3.3 களவியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > பொருளதிகாரம்
- இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
- காமக் கூட்டம் காணும் காலை
- மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
- துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே. 1
- ஒன்றே வேறே என்று இரு பால்வயின்
- ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
- ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
- மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே. 2
- சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
- இழிந்துழி இழிபே சுட்டலான. 3
- வண்டே இழையே வள்ளி பூவே
- கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று
- அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ
- நின்றவை களையும் கருவி என்ப. 4
- நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
- கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். 5
- குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின்
- ஆங்கு அவை நிகழும் என்மனார் புலவர். 6
- பெருமையும் உரனும் ஆடூஉ மேன. 7
- அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
- நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. 8
- வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
- ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல்
- நோக்குவ எல்லாம் அவையே போறல்
- மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
- சிறப்புடை மரபினவை களவு என மொழிப. 9
- முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்
- நல் நயம் உரைத்தல் நகை நனி உறாஅ
- அந் நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
- தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று
- இன்னவை நிகழும் என்மனார் புலவர். 10
- மெய் தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்
- இடம் பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
- நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்
- சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
- தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ
- பேராச் சிறப்பின் இரு நான்கு கிளவியும்
- பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்
- நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்
- குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்
- பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்
- ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்
- நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித்
- தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி
- குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்
- தண்டாது இரப்பினும் மற்றைய வழியும்
- சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையினும்
- அறிந்தோள் அயர்ப்பின் அவ் வழி மருங்கின்
- கேடும் பீடும் கூறலும் தோழி
- நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி
- மடல் மா கூறும் இடனுமார் உண்டே. 11
- பண்பின் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்
- அன்புற்று நகினும் அவட் பெற்று மலியினும்
- ஆற்றிடை உறுதலும் அவ் வினைக்கு இயல்பே. 12
- பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப. 13
- முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. 14
- பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. 15
- முதலொடு புணர்ந்த யாழோர் மேன
- தவல் அருஞ் சிறப்பின் ஐந் நிலம் பெறுமே. 16
- இரு வகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்
- காணா வகையின் பொழுது நனி இகப்பினும்
- தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின்
- காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி
- வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்
- புகாக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி
- பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும்
- வேளாண் எதிரும் விருப்பின்கண்ணும்
- தாளாண் எதிரும் பிரிவினானும்
- நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும்
- வரைதல் வேண்டித் தோழி செப்பிய
- புரை தீர் கிளவி புல்லிய எதிரும்
- வரைவு உடன்படுதலும் ஆங்கு அதன் புறத்துப்
- புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ
- கிழவோள் மேன என்மனார் புலவர். 17
- காமத் திணையின் கண் நின்று வரூஉம்
- நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
- குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
- நெறிப்பட வாரா அவள்வயினான. 18
- காமம் சொல்லா நாட்டம் இன்மையின்
- ஏமுற இரண்டும் உள என மொழிப. 19
- சொல் எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்
- அல்ல கூற்றுமொழி அவள்வயினான. 20
- மறைந்து அவற் காண்டல் தற் காட்டுறுதல்
- நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல்
- வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல்
- பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல்
- கைப்பட்டுக் கலங்கினும் நாணு மிக வரினும்
- இட்டுப் பிரிவு இரங்கினும் அருமை செய்து அயர்ப்பினும்
- வந்தவழி எள்ளினும் விட்டு உயிர்த்து அழுங்கினும்
- நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும்
- பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
- வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும்
- கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
- மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
- நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்
- உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர் செல
- வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும்
- நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
- பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
- ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்
- அருமை சான்ற நால் இரண்டு வகையின்
- பெருமை சான்ற இயல்பின்கண்ணும்
- பொய் தலை அடுத்த மடலின்கண்ணும்
- கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
- வெறியாட்டு இடத்து வெருவின்கண்ணும்
- குறியின் ஒப்புமை மருடற்கண்ணும்
- வரைவு தலைவரினும் களவு அறிவுறினும்
- தமர் தற் காத்த காரண மருங்கினும்
- தன் குறி தள்ளிய தெருளாக் காலை
- வந்தவன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித்
- தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும்
- வழு இன்று நிலைஇய இயற்படு பொருளினும்
- பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்
- அழிவு தலைவந்த சிந்தைக்கண்ணும்
- காமம் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும்
- ஏமம் சான்ற உவகைக்கண்ணும்
- தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தையும்
- அன்னவும் உளவே ஓர் இடத்தான. 21
- வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும்
- வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
- உரை எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும்
- தானே கூறும் காலமும் உளவே. 22
- உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
- செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்
- தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
- காமக் கிழவன் உள்வழிப் படினும்
- தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும்
- ஆ வகை பிறவும் தோன்றுமன் பொருளே. 23
- நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
- செய் வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்
- புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்
- உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை
- மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
- பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும்
- குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப்
- பெருமையின் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும்
- அருமையின் அகற்சியும் அவள் அறிவுறுத்துப்
- பின் வா என்றலும் பேதைமை ஊட்டலும்
- முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும்
- அஞ்சி அச்சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமொடு
- எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும்
- வந்த கிழவனை மாயம் செப்பிப்
- பொறுத்த காரணம் குறித்த காலையும்
- புணர்ந்த பின் அவன்வயின் வணங்கற்கண்ணும்
- குறைந்து அவட் படரினும் மறைந்தவள் அருக
- தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ
- பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்
- நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்
- எண்ண அரும் பல் நகை கண்ணிய வகையினும்
- புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
- வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்
- புணர்ந்துழி உணர்ந்த அறி மடச் சிறப்பினும்
- ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்
- செங் கடு மொழியான் சிதைவுடைத்து ஆயினும்
- என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ
- அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்
- ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்
- காப்பின் கடுமை கையற வரினும்
- களனும் பொழுதும் வரை நிலை விலக்கி
- காதல் மிகுதி உளப்படப் பிறவும்
- நாடும் ஊரும் இல்லும் குடியும்
- பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி
- அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ
- அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்
- ஐயச் செய்கை தாய்க்கு எதிர் மறுத்து
- பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்
- அவன் விலங்குறினும் களம் பெறக் காட்டினும்
- பிறன் வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும்
- முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப்
- புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்
- வரைவு உடன்பட்டோ ற் கடாவல் வேண்டினும்
- ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட
- பாங்குற வந்த நால் எட்டு வகையும்
- தாங்க அருஞ் சிறப்பின் தோழி மேன. 24
- களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்
- அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்
- கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
- ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்
- ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்
- காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்
- தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும்
- போக்கு உடன் அறிந்த பின் தோழியொடு கெழீஇக்
- கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும்
- பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும்
- இரு பால் குடிப் பொருள் இயல்பின்கண்ணும்
- இன்ன வகையின் பதின்மூன்று கிளவியொடு
- அன்னவை பிறவும் செவிலி மேன. 25
- தாய்க்கும் வரையார் உணர்வு உடம்படினே. 26
- கிழவோன் அறியா அறிவினள் இவள் என
- மை அறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்
- ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே. 27
- தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
- எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை
- பிற நீர் மாக்களின் அறிய ஆயிடைப்
- பெய்ந் நீர் போலும் உணர்விற்று என்ப. 28
- காமக் கூட்டம் தனிமையின் பொலிதலின்
- தாமே தூதுவர் ஆகலும் உரித்தே. 29
- அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்
- களம் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்
- தான் செலற்கு உரிய வழி ஆகலான. 30
- தோழியின் முடியும் இடனுமார் உண்டே. 31
- முந் நாள் அல்லது துணை இன்று கழியாது
- அந் நாள் அகத்தும் அது வரைவு இன்றே. 32
- பல் நூறு வகையினும் தன் வயின் வரூஉம்
- நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின்
- துணைச் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்
- துணையோர் கருமம் ஆகலான. 33
- ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின்
- தாய் எனப்படுவோள் செவிலி ஆகும். 34
- தோழிதானே செவிலி மகளே. 35
- சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே. 36
- குறையுற உணர்தல் முன் உற உணர்தல்
- இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் என
- மதியுடம்படுத்தல் ஒரு மூ வகைத்தே. 37
- அன்ன வகையான் உணர்ந்த பின் அல்லது
- பின்னிலை முயற்சி பெறாள் என மொழிப. 38
- முயற்சிக் காலத்து அதற்பட நாடி
- புணர்த்தல் ஆற்றலும் அவள்வயினான. 39
- குறி எனப்படுவது இரவினும் பகலினும்
- அறியக் கிளந்த ஆற்றது என்ப. 40
- இரவுக் குறியே இல்லகத்துள்ளும்
- மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே
- மனையகம் புகாஅக் காலையான. 41
- பகல் புணர் களனே புறன் என மொழிப
- அவள் அறிவு உணர வரு வழியான. 42
- அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே
- அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே. 43
- ஆங்கு ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே
- ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான. 44
- மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
- துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை. 45
- ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும்
- ஊறும் உளப்பட அதன் ஓரன்ன. 46
- தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப. 47
- தாய் அறிவுறுதல் செவிலியொடு ஒக்கும். 48
- அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்
- அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும். 49
- வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று
- ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. 50
- வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும்
- ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக
- வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை. 51