபுநிலை திரியா மாட்சிய ஆகி
- விரவும் பொருளும் விரவும் என்ப. 48
- உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
- தள்ளாது ஆகும் திணை உணர் வகையே. 49
- உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்
- கொள்ளும் என்ப குறி அறிந்தோரே. 50
- உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக என
- உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம். 51
- ஏனை உவமம் தான் உணர் வகைத்தே. 52
- காமம் சாலா இளமையோள்வயின்
- ஏமம் சாலா இடும்பை எய்தி
- நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்
- தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து
- சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
- புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. 53
- ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம்
- தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்
- மிக்க காமத்து மிடலொடு தொகைஇ
- செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. 54
- முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப. 55
- நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
- பாடல் சான்ற புலனெறி வழக்கம்
- கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
- உரியது ஆகும் என்மனார் புலவர். 56
- மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
- சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர். 57
- புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
- அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே. 58