3.8 செய்யுளியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > பொருளதிகாரம்
- மாத்திரை எழுத்து இயல் அசை வகை எனாஅ
- யாத்த சீரே அடி யாப்பு எனாஅ
- மரபே தூக்கே தொடை வகை எனாஅ
- நோக்கே பாவே அளவு இயல் எனாஅ
- திணையே கைகோள் கூற்று வகை எனாஅ
- கேட்போர் களனே கால வகை எனாஅ
- பயனே மெய்ப்பாடு எச்ச வகை எனாஅ
- முன்னம் பொருளே துறை வகை எனாஅ
- மாட்டே வண்ணமொடு யாப்பு இயல் வகையின்
- ஆறு தலை இட்ட அந் நால் ஐந்தும்
- அம்மை அழகு தொன்மை தோலே
- விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்
- பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ
- நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்பு என
- வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே. 1
- அவற்றுள்,
- மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்
- மேல் கிளந்தனவே என்மனார் புலவர். 2
- குறிலே நெடிலே குறில் இணை குறில் நெடில்
- ஒற்றொடு வருதலொடு மெய்ப் பட நாடி
- நேரும் நிரையும் என்றிசின் பெயரே. 3
- இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே
- நேர்பும் நிரைபும் ஆகும் என்ப
- குறில் இணை உகரம் அல் வழியான. 4
- இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை. 5
- தனிக் குறில் முதலசை மொழி சிதைந்து ஆகாது.6
- ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம். 7
- முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ
- நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும். 8
- குற்றியலுகரமும் முற்றியலுகரமும்
- ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. 9
- அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
- வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே. 10
- ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும்
- சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே. 11
- இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை
- உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர். 12
- முன் நிரை உறினும் அன்ன ஆகும். 13
- நேர் அவண் நிற்பின் இயற்சீர்ப் பால. 14
- இயலசை ஈற்று முன் உரியசை வரினே
- நிரையசை இயல ஆகும் என்ப. 15
- அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. 16
- ஒற்று அளபெடுப்பினும் அற்று என மொழிப. 17
- இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின்
- உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப. 18
- வஞ்சிச் சீர் என வகை பெற்றனவே
- வெண் சீர் அல்லா மூ அசை என்ப. 19
- தன் பா அல் வழி தான் அடைவு இன்றே. 20
- வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய. 21
- வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர்
- இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே. 22
- கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ. 23
- கலித்தளை அடிவயின் நேர் ஈற்று இயற்சீர்
- நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே. 24
- வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா. 25
- இசைநிலை நிறைய நிற்குவது ஆயின்
- அசைநிலை வரையார் சீர் நிலை பெறவே. 26
- இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே
- தளை வகை சிதையாத் தன்மையான. 27
- வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே. 28
- இன் சீர் இயைய வருகுவது ஆயின்
- வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே. 29
- அந் நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர்
- ஒன்றுதல் உடைய ஓர் ஒரு வழியே. 30
- நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே. 31
- அடி உள்ளனவே தளையொடு தொடையே. 32
- அடி இறந்து வருதல் இல் என மொழிப. 33
- அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே. 34
- நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து
- ஏறிய நிலத்தே குறளடி என்ப. 35
- ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே
- ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான. 36
- பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே
- ஒத்த நால் எழுத்து ஏற்றலங்கடையே. 37
- மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே
- ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. 38
- மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே
- ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. 39
- சீர் நிலைதானே ஐந்து எழுத்து இறவாது
- நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும். 40
- எழுத்து அளவு எஞ்சினும் சீர் நிலைதானே
- குன்றலும் மிகுதலும் இல் என மொழிப. 41
- உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ
- உயிர்த் திறம் இயக்கம் இன்மையான. 42
- வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும். 43
- தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே. 44
- முச் சீரானும் வரும் இடன் உடைத்தே. 45
- அசை கூன் ஆகும் அவ்வயினான. 46
- சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே. 47
- ஐ வகை அடியும் விரிக்கும் காலை
- மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும்
- எழுபது வகையின் வழு இல ஆகி
- அறுநூற்று இருபத்தைந்து ஆகும்மே. 48
- ஆங்கனம் விரிப்பின் அளவு இறந்தனவே
- பாங்குற உணர்ந்தோர் பன்னும் காலை. 49
- ஐ வகை அடியும் ஆசிரியக்கு உரிய. 50
- விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே. 51
- தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும்
- இன் சீர் வகையின் ஐந்து அடிக்கும் உரிய
- தன் சீர் உள்வழித் தளை வகை வேண்டா. 52
- சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின்
- ஆசிரியத் தளை என்று அறியல் வேண்டும். 53
- குறளடி முதலா அளவடி காறும்
- உறழ் நிலை இலவே வஞ்சிக்கு என்ப. 54
- அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய
- தளை வகை ஒன்றாத் தன்மையான. 55
- அளவடி மிகுதி உளப்படத் தோன்றி
- இரு நெடிலடியும் கலியிற்கு உரிய. 56
- நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும்
- வரை நிலை இன்றே அவ் அடிக்கு என்ப. 57
- விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே. 58
- இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்
- நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே. 59
- வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும்
- ஐஞ் சீர் அடியும் உள என மொழிப. 60
- அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு
- நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே. 61
- எழு சீர் அடியே முடுகியல் நடக்கும். 62
- முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும். 63
- ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும்
- மூ வகை அடியும் முன்னுதல் இலவே. 64
- ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின்
- தோற்றம் முச் சீர்த்து ஆகும் என்ப. 65
- இடையும் வரையார் தொடை உணர்வோரே. 66
- முச் சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும். 67
- வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே. 68
- வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும்
- அசை சீர்த்து ஆகும் அவ் வழியான. 69
- நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும்
- சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப. 70
- நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும்
- வரைவு இன்று என்ப வாய் மொழிப் புலவர். 71
- எழு சீர் இறுதி ஆசிரியம் கலியே. 72
- வெண்பா இயலினும் பண்புற முடியும். 73
- எழுத்து முதலா ஈண்டிய அடியின்
- குறித்த பொருளை முடிய நாட்டல்
- யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர். 74
- பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
- அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
- வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
- நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
- யாப்பின் வழியது என்மனார் புலவர். 75
- மரபேதானும்,
- நாற் சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று. 76
- அகவல் என்பது ஆசிரியம்மே. 77
- அதாஅன்று என்ப வெண்பா யாப்பே. 78
- துள்ளல் ஓசை கலி என மொழிப. 79
- தூங்கல் ஓசை வஞ்சி ஆகும். 80
- மருட்பா ஏனை இரு சார் அல்லது
- தான் இது என்னும் தனிநிலை இன்றே. 81
- அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளவார். 82
- தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப. 83
- மோனை எதுகை முரணே இயைபு என
- நால் நெறி மரபின தொடை வகை என்ப. 84
- அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும். 85
- பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும்
- அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே. 86
- நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும்
- மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப. 87
- அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை. 88
- அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும். 89
- ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய. 90
- மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. 91
- இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே. 92
- அளபு எழின் அவையே அளபெடைத் தொடையே. 93
- ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின்
- பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே. 94
- இரு சீர் இடையிடின் ஒரூஉ என மொழிப. 95
- சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்
- சொல் இயற் புலவர் அது செந்தொடை என்ப. 96
- மெய் பெறு மரபின் தொடை வகைதாமே
- ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ற்றொடு
- தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று
- ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே. 97
- தெரிந்தனர் விரிப்பின் வரம்பு இல ஆகும். 98
- தொடை வகை நிலையே ஆங்கு என மொழிப. 99
- மாத்திரை முதலா அடிநிலை காறும்
- நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே. 100
- ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என
- நால் இயற்று என்ப பா வகை விரியே. 101
- அந் நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய
- மும் முதல் பொருட்கும் உரிய என்ப. 102
- பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்
- ஆசிரியப்பா வெண்பா என்று ஆங்கு
- ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப. 103
- ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
- வெண்பா நடைத்தே கலி என மொழிப. 104
- வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே. 105
- வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப
- பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து
- பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
- கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. 106
- வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே
- செவியறிவுறூஉ என அவையும் அன்ன. 107
- வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
- வேம்பும் கடுவும் போல வெஞ் சொல்
- தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று
- ஓம்படைக் கிளவியின் வாயுறுத்தற்றே. 108
- அவையடக்கியலே அரில் தபத் தெரியின்
- வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று
- எல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்றே. 109
- செவியுறைதானே,
- பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண்
- அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே. 110
- ஒத்தாழிசையும் மண்டில யாப்பும்
- குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப. 111
- குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும். 112
- மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும்
- செந்தூக்கு இயல என்மனார் புலவர். 113
- நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே
- கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளொடு
- ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. 114
- கைக்கிளைதானே வெண்பா ஆகி
- ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே. 115
- பரிபாடல்லே தொகை நிலை வகையின்
- இது பா என்னும் இயல் நெறி இன்றி
- பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மொழிப. 116
- கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு
- செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக
- காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். 117
- சொற்சீர் அடியும் முடுகியல் அடியும்
- அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். 118
- கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்
- முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்
- மொழி அசை ஆகியும் வழி அசை புணர்ந்தும்
- சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே. 119
- அங்கதம்தானே அரில் தபத் தெரியின்
- செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே. 120
- செம்பொருள் ஆயின வசை எனப்படுமே. 121
- மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும். 122
- செய்யுள்தாமே இரண்டு என மொழிப. 123
- துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின்
- செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர். 124
- வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்
- அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். 125
- ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே
- கொச்சகம் உறழொடு கலி நால் வகைத்தே. 126
- அவற்றுள்,
- ஒத்தாழிசைக்கலி இரு வகைத்து ஆகும். 127
- இடைநிலைப்பாட்டே தரவு போக்கு அடை என
- நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப. 128
- தரவேதானும் நால் அடி இழிபு ஆய்
- ஆறு இரண்டு உயர்வும் பிறவும் பெறுமே. 129
- இடைநிலைப்பாட்டே,
- தரவு அகப்பட்ட மரபினது என்ப. 130
- அடை நிலைக் கிளவி தாழிசைப் பின்னர்
- நடை நவின்று ஒழுகும் ஆங்கு என் கிளவி. 131
- போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே
- தரவு இயல் ஒத்தும் அதன் அகப்படுமே
- புரை தீர் இறுதி நிலை உரைத்தன்றே. 132
- ஏனை ஒன்றே,
- தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே. 133
- அதுவே,
- வண்ணகம் ஒருபோகு என இரு வகைத்தே. 134
- வண்ணகம்தானே,
- தரவே தாழிசை எண்ணே வாரம் என்று
- அந் நால் வகையின் தோன்றும் என்ப. 135
- தரவேதானும்,
- நான்கும் ஆறும் எட்டும் என்ற
- நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும். 136
- ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே
- தரவின் சுருங்கித் தோன்றும் என்ப. 137
- அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும். 138
- முதல் தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே. 139
- எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே
- சின்னம் அல்லாக் காலையான. 140
- ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும். 141
- கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று
- ஒப்ப நாடி உணர்தல் வேண்டும். 142
- தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும்
- தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும்
- எண் இடை இட்டுச் சின்னம் குன்றியும்
- அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும்
- யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது
- கொச்சக ஒருபோகு ஆகும் என்ப. 143
- ஒருபான் சிறுமை இரட்டி அதன் உயர்பே. 144
- அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே
- செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை. 145
- எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண்
- அடக்கியல் வாரமொடு அந் நிலைக்கு உரித்தே. 146
- ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான்
- திரிபு இன்றி வருவது கலிவெண்பாட்டே. 147
- தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும்
- ஐஞ் சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும்
- வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்
- பாநிலை வகையே கொச்சகக் கலி என
- நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே. 148
- கூற்றும் மாற்றமும் இடை இடை மிடைந்தும்
- போக்கு இன்றாகல் உறழ்கலிக்கு இயல்பே. 149
- ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை
- ஆயிரம் ஆகும் இழிபு மூன்று அடியே. 150
- நெடுவெண்பாட்டே முந் நால் அடித்தே
- குறுவெண்பாட்டின் அளவு எழு சீரே. 151
- அங்கதப் பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும். 152
- கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள்
- செவியறி வாயுறை புறநிலை என்று இவை
- தொகு நிலை மரபின் அடி இல என்ப. 153
- புறநிலை வாயுறை செவியறிவுறூஉ எனத்
- திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின்
- வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்
- பண்புற முடியும் பாவின என்ப. 154
- பரிபாடல்லே,
- நால் ஈர் ஐம்பது உயர்பு அடி ஆக
- ஐ ஐந்து ஆகும் இழிபு அடிக்கு எல்லை. 155
- அளவியல் வகையே அனை வகைப்படுமே. 156
- எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
- அடி வரை இல்லன ஆறு என மொழிப. 157
- அவைதாம்,
- நூலினான உரையினான
- நொடியொடு புணர்ந்த பிசியினான
- ஏது நுதலிய முதுமொழியான
- மறை மொழி கிளந்த மந்திரத்தான
- கூற்று இடை வைத்த குறிப்பினான. 158
- அவற்றுள்,
- நூல் எனப்படுவது நுவலும் காலை
- முதலும் முடிவும் மாறுகோள் இன்றி
- தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
- உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து
- நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. 159
- அதுவேதானும் ஒரு நால் வகைத்தே. 160
- ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்
- இன மொழி கிளந்த ஓத்தினானும்
- பொது மொழி கிளந்த படலத்தானும்
- மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று
- ஆங்கு அனை மரபின் இயலும் என்ப. 161
- அவற்றுள்,
- சூத்திரம்தானே
- ஆடி நிழலின் அறியத் தோன்றி
- நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க
- யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே. 162
- நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு
- ஓர் இனப் பொருளை ஒரு வழி வைப்பது
- ஓத்து என மொழிப உயர் மொழிப் புலவர். 163
- ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்
- பொது மொழி தொடரின் அது படலம் ஆகும். 164
- மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்
- தோன்று மொழிப் புலவர் அது பிண்டம் என்ப. 165
- பாட்டு இடை வைத்த குறிப்பினானும்
- பா இன்று எழுந்த கிளவியானும்
- பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியானும்
- பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்று
- உரை வகை நடையே நான்கு என மொழிப. 166
- அதுவேதானும் இரு வகைத்து ஆகும். 167
- ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே
- ஒன்றே யார்க்கும் வரை நிலை இன்றே. 168
- ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்
- தோன்றுவது கிளந்த துணிவினானும்
- என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே. 169
- நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
- எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி
- குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
- ஏது நுதலிய முதுமொழி என்ப. 170
- நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்
- மறைமொழிதானே மந்திரம் என்ப. 171
- எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகி
- பொருட்புறத்ததுவே குறிப்பு மொழியே. 172
- பாட்டிடைக் கலந்த பொருள ஆகி
- பாட்டின் இயல பண்ணத்திய்யே. 173
- அதுவேதானும் பிசியொடு மானும். 174
- அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்
- அடி இகந்து வரினும் கடி வரை இன்றே. 175
- கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின்
- அளவியல் வகையே அனை வகைப்படுமே. 176
- கைக்கிளை முதலா ஏழ் பெருந் திணையும்
- முன் கிளந்தனவே முறையினான. 177
- காமப் புணர்ச்சியும் இடம் தலைப்படலும்
- பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று
- ஆங்க நால் வகையினும் அடைந்த சார்பொடு
- மறை என மொழிதல் மறையோர் ஆறே. 178
- மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும்
- இவை முதலாகிய இயல் நெறி திரியாது
- மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
- பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே. 179
- மெய் பெறும் அவையே கைகோள் வகையே. 180
- பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
- சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
- அளவு இயல் மரபின் அறு வகையோரும்
- களவின் கிளவிக்கு உரியர் என்ப. 181
- பாணன் கூத்தன் விறலி பரத்தை
- ஆணம் சான்ற அறிவர் கண்டோ ர்
- பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா
- முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇ
- தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர். 182
- ஊரும் அயலும் சேரியோரும்
- நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும்
- கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது
- கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும். 183
- கிழவன்தன்னொடும் கிழத்திதன்னொடும்
- நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. 184
- ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு
- கண்டோ ர் மொழிதல் கண்டது என்ப. 185
- இடைச் சுரமருங்கின் கிழவன் கிழத்தியொடு
- வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன். 186
- ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு
- மொழிந்தாங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே. 187
- மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்
- நினையும் காலை கேட்குநர் அவரே. 188
- பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி
- யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. 189
- பரத்தை வாயில் என இரு வீற்றும்
- கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயன் இலவே. 190
- வாயில் உசாவே தம்முள் உரிய. 191
- ஞாயிறு திங்கள் அறிவே நாணே
- கடலே கானல் விலங்கே மரனே
- புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
- அவை அல பிறவும் நுதலிய நெறியான்
- சொல்லுந போலவும் கேட்குந போலவும்
- சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர். 192
- ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர் இயல் முடியும்
- கரும நிகழ்ச்சி இடம் என மொழிப. 193
- இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
- திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர
- பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும். 194
- இது நனி பயக்கும் இதன் மாறு என்னும்
- தொகு நிலைக் கிளவி பயன் எனப்படுமே. 195
- உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின்
- மெய்ப் பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும். 196
- எண் வகை இயல் நெறி பிழையாதாகி
- முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே. 197
- சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை
- புல்லிய கிளவி எச்சம் ஆகும். 198
- இவ் இடத்து இம் மொழி இவர் இவர்க்கு உரிய என்று
- அவ் இடத்து அவர் அவர்க்கு உரைப்பது முன்னம். 199
- இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
- ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி
- இது ஆகு இத் திணைக்கு உரிப் பொருள் என்னாது
- பொதுவாய் நிற்றல் பொருள் வகை என்ப. 200
- அவ் அம் மக்களும் விலங்கும் அன்றிப்
- பிற அவண் வரினும் திறவதின் நாடி
- தம்தம் இயலின் மரபொடு முடியின்
- அத் திறம்தானே துறை எனப்படுமே. 201
- அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
- இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல்
- மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின். 202
- மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி
- உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே. 203
- வண்ணம்தாமே நால் ஐந்து என்ப. 204
- அவைதாம்,
- பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
- வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
- இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்
- நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
- சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
- அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
- ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்
- எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
- தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
- உருட்டு வண்ணம் முடுகு வண்ணம் என்று
- ஆங்கு என மொழிப அறிந்திசினோரே. 205
- அவற்றுள்,
- பாஅ வண்ணம்
- சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும். 206
- தாஅ வண்ணம்
- இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும். 207
- வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. 208
- மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. 209
- இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. 210
- அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். 211
- நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். 212
- குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். 213
- சித்திர வண்ணம்
- நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே. 214
- நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். 215
- அகப்பாட்டு வண்ணம்
- முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. 216
- புறப்பாட்டு வண்ணம்
- முடிந்தது போன்று முடியாதாகும். 217
- ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும். 218
- ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும். 219
- எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். 220
- அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும். 221
- தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். 222
- ஏந்தல் வண்ணம்
- சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும். 223
- உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும். 224
- முடுகு வண்ணம்
- அடி இறந்து ஓடி அதன் ஓரற்றே. 225
- வண்ணம்தாமே இவை என மொழிப. 226
- வனப்பு இயல்தானே வகுக்கும் காலை
- சில் மென் மொழியான் தாய பனுவலின்
- அம்மைதானே அடி நிமிர்வு இன்றே. 227
- செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின்
- அவ் வகைதானே அழகு எனப்படுமே. 228
- தொன்மைதானே
- உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே. 229
- இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
- பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்
- தோல் என மொழிப தொல் மொழிப் புலவர். 230
- விருந்தேதானும்
- புதுவது புனைந்த யாப்பின் மேற்றே. 231
- ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப்
- புள்ளி இறுதி இயைபு எனப்படுமே. 232
- சேரி மொழியான் செவ்விதின் கிளந்து
- தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
- புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே. 233
- ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது
- குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து
- ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் மொழியின்
- இழைபின் இலக்கணம் இயைந்ததாகும். 234
- செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி
- இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
- வருவ உள எனினும் வந்தவற்று இயலான்
- திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே. 235