3.6 மெய்ப்பாட்டியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > பொருளதிகாரம்
- பண்ணைத் தோன்றிய எண் நான்கு பொருளும்
- கண்ணிய புறனே நால் நான்கு என்ப. 1
- நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே. 2
- நகையே அழுகை இளிவரல் மருட்கை
- அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
- அப் பால் எட்டே மெய்ப்பாடு என்ப. 3
- எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
- உள்ளப்பட்ட நகை நான்கு என்ப. 4
- இளிவே இழவே அசைவே வறுமை என
- விளிவு இல் கொள்கை அழுகை நான்கே. 5
- மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
- யாப்புற வந்த இளிவரல் நான்கே. 6
- புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
- மதிமை சாலா மருட்கை நான்கே. 7
- அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப்
- பிணங்கல் சாலா அச்சம் நான்கே. 8
- கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச்
- சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே. 9
- உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற
- வெறுப்பின் வந்த வெகுளி நான்கே. 10
- செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
- அல்லல் நீத்த உவகை நான்கே. 11
- ஆங்கவை ஒரு பால் ஆக ஒரு பால்
- உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல்
- தன்மை அடக்கம் வரைதல் அன்பு எனாஅ
- கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்
- நாணுதல் துஞ்சல் அரற்று கனவு எனாஅ
- முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை
- கருதல் ஆராய்ச்சி விரைவு உயிர்ப்பு எனாஅ
- கையாறு இடுக்கண் பொச்சாப்பு பொறாமை
- வியர்த்தல் ஐயம் மிகை நடுக்கு எனாஅ
- இவையும் உளவே அவை அலங்கடையே. 12
- புகு முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல்
- நகு நயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு இன்மையொடு
- தகு முறை நான்கே ஒன்று என மொழிப. 13
- கூழை விரித்தல் காது ஒன்று களைதல்
- ஊழ் அணி தைவரல் உடை பெயர்த்து உடுத்தலொடு
- ஊழி நான்கே இரண்டு என மொழிப. 14
- அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்
- இல் வலியுறுத்தல் இரு கையும் எடுத்தலொடு
- சொல்லிய நான்கே மூன்று என மொழிப. 15
- பாராட்டு எடுத்தல் மடம் தப உரைத்தல்
- ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல்
- கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ
- எடுத்த நான்கே நான்கு என மொழிப. 16
- தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினை மறுத்தல்
- கரந்திடத்து ஒழிதல் கண்டவழி உவத்தலொடு
- பொருந்திய நான்கே ஐந்து என மொழிப. 17
- புறம் செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்
- கலங்கி மொழிதல் கையறவு உரைத்தலொடு
- விளம்பிய நான்கே ஆறு என மொழிப. 18
- அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
- மன்னிய வினைய நிமித்தம் என்ப. 19
- வினை உயிர் மெலிவு இடத்து இன்மையும் உரித்தே. 20
- அவையும் உளவே அவை அலங்கடையே. 21
- இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்
- எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்
- பசி அட நிற்றல் பசலை பாய்தல்
- உண்டியின் குறைதல் உடம்பு நனி சுருங்கல்
- கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்
- பொய்யாக் கோடல் மெய்யே என்றல்
- ஐயம் செய்தல் அவன் தமர் உவத்தல்
- அறன் அளித்து உரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல்
- எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல்
- ஒப்புவழி உவத்தல் உறு பெயர் கேட்டல்
- நலத் தக நாடின் கலக்கமும் அதுவே. 22
- முட்டுவயின் கழறல் முனிவு மெய்ந் நிறுத்தல்
- அச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல்
- தூது முனிவு இன்மை துஞ்சிச் சேர்தல்
- காதல் கைம்மிகல் கட்டுரை இன்மை என்று
- ஆயிரு நான்கே அழிவு இல் கூட்டம். 23
- தெய்வம் அஞ்சல் புரை அறம் தெளிதல்
- இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல்
- புணர்ந்துழி உண்மை பொழுது மறுப்பு ஆக்கம்
- அருள் மிக உடைமை அன்பு தொக நிற்றல்
- பிரிவு ஆற்றாமை மறைந்தவை உரைத்தல்
- புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇ
- சிறந்த பத்தும் செப்பிய பொருளே. 24
- பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
- உருவு நிறுத்த காம வாயில்
- நிறையே அருளே உணர்வொடு திரு என
- முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. 25
- நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
- வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
- இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை
- என்று இவை இன்மை என்மனார் புலவர். 26
- கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
- உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்
- நல் நயப் பொருள்கோள் எண்ண அருங்குரைத்தே. 27