3.2 புறத்திணையியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > பொருளதிகாரம்
- அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்
- புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்
- வெட்சிதானே குறிஞ்சியது புறனே
- உட்கு வரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே. 1
- வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
- ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும். 2
- படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
- புடை கெடப் போகிய செலவே புடை கெட
- ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
- முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய
- ஊர் கொலை ஆ கோள் பூசல் மாற்றே
- நோய் இன்று உய்த்தல் நுவல்வழித் தோற்றம்
- தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என
- வந்த ஈர் ஏழ் வகையிற்று ஆகும். 3
- மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த
- கொற்றவை நிலையும் அத் திணைப் புறனே. 4
- வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
- வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை
- வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்
- போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
- மா பெருந்தானையர் மலைந்த பூவும்
- வாடா வள்ளி வயவர் ஏத்திய
- ஓடாக் கழல் நிலை உளப்பட ஓடா
- உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்
- மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
- தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்
- ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்
- சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
- தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
- அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும்
- வரு தார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று
- இரு வகைப் பட்ட பிள்ளை நிலையும்
- வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க
- நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும்
- காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
- சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று
- இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்
- சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே. 5
- வஞ்சிதானே முல்லையது புறனே
- எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்
- அஞ்சு தகத் தலைச் சென்று அடல் குறித்தன்றே. 6
- இயங்கு படை அரவம் எரி பரந்து எடுத்தல்
- வயங்கல் எய்திய பெருமையானும்
- கொடுத்தல் எய்திய கொடைமையானும்
- அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்
- மாராயம் பெற்ற நெடுமொழியானும்
- பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்
- வரு விசைப் புனலைக் கற் சிறை போல
- ஒருவன் தாங்கிய பெருமையானும்
- பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்
- வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும்
- குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்
- அழி படை தட்டோ ர் தழிஞ்சியொடு தொகைஇ
- கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே. 7
- உழிஞைதானே மருதத்துப் புறனே
- முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
- அனை நெறி மரபிற்று ஆகும் என்ப. 8
- அதுவேதானும் இரு நால் வகைத்தே. 9
- கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்
- உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
- தொல் எயிற்கு இவர்தலும் தோலது பெருக்கமும்
- அகத்தோன் செல்வமும் அன்றியும் முரணிய
- புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட
- ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர்
- வரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட
- சொல்லப்பட்ட நால் இரு வகைத்தே. 10
- குடையும் வாளும் நாள்கோள் அன்றி
- மடை அமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச்
- சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு
- முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய
- அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன்
- புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்
- நீர்ச் செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று
- ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும்
- மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும்
- இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்
- வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற
- தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ
- வகை நால் மூன்றே துறை என மொழிப. 11
- தும்பைதானே நெய்தலது புறனே
- மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
- சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. 12
- கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
- சென்ற உயிரின் நின்ற யாக்கை
- இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு
- இரு பாற் பட்ட ஒரு சிறப்பின்றே. 13
- தானை யானை குதிரை என்ற
- நோனார் உட்கும் மூ வகை நிலையும்
- வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
- தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும்
- இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்
- ஒருவன் ஒருவனை உடை படை புக்கு
- கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து
- பாழி கொள்ளும் ஏமத்தானும்
- களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு
- பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
- வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து
- இரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும்
- ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும்
- செருவகத்து இறைவன் வீழ்ந்தென சினைஇ
- ஒருவன் மண்டிய நல் இசை நிலையும்
- பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
- ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்படப்
- புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. 14
- வாகைதானே பாலையது புறனே
- தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்
- பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப. 15
- அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
- ஐ வகை மரபின் அரசர் பக்கமும்
- இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்
- மறு இல் செய்தி மூ வகைக் காலமும்
- நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
- நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்
- பால் அறி மரபின் பொருநர்கண்ணும்
- அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
- தொகை நிலைபெற்றது என்மனார் புலவர். 16
- கூதிர் வேனில் என்று இரு பாசறைக்
- காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்
- ஏரோர் களவழி அன்றி களவழித்
- தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர்
- வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்
- ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்
- பெரும் பகை தாங்கும் வேலினானும்
- அரும் பகை தாங்கும் ஆற்றலானும்
- புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்
- ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்
- சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து
- தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்
- ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்
- பகட்டினானும் ஆவினானும்
- துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்
- கடி மனை நீத்த பாலின்கண்ணும்
- எட்டு வகை நுதலிய அவையகத்தானும்
- கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்
- இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்
- பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்
- பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்
- அருளொடு புணர்ந்த அகற்சியானும்
- காமம் நீத்த பாலினானும் என்று
- இரு பாற் பட்ட ஒன்பதின் துறைத்தே. 17
- காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
- பாங்கு அருஞ் சிறப்பின் பல் ஆற்றானும்
- நில்லா உலகம் புல்லிய நெறித்தே. 18
- மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்
- கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
- பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்
- புண் கிழித்து முடியும் மறத்தினானும்
- ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்
- பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்
- இன்னன் என்று இரங்கிய மன்னையானும்
- இன்னது பிழைப்பின் இது ஆகியர் எனத்
- துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்
- இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்
- துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்
- நீத்த கணவன் தீர்த்த வேலின்
- பேஎத்த மனைவி ஆஞ்சியானும்
- நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
- மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்
- முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோ ன்
- தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ
- ஈர் ஐந்து ஆகும் என்ப பேர் இசை
- மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
- மாய்ந்த பூசல் மயக்கத்தானும்
- தாமே எய்திய தாங்க அரும் பையுளும்
- கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
- செல்வோர் செப்பிய மூதானந்தமும்
- நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து
- தனி மகள் புலம்பிய முதுபாலையும்
- கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ
- ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்
- காதலி இழந்த தபுதார நிலையும்
- காதலன் இழந்த தாபத நிலையும்
- நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்
- சொல் இடையிட்ட பாலை நிலையும்
- மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த
- தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்
- மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்
- பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
- நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே. 19
- பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
- நாடும் காலை நால் இரண்டு உடைத்தே. 20
- அமரர்கண் முடியும் அறு வகையானும்
- புரை தீர் காமம் புல்லிய வகையினும்
- ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. 21
- வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ
- பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்
- முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை
- வண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே. 22
- காமப் பகுதி கடவுளும் வரையார்
- ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர். 23
- குழவி மருங்கினும் கிழவது ஆகும். 24
- ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப
- வழக்கொடு சிவணிய வகைமையான. 25
- மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. 26
- கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
- வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
- கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. 27
- கொற்றவள்ளை ஓர் இடத்தான. 28
- கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
- அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்
- சேய் வரல் வருத்தம் வீட வாயில்
- காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்
- கண்படை கண்ணிய கண்படை நிலையும்
- கபிலை கண்ணிய வேள்வி நிலையும்
- வேலை நோக்கிய விளக்கு நிலையும்
- வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும்
- ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்
- கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ
- தொக்க நான்கும் உள என மொழிப. 29
- தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்
- சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்
- கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
- ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
- பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ
- சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்
- சிறந்த நாளினில் செற்றம் நீக்கி
- பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்
- சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்
- நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்
- மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்
- மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்
- பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
- பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி
- நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்
- அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
- நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
- காலம் கண்ணிய ஓம்படை உளப்பட
- ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
- காலம் மூன்றொடு கண்ணிய வருமே. 30