3.5 பொருளியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > பொருளதிகாரம்
- இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே
- அசை திரிந்து இசையா என்மனார் புலவர். 1
- நோயும் இன்பமும் இரு வகை நிலையின்
- காமம் கண்ணிய மரபிடை தெரிய
- எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய
- உறுப்புடையது போல் உணர்வுடையது போல்
- மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்
- சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ
- செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்
- அவர் அவர் உறு பிணி தம போல் சேர்த்தியும்
- அறிவும் புலனும் வேறுபட நிறீஇ
- இரு பெயர் மூன்றும் உரிய ஆக
- உவமவாயில் படுத்தலும் உவமம்
- ஒன்று இடத்து இருவர்க்கும் உரிய பாற் கிளவி. 2
- கனவும் உரித்தால் அவ் இடத்தான. 3
- தாய்க்கும் உரித்தால் போக்கு உடன் கிளப்பின்.4
- பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே
- நட்பின் நடக்கை ஆங்கு அலங்கடையே. 5
- உயிரும் நாணும் மடனும் என்று இவை
- செயிர் தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய. 6
- வண்ணம் பசந்து புலம்புறு காலை
- உணர்ந்த போல உறுப்பினைக் கிழவி
- புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே. 7
- உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும்
- என் உற்றனகொல் இவை எனின் அல்லதை
- கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை. 8
- ஒரு சிறை நெஞ்சமொடு உசாவும் காலை
- உரியதாகலும் உண்டு என மொழிப. 9
- தன்வயின் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்
- அன்ன இடங்கள் அல் வழி எல்லாம்
- மடனொடு நிற்றல் கடன் என மொழிப. 10
- அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி
- அறத்து இயல் மரபு இலள் தோழி என்ப. 11
- எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல்
- கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு
- உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ
- அவ் எழு வகைய என்மனார் புலவர். 12
- உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்
- அப் பொருள் வேட்கை கிழவியின் உணர்ப. 13
- செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
- அறிவும் அருமையும் பெண்பாலான. 14
- பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின்
- வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்
- தன்னை அழிதலும் அவண் ஊறு அஞ்சலும்
- இரவினும் பகலினும் நீ வா என்றலும்
- கிழவோன் தன்னை வாரல் என்றலும்
- நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்
- புரை பட வந்த அன்னவை பிறவும்
- வரைதல் வேட்கைப் பொருள என்ப. 15
- வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல்
- மரீஇய மருங்கின் உரித்து என மொழிப. 16
- தேரும் யானையும் குதிரையும் பிறவும்
- ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப. 17
- உண்டற்கு உரிய அல்லாப் பொருளை
- உண்டன போலக் கூறலும் மரபே. 18
- பொருள் என மொழிதலும் வரை நிலை இன்றே
- காப்புக் கைம்மிகுதல் உண்மையான
- அன்பே அறனே இன்பம் நாணொடு
- துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின்
- ஒன்றும் வேண்டா காப்பினுள்ளே. 19
- சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே. 20
- உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்
- வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே. 21
- அறக் கழிவு உடையன பொருட் பயம் பட வரின்
- வழக்கு என வழங்கலும் பழித்து அன்று என்ப. 22
- மிக்க பொருளினுள் பொருள் வகை புணர்க்க
- நாணுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே. 23
- முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச் சொல்
- நிலைக்கு உரி மரபின் இரு வீற்றும் உரித்தே. 24
- தாயத்தின் அடையா ஈயச் செல்லா
- வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா
- எம் என வரூஉம் கிழமைத் தோற்றம்
- அல்லாவாயினும் புல்லுவ உளவே. 25
- ஒரு பால் கிளவி எனைப் பாற்கண்ணும்
- வரு வகைதானே வழக்கு என மொழிப. 26
- எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
- தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும். 27
- பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
- நிலத் திரிபு இன்று அஃது என்மனார் புலவர். 28
- ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப்
- பிரிதல் அச்சம் உண்மையானும்
- அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று
- அஞ்ச வந்த ஆங்கு இரு வகையினும்
- நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்
- போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும். 29
- வருத்த மிகுதி சுட்டும் காலை
- உரித்து என மொழிப வாழ்க்கையுள் இரக்கம். 30
- மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
- நினையும் காலை புலவியுள் உரிய. 31
- நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின்
- புகழ் தகை வரையார் கற்பினுள்ளே. 32
- இறைச்சிதானே உரிப் புறத்ததுவே. 33
- இறைச்சியின் பிறக்கும் பொருளுமார் உளவே
- திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே. 34
- அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும்
- வன்புறை ஆகும் வருந்திய பொழுதே. 35
- செய் பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும்
- மெய்பெற உணர்த்தும் கிழவி பாராட்டே. 36
- கற்புவழிப் பட்டவள் பரத்தைமை ஏத்தினும்
- உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப. 37
- கிழவோள் பிறள் குணம் இவை எனக் கூறி
- கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள். 38
- தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும்
- மெய்ம்மையாக அவர்வயின் உணர்ந்தும்
- தலைத்தாட் கழறல் தம் எதிர்ப்பொழுது இன்றே
- மலிதலும் ஊடலும் அவை அலங்கடையே. 39
- பொழுது தலைவைத்த கையறு காலை
- இறந்த போலக் கிளக்கும் கிளவி
- மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு
- அவை நாற் பொருட்கண் நிகழும் என்ப. 40
- இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி
- நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும்
- வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும்
- நல் வகையுடைய நயத்தின் கூறியும்
- பல் வகையானும் படைக்கவும் பெறுமே. 41
- உயர் மொழிக் கிளவி உறழும் கிளவி
- ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே. 42
- உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின்
- உரியதாகும் தோழிகண் உரனே. 43
- உயர் மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே. 44
- வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்
- தா இன்று உரிய தம்தம் கூற்றே. 45
- உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பு எனக்
- கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே. 46
- அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம்
- தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. 47
- மங்கல மொழியும் வைஇய மொழியும்
- மாறு இல் ஆண்மையின் சொல்லிய மொழியும்
- கூறிய மருங்கின் கொள்ளும் என்ப. 48
- சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு
- அனை நால் வகையும் சிறப்பொடு வருமே. 49
- அன்னை என்னை என்றலும் உளவே
- தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும்
- தோன்றா மரபின என்மனார் புலவர். 50
- ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
- கற்பும் ஏரும் எழிலும் என்றா
- சாயலும் நாணும் மடனும் என்றா
- நோயும் வேட்கையும் நுகர்வும் என்று ஆங்கு
- ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
- நாட்டு இயல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது
- காட்டலாகாப் பொருள என்ப. 51
- இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்பினும்
- அவை இல் காலம் இன்மையான. 52