4 கலிங்கத்துப் பரணி கோயில் பாடியது

Wikibooks தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

கலிங்கத்துப் பரணி>


பழையகோயிலும் புதியகோயிலும்

97 ஓதி வந்தவக் கொடிய கானகத் துறைய ணங்கினுக் கயன்வ குத்தவிப்

பூத லம்பழங் கோயி லென்னினும் புதிய கோயிலுண் டதுவி ளம்புவாம். 1


புதிய கோயிலுக்குக் கடைக்கால்

98 வட்ட வெண்குடைச் சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடைப்

பட்ட மன்னர்தம் பட்ட மங்கையர் பரும ணிக்கருத் திருவி ருத்தியே. 2


கோயில் இயல்பு

99 துவர்நி றக்களிற் றுதிய ரேவலிற் சுரிகை போர்முகத் துருவி நேரெதிர்த்

தவர்நி ணத்தொடக் குருதி நீர்குழைத் தவர்க ருந்தலைச் சுவர டுக்கியே. 3


தூணும் உத்தரமும்

100 அறிஞர் தம்பிரா னபயன் வாரணம் அரசர் மண்டலத் தரண றப்பறித்

தெறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண் டெழுது தூணொடு த் திரமி யற்றியே. 4


கை மரமும் பரப்பு மரமும்

101 கடித ழிந்துபோர் மிதிலை யிற்படுங் கரிம ருப்பினைத் திரள் துலாமெனும்

படிப ரப்பியப் பரும யானையின் பழுவெ லும்பினிற் பாவ டுக்கியே. 5


மேல் முகடு

102 மீளி மாவுகைத் தபயன் முன்னொர்நாள் விருத ராசரைப் பொருது கொண்டபோர்

ஆளி வாரணங் கேழல் சீயமென் றவை நிரைத்துநா சிகையி ருத்தியே. 6


வெற்றிடத்தை மூடுதல்

103 துங்க பத்திரைச் செங்க ளத்திடைச் சோள சேகரன் வாளெ றிந்தபோர்

வெங்க தக்களிற் றின்ப டத்தினால் வெளிய டங்கவே மிசைக விக்கவே. 7


கோபுரமும் நெடுமதிலும்

104 கொள்ளிவாய்ப் பேய்காக்குங் கோபுரமு நெடுமதிலும்

வெள்ளியாற் சமைத்ததென வெள்ளெலும்பி னாற்சமைத்தே. 8


கோயில் வாயிலில் மகரதோரணம்

105 காரிரும்பின் மகரதோ ரணமாகக் கரும்பேய்கள்

ஓரிரண்டு கால்நாட்டி யோரிரும்பே மிசைவளைத்தே. 9


மதில்களின் காட்சி

106 மயிற்கழுத்துங் கழுத்தரிய மலர்ந்தமுகத் தாமரையு மருங்கு சூழ்ந்த

எயிற்கழுத்து நிணக்கொடியு மிளங்குழவிப் பசுந்தலையு மெங்குந் தூக்கி. 10


மதுரையின் மகரதோரணம்

107 பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின் செவிச்சுளகு பலவுந் தூக்கி

மணியூச லெனமதுரை மகரதோ ரணம்பறித்து மறித்து நாட்டி. 11


ஈம விளக்கு

108 பரிவிருத்தி யலகிட்டுப் பசுங்குருதி நீர்தெளித்து நிணப்பூச் சிந்தி

எரிவிரித்த ஈமவிளக் கெம்மருங்கும் ஏற்றியதோ ரியல்பிற் றாலோ. 12


வீரர்களின் பேரொலி

109 சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்

பலியாக வுறுப்பரிந்து தருது மென்று பரவுமொலி கடலொலிபோற் பரக்குமாலோ. 13


வீர வழிபாடு

110 சொல்லரிய ஓமத்தீ வளர்ப்ப ராலோ தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி

வல்லெரியின் மிசையெரிய விடுவ ராலோ வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ. 14


தலை துதிக்கும் முண்டம் வழிபடும்

111 அடிக்கழுத்தி னெடுஞ்சிரத்தை யரிவ ராலோ

அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ

கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ

குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ. 15


அச்சுறுத்தும் தலைகள்

112 நீண்டபலி பீடத்தி லரிந்து வைத்த

நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி

ஆண்டலைப்புள் ளருகணைந்து பார்க்கு மாலோ

அணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ. 16


அஞ்சி அலைந்தன

113 கடன மைந்ததுக ருந்தலைய ரிந்த பொழுதே கடவ

தொன்றுமிலை யென்றுவிளை யாடு முடலே

உடல்வி ழுந்திடினு கர்ந்திடவு வந்த சிலபேய்

உறுபெ ரும்பசியு டன்றிடவு டன்றி ரியுமே. 17


குரல் ஒலியும் வாத்திய ஒலியும்

114 பகடி டந்துகொள்ப சுங்குருதி யின்று தலைவீ

பலிகொ ளென்றகுர லெண்டிசைபி ளந்து மிசைவான்

முகடி டந்துருமெ றிந்தெனமு ழங்க வுடனே

மொகுமொ கென்றொலிமி குந்தமரு கங்கள் பலவே. 18


மெய்க் காப்பாளர்கள்

115 தமரு கங்கள்தரு கின்றசதி யின்கண் வருவார்

அமரி யின்புறும நாதிவரு சாத கர்களே. 19


யோகினிப் பெண்கள்

116 படைவ லங்கொடுப சுந்தலையி டங்கொ டணைவார்

இடைமொ ழிந்திடைநு டங்கவரு யோகி னிகளே. 20


பெருந்தலை கண்டு பேய் உறங்காமை

117 வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந் திசைதோறும் விழித்து நின்று

தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய். 21


காலன் இடும் தூண்டில்

118 அரிந்ததலை யுடனமர்ந்தே ஆடுகழை அலைகுருதிப் புனலின் மூழ்கி

இருந்தவுடல் கொளக்கால னிடுகின்ற நெடுந்தூண்டி லென்னத் தோன்றும். 22


கொள்ளிவாய்ப் பேயின் தன்மை

119 கொல்வா யோரி முழவாகக் கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு

நல்வாய்ச் செய்ய தசைதேடி நரிவாய்த் தசையைப் பறிக்குமால். 23


கோயிலைச் சுற்றியுள்ள சுடலை

120 நிணமுந் தசையும் பருந்திசிப்ப நெருப்பும் பருத்தி யும்பொன்று

பிணமும் பேயுஞ் சுடுகாடும் பிணங்கு நரியு முடைத்தரோ. 24

தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்