3.9 மரபியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > பொருளதிகாரம்
- மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்
- பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
- கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று
- ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே. 1
- ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
- சேவும் சேவலும் இரலையும் கலையும்
- மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
- போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
- யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2
- பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
- மூடும் நாகும் கடமையும் அளகும்
- மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
- அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே. 3
- அவற்றுள்,
- பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை. 4
- தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன. 5
- மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு
- ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய. 6
- பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை. 7
- நாயே பன்றி புலி முயல் நான்கும்
- ஆயும் காலை குருளை என்ப. 8
- நரியும் அற்றே நாடினர் கொளினே. 9
- குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார். 10
- பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை
- கொள்ளும் காலை நாய் அலங்கடையே. 11
- யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்
- ஓடும் புல்வாய் உளப்பட மறியே. 12
- கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப. 13
- மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
- அவையும் அன்ன அப் பாலான. 14
- யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்
- மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய. 15
- எருமையும் மரையும் வரையார் ஆண்டே. 16
- கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே. 17
- ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும். 18
- குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. 19
- ஆவும் எருமையும் அது சொலப்படுமே. 20
- கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும். 21
- குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
- நிரம்ப நாடின் அப் பெயர்க்கு உரிய. 22
- குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை
- கிழவ அல்ல மக்கட்கண்ணே. 23
- பிள்ளை குழவி கன்றே போத்து எனக்
- கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே. 24
- நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே. 25
- சொல்லிய மரபின் இளமைதானே
- சொல்லும் காலை அவை அல இலவே. 26
- ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
- இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
- மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
- நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
- ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
- ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. 27
- புல்லும் மரனும் ஓர் அறிவினவே
- பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 28
- நந்தும் முரளும் ஈர் அறிவினவே
- பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. 29
- சிதலும் எறும்பும் மூ அறிவினவே
- பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 30
- நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
- பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 31
- மாவும் மாக்களும் ஐ அறிவினவே
- பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 32
- மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
- பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 33
- ஒரு சார் விலங்கும் உள என மொழிப. 34
- வேழக்கு உரித்தே விதந்து களிறு என்றல். 35
- கேழற்கண்ணும் கடி வரை இன்றே. 36
- புல்வாய் புலி உழை மரையே கவரி
- சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும். 37
- வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன. 38
- ஏற்புடைத்து என்ப எருமைக்கண்ணும். 39
- பன்றி புல்வாய் உழையே கவரி
- என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய. 40
- எருமையும் மரையும் பெற்றமும் அன்ன. 41
- கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே. 42
- பெற்றம் எருமை புலி மரை புல்வாய்
- மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே. 43
- நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய. 44
- மயிலும் எழாலும் பயிலத் தோன்றும். 45
- இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய. 46
- கலை என் காட்சி உழைக்கும் உரித்தே
- நிலையிற்று அப் பெயர் முசுவின்கண்ணும். 47
- மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
- யாத்த என்ப யாட்டின்கண்ணே. 48
- சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
- மா இருந் தூவி மயில் அலங்கடையே. 49
- ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம்
- ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப. 50
- ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய
- பெண்பால் எல்லாம் பெண் எனற்கு உரிய
- காண்ப அவை அவை அப்பாலான. 51
- பிடி என் பெண் பெயர் யானை மேற்றே. 52
- ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை
- பெட்டை என்னும் பெயர்க்கொடைக்கு உரிய. 53
- புள்ளும் உரிய அப் பெயர்க்கு என்ப. 54
- பேடையும் பெடையும் நாடின் ஒன்றும். 55
- கோழி கூகை ஆயிரண்டு அல்லவை
- சூழும் காலை அளகு எனல் அமையா. 56
- அப் பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே. 57
- புல்வாய் நவ்வி உழையே கவரி
- சொல்வாய் நாடின் பிணை எனப்படுமே. 58
- பன்றி புல்வாய் நாய் என மூன்றும்
- ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை. 59
- பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. 60
- பெற்றமும் எருமையும் மரையும் ஆவே. 61
- பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய. 62
- எருமையும் மரையும் பெற்றமும் நாகே. 63
- நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே. 64
- மூடும் கடமையும் யாடு அல பெறாஅ. 65
- பாட்டி என்ப பன்றியும் நாயும். 66
- நரியும் அற்றே நாடினர் கொளினே. 67
- குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி. 68
- குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
- மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
- செவ் வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
- வெவ் வாய் வெருகினைப் பூசை என்றலும்
- குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
- இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும்
- எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
- முடிய வந்த அவ் வழக்கு உண்மையின்
- கடியல் ஆகா கடன் அறிந்தோர்க்கே. 69
- பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. 70
- நூலே கரகம் முக்கோல் மணையே
- ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. 71
- படையும் கொடியும் குடையும் முரசும்
- நடை நவில் புரவியும் களிறும் தேரும்
- தாரும் முடியும் நேர்வன பிறவும்
- தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய. 72
- அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
- ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே. 73
- பரிசில் பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்
- நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும்
- பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே. 74
- ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்
- யாரும் சார்த்தி அவை அவை பெறுமே. 75
- தலைமைக் குணச் சொலும் தம்தமக்கு உரிய
- நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப. 76
- இடை இரு வகையோர் அல்லது நாடின்
- படை வகை பெறாஅர் என்மனார் புலவர். 77
- வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. 78
- மெய் தெரி வகையின் எண் வகை உணவின்
- செய்தியும் வரையார் அப் பாலான. 79
- கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே. 80
- வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
- இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி. 81
- வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும்
- வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே. 82
- அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே. 83
- வில்லும் வேலும் கழலும் கண்ணியும்
- தாரும் மாலையும் தேரும் மாவும்
- மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய. 84
- அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை.85
- புறக் காழனவே புல் என மொழிப. 86
- அகக் காழனவே மரம் என மொழிப. 87
- தோடே மடலே ஓலை என்றா
- ஏடே இதழே பாளை என்றா
- ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
- புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர். 88
- இலையே தளிரே முறியே தோடே
- சினையே குழையே பூவே அரும்பே
- நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம்
- மரனொடு வரூஉம் கிளவி என்ப. 89
- காயே பழமே தோலே செதிளே
- வீழொடு என்று ஆங்கு அவையும் அன்ன. 90
- நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
- கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
- இரு திணை ஐம் பால் இயல் நெறி வழாஅமைத்
- திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும். 91
- மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
- மரபு வழிப் பட்ட சொல்லினானே. 92
- மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும். 93
- வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
- நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான. 94
- மரபுநிலை திரியா மாட்சிய ஆகி
- உரை படு நூல்தாம் இரு வகை இயல
- முதலும் வழியும் என நுதலிய நெறியின. 95
- வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
- முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். 96
- வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும். 97
- வழியின் நெறியே நால் வகைத்து ஆகும். 98
- தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
- அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே. 99
- ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
- மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி
- ஈர் ஐங் குற்றமும் இன்றி நேரிதின்
- முப்பத்திரு வகை உத்தியொடு புணரின்
- நூல் என மொழிப நுணங்கு மொழிப் புலவர். 100
- உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம்
- புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்
- விதித்தலும் விலக்கலும் என இரு வகையொடு
- புரை தப நாடிப் புணர்க்கவும் படுமே. 101
- மேற் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு
- சில் வகை எழுத்தின் செய்யுட்கு ஆகி
- சொல்லும் காலை உரை அகத்து அடக்கி
- நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி
- துளக்கல் ஆகாத் துணைமை எய்தி
- அளக்கல் ஆகா அரும் பொருட்டு ஆகி
- பல வகையானும் பயன் தெரிபு உடையது
- சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர். 102
- பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின்
- கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும். 103
- விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்தி
- சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா
- ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்
- மேவாங்கு அமைந்த மெய்ந் நெறித்து அதுவே. 104
- சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற
- இன்றியமையாது இயைபவை எல்லாம்
- ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே. 105
- மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்
- தன் நூலானும் முடிந்த நூலானும்
- ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி
- தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ
- துணிவொடு நிற்றல் என்மனார் புலவர். 106
- சொல்லப்பட்டன எல்லா மாண்பும்
- மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே. 107
- சிதைவு இல் என்ப முதல்வன் கண்ணே. 108
- முதல் வழி ஆயினும் யாப்பினுள் சிதையும்
- வல்லோன் புணரா வாரம் போன்றே. 109
- சிதைவு எனப்படுபவை வசை அற நாடின்
- கூறியது கூறல் மாறு கொளக் கூறல்
- குன்றக் கூறல் மிகை படக் கூறல்
- பொருள் இல கூறல் மயங்கக் கூறல்
- கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்
- பழித்த மொழியான் இழுக்கம் கூறல்
- தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
- என்ன வகையினும் மனம் கோள் இன்மை
- அன்ன பிறவும் அவற்று விரி ஆகும். 110
- எதிர் மறுத்து உணரின் அத் திறத்தவும் அவையே. 111
- ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்
- நுதலியது அறிதல் அதிகார முறையே
- தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந் நிறுத்தல்
- மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்
- மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்
- வாராததனான் வந்தது முடித்தல்
- வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்
- முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே
- ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல்
- தன் கோள் கூறல் முறை பிறழாமை
- பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்
- இறந்தது காத்தல் எதிரது போற்றல்
- மொழிவாம் என்றல் கூறிற்று என்றல்
- தான் குறியிடுதல் ஒருதலை அன்மை
- முடிந்தது காட்டல் ஆணை கூறல்
- பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்
- தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்
- மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்
- பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல்
- பொருள் இடையிடுதல் எதிர் பொருள் உணர்த்தல்
- சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்
- தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல்
- உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச்
- சொல்லிய அல்ல பிற அவண் வரினும்
- சொல்லிய வகையான் சுருங்க நாடி
- மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்துகொண்டு
- இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
- நுனித்தகு புலவர் கூறிய நூலே. 112