4. நான்காம் பத்து
Wikibooks தளத்திலிருந்து
பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்
பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்
பொருளடக்கம் |
[தொகு] பாட்டு - 31
-
- குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
- மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக்
- கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்து
- நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத்
- 5 தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென
- உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
- வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
- கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
- அலங்கற் செல்வன் சேவடி பரவி
- 10 நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர
- மணிநிற மையிருள் அகல நிலாவிரிபு
- கோடுகூடு மதியம் இயல்உற் றாங்குத்
- துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்(டு)
- ஆண்கடன் நிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
- 15 கருவி வானம் தண்தளி தலைஇய
- வடதெற்கு விலங்கி விலகுதலைத்(து) எழிலிய
- பனிவார் விண்டு விறல்வரை அற்றே
- கடவுள் அஞ்சி வானத்(து) இழைத்த
- தூங்(கு)எயில் கதவம் காவல் கொண்ட
- 20 எழூஉநிவந்(து) அன்ன பரேர்எறுழ் முழவுத்தோள்
- வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து
- வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
- வண்டன் அனையைமன் நீயே வண்டுபட
- ஒலிந்த கூந்தல் அறம்சால் கற்பின்
- 25 குழைக்குவிளக்(கு) ஆகிய அவ்வாங்(கு) உந்தி
- விசும்புவழங்கு மகளிர் உள்ளும் சிறந்த
- செம்மீன் அனையள்நின் தொல்நகர்ச் செல்வி
- நிலன்அதிர்(பு) இரங்கல ஆகி வலன்ஏர்பு
- வியன்பணை முழங்கும் வேல்மூ(சு) அழுவத்(து)
- 30 அடங்கிய புடையல் பொலம்கழல் நோன்தாள்
- ஒடுங்காத் தெவ்வர் ஊக்(கு)அறக் கடைஇப்
- புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்
- நகைவர்க்(கு) அரணம் ஆகிப் பகைவர்க்குச்
- சூர்நிகழ்ந் தற்றுநின் தானை
- 35 போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே. (31)
-
- பெயர்: கமழ்குரல் துழாய்
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
[தொகு] பாட்டு - 32
-
- மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
- மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
- முத்(து)உடை மருப்பின் மழகளிறு பிளிற
- மிக்(கு)எழு கடும்தார் துய்த்தலைச் சென்று
- 5 துப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்ப
- ஈத்(து)ஆன்(று) ஆனா விடன்உடை வளனும்
- துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
- எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந
- கொன்ஒன்று மருண்டனென் அடுபோர்க் கொற்றவ
- 10 நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
- பெருமலை யானையொடு புலம்கெட இறுத்துத்
- தடந்தாள் நாரை படிந்(து)இரை கவரும்
- முடந்தை நெல்லின் கழைஅமல் கழனிப்
- பிழையா விளையுள் நா(டு)அகப் படுத்து
- 15 வையா மாலையர் வசையுநர்க்(கு) அறுத்த
- பகைவர் தேஎத்(து) ஆயினும்
- சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே. (32)
-
- பெயர்: கழையமல் கழனி
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
[தொகு] பாட்டு - 33
-
- இறும்பூதால் பெரிதே கொடித்தேர் அண்ணல்
- வடிமணி அனைத்த பனைமருள் நோன்தாள்
- கடிமரத்தான் களி(று)அணைத்து
- நெடுநீர துறைகலங்க
- 5 மூழ்த்(து)இறுத்த வியன்தானையொடு
- புலம்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
- வாள்மதில் ஆக வேல்மிளை உயர்த்து
- வில்இசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்
- செவ்வாய் எஃகம் வளைஇய அகழின்
- 10 கார்இடி உருமின் உரறும் முரசின்
- கால்வழங்(கு) ஆர்எயில் கருதின்
- போர்எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே. (33)
-
- பெயர்: வரம்பில் வெள்ளம்
- துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
[தொகு] பாட்டு - 34
-
- ஒரூஉப நின்னை ஒருபெரு வேந்தே
- ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழல்கால்
- இருநிலம் தோயும் விரிநூல் அறுவையர்
- செவ்உளைய மாஊர்ந்து
- 5 நெடும்கொடிய தேர்மிசையும்
- ஓடை விளங்கும் உருகெழு புகர்நுதல்
- பொன்அணி யானை முரண்சேர் எருத்தினும்
- மன்நிலத்(து) அமைந்த ..................
- மாறா மைந்தர் மாறுநிலை தேய
- 10 முரை(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழ
- அரைசுபடக் கடக்கும் ஆற்றல்
- புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே. (34)
-
- பெயர்: ஒண்பொறிக் கழற்கால்
- துறை: தும்பையரவம்
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
[தொகு] பாட்டு - 35
-
- புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே
- உரைசான் றனவால் பெருமைநின் வென்றி
- இரும்களிற்று யானை இலங்குவால் மருப்பொடு
- நெடும்தேர்த் திகிரி தாய வியன்களத்(து)
- 5 அள(கு)உடைச் சேவல் கிளைபுகா வாரத்
- தலைதுமிந்(து) எஞ்சிய மெய்ஆடு பறந்தலை
- அந்தி மாலை விசும்புகண் டன்ன
- செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்
- பேஎய் ஆடும் வெல்போர்
- 10 வீயா யாணர் நின்வயி னானே. (35)
-
- பெயர்: மெய்யாடு பறந்தலை
- துறை: வாகைத்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
[தொகு] பாட்டு - 36
-
- வீயா யாணர் நின்வயி னானே
- தாவா(து) ஆகு மலிபெறு வயவே
- மல்லல் உள்ளமொடு வம்(பு)அமர்க் கடந்து
- செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
- 5 பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன்
- யானை பட்ட வாள்மயங்கு கடும்தார்
- மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர்
- பொறித்த போலும் புள்ளி எருத்தின்
- புன்புற எருவைப் பெடைபுணர் சேவல்
- 10 குடுமி எழாலொடு கொண்டுகிழக்(கு) இழிய
- நிலம்இழி நிவப்பின் நீள்நிரை பலசுமந்(து)
- உருஎழு கூளியர் உண்டுமகிழ்ந்(து) ஆடக்
- குருதிச் செம்புனல் ஒழுகச்
- செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே. (36)
-
- பெயர்: வாண்மயங்கு கடுந்தார்
- துறை: களவழி
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
[தொகு] பாட்டு - 37
-
- வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை
- வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்
- பகைவர் ஆரப் பழங்கண் அருளி
- நகைவர் ஆர நன்கலம் சிதறி
- 5 ஆன்(று)அவிந்(து) அடங்கிய செயிர்தீர் செம்மல்
- வான்தோய் நல்இசை உலகமொ(டு) உயிர்ப்பத்
- துளங்குடி திருத்திய வலம்படு வென்றியும்
- மாஇரும் புடையல் மாக்கழல் புனைந்து
- மன்எயில் எறிந்து மறவர்த் தாணஇத்
- 10 தொல்நிலைச் சிறப்பின் நின்நிழல் வாழ்நர்க்குக்
- கோ(டு)அற வைத்த கோடாக் கொள்கையும்
- நன்றுபெரி(து) உடையையால் நீயே
- வெந்திறல் வேந்தேஇவ் வுலகத் தோர்க்கே. (37)
-
- பெயர்: வலம்படு வென்றி
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
[தொகு] பாட்டு - 38
-
- உலகத் தோரே பலர்மன் செல்வர்
- எல்லா ருள்ளும்நின் நல்இசை மிகுமே
- வளம்தலை மயங்கிய பைதிரம் திருத்திய
- களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
- 5 எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின்
- தோட்டி தந்த தொடிமருப்பு யானைச்
- செவ்உளைக் கலிமா ஈணகை வான்கழல்
- செயல்அமை கண்ணிச் சேரலர் வேந்தே
- பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை
- 10 வாள்நுதல் கணவ! மள்ளர் ஏறே!
- மைஅற விளங்கிய வடுவாழ் மார்பின்
- வசையில் செல்வ! வான வரம்ப!
- இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
- தருகென விழையாத் தாஇல் நெஞ்சத்துப்
- 15 பகுத்(து)ஊண் தொகுத்த ஆண்மைப்
- பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே. (38)
-
- பெயர்: பரிசிலர் வெறுக்கை
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
[தொகு] பாட்டு - 39
-
- பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே
- எமக்கில்என் னார்நின் மறம்கூறு குழாத்தர்
- துப்புத்துறை போகிய வெப்(பு)உடைத் தும்பைக்
- கறுத்த தெவ்வர் கடிமுனை அலற
- 5 எடுத்(து)எறிந்(து) இரங்கும் ஏவல் வியன்பனை
- உரும்என அதிர்பட்டு முழங்கிச் செருமிக்(கு)
- அடங்கார் ஆர்அரண் வாடச் செல்லும்
- காலன் அனைய கடும்சின முன்ப
- வாலிதின், நூலின்இழையா நுண்மயிர் இழைய
- 10 பொறித்த போலும் புள்ளி எருத்தின்
- புன்புறப் புறவின் கணநிரை அலற
- அலந்தலை வேலத்(து) உலவை அம்சினைச்
- சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
- இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்(து)
- 15 அவிர்இழை தைஇ மின்உமிழ்(பு) இலங்கச்
- சீர்மிகு முத்தம் தைஇய
- நார்முடிச் சேரல்நின் போர்நிழல் புகன்றே. (39)
-
- பெயர்: ஏவல் வியன்பணை
- துறை: வாகை
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
[தொகு] பாட்டு - 40
-
- போர்நிழல் புகன்ற சுற்றமொ(டு) ஊர்முகத்(து)
- இறாஅ லியரோ பெருமநின் தானை
- இன்இசை இமிழ்முர(சு) இயம்பக் கடிப்பிகூஉப்
- புண்டோ ள் ஆடவர் போர்முகத்(து) இறுப்பக்
- 5 காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல்
- வந்(து)இறை கொண்டன்று தானை அந்தில்
- களைநர் யார்இனிப் பிறர்எனப் பேணி
- மன்எயில் மறவர் ஒலிஅவிந்(து) அடங்க
- ஒன்னார் தேயப் பூமலைந்(து) உரைஇ
- 10 வெண்தோடு நிரைஇய வேந்(து)உடை அரும்சமம்
- கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி
- வென்றி ஆடிய தொடித்தோள் மீகை
- எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
- பொன்அம் கண்ணிப் பொலம்தேர் நன்னன்
- 15 சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த
- தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
- புன்கால் உன்னம் சாயத் தெள்கண்
- வறிதுகூட்(டு) அரியல் இரவலர்த் தடுப்பத்
- தான்தர உண்ட நனைநறவு மகிழ்ந்து
- 20 நீர்இமிழ் சிலம்பின் நேரி யோனே
- செல்லா யோதில் சில்வளை விறலி
- மலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்து
- மெல்இயல் மகளிர் எழில்நலம் சிறப்பப்
- பாணர் பைம்பூ மலைய இளையர்
- 25 இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து
- நெஞ்சுமலி உவகையர் வியன்களம் வாழ்த்தத்
- தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
- பாகர் ஏவலின் ஒண்பொறி பிசிரக்
- காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர்சுடர்
- 30 அழல்விடுபு மாணஇய மைந்தின்
- தொழில்புகல் யானை நல்குவன் பலவே. (40)
-
- பெயர்: நாடுகாண் அவிர்சுடர்
- துறை: விறலியாற்றுப்படை
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
[தொகு] பதிகம்
-
- ஆராத் திருவிற் சேர லாதற்கு
- வேளாவிக் கோமான்
- பதுமன் தேவி ஈன்ற மகன்முனை
- பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்(து)
- 5 ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின்
- பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ
- உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
- நிலைச்செருவி னால்தலை யறுத்(து)அவன்
- பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
- 10 குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச்
- செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
- துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்
- களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்
- காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.
- அவைதாம்:
- கம்ழகுரற் றுழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால்,
- மெய்யாடுபறந்தலை, வான்மயங்கு கடுந்தார், வலம்படு வென்றி, பரிசிலர்வெறுக்கை,
- ஏவல் வியன்பனை, நாடுகானவிர்சுடர். இவை பாட்டின் பதிகம்.
- பாடிப்பெற்ற
- பரிசில்: நாற்பதுநூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆளவ்திற் பாகங்கொடுத்தான்
- அக்கோ. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.