6 கலிங்கத்துப் பரணி பேய்களைப் பாடியது
Wikibooks தளத்திலிருந்து
காளியின் பெருமை
134 எவ்வணங்கு மடிவணங்க இப்பெருமை படைத்துடைய
அவ்வணங்கை யகலாத அலகைகளை யினிப்பகர்வாம். 1
பேய்களின் காலும் கையும்
135 பெருநெ டும்பசி பெய்கல மாவன பிற்றை நாளின்முன் னாளின்மெ லிவன
கருநெ டும்பனங் காடுமு ழுமையுங் காலுங் கையுமு டையன போல்வன. 2
வாய் வயிறு முழங்கால்கள்
136 வன்பி லத்தொடு வாதுசெய் வாயின வாயி னானிறை யாதவ யிற்றின
முன்பி ருக்கின்மு கத்தினு மேற்செல மும்மு ழம்படு மம்முழந் தாளின. 3
பேய்களின் உடம்பு
137 வெற்றெ லும்பைந ரம்பின்வ லித்துமேல் வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின
கொற்ற லம்பெறு கூழில மெங்களைக் கொள்வ தேபணி யென்றுகு ரைப்பன. 4
கன்னங்களும் விழிகளும்
138 உள்ளொ டுங்கியி ரண்டுமொன் றாகவே ஒட்டி யொட்டுவி டாதகொ டிற்றின
கொள்ளி கொண்டிரண் டேமுழை யுட்புகிற் குன்று தோன்றுவ போலவி ழிப்பன. 5
முதுகும் கொப்பூழும்
139 வற்ற லாகவு லர்ந்தமு துகுகள் மரக்க லத்தின்ம றிபுற மொப்பன
ஒற்றை வான்றொளைப் புற்றெனப் பாம்புடன் உடும்பு முட்புக்கு றங்கிடு முந்திய. 6
உடல் மயிர் மூக்கு காது
140 பாந்தள் நால்வன போலுமு டல்மயிர் பாசி பட்டப ழந்தொளை மூக்கின
ஆந்தை பாந்தி யிருப்பத் துரிஞ்சில்புக் கங்கு மிங்குமு லாவு செவியின. 7
பல் தாலி தலை உதடு
141 கொட்டும் மேழியுங் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடைக் கோத்தணி தாலிய
தட்டி வானைத் தகர்க்குந் தலையின தாழ்ந்து மார்பிடைத் தட்டு முதட்டின. 8
தாய்ப்பேயும் பிள்ளைப்பேயும்
142 அட்ட மிட்ட நெடுங்கழை காணிலென் அன்னை யன்னையென் றாலுங் குழவிய
ஒட்ட ஒட்டகங் காணிலென் பிள்ளையை ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன. 9
ஆற்றாத பசி
143 புயல ளிப்பன மேலும ளித்திடும் பொற்க ரத் தப யன்புலி பின்செலக்
கயலொ ளித்தக டுஞ்சுரம் போலகங் காந்து வெம்பசி யிற்புறந் தீந்தவும். 10
காளியைப் பிரியாத பேய்கள்
144 துஞ்ச லுக்கணித் தாமென முன்னமே சொன்ன சொன்னது றைதொறும் பேயெலாம்
அஞ்ச லித்தொரு காலக லாமலவ் வணங்கி னுக்கரு காகவி ருக்கவே. 11
நொண்டிப் பேய்
145 ஆளைச் சீறுக ளிற்றப யன்பொரூஉம் அக்க ளத்தில ரசர்சி ரஞ்சொரி
மூளைச் சேற்றில் வழுக்கி விழுந்திட மொழிபெ யர்ந்தொரு கால்முட மானவும். 12
கை ஒடிந்த பேய்
146 அந்த நாளக்க ளத்தடு கூழினுக் காய்ந்த வெண்பல் லரிசி யுரற்புக
உந்து போதினிற் போதகக் கொம்பெனும் உலக்கை பட்டுவ லக்கைசொற் றானவும். 13
குருட்டுப் பேய்
147 விருத ராசப யங்கரன் முன்னொர்நாள் வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங்
குருதி யுங்குட ருங்கலந் தட்டவெங் கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும். 14
ஊமைப் பேய்
148 வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா மதுரை வெங்களத் தேமது ரிக்கவட்
டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபுக் குள்வி ழுந்தற ஊமைகள் ஆனவும். 15
செவிட்டுப் பேய்
149 ஆனை சாயவ டுபரி யொன்றுகைத் தைம்ப டைப்பரு வத்தப யன்பொருஞ்
சேனை வீரர்நின் றார்த்திடு மார்ப்பினில் திமிரி வெங்களத் திற்செவி டானவும். 16
குட்டைப் பேய்
150 பண்டு தென்னவர் சாயவ தற்குமுன் பணிசெய் பூதக ணங்கள னைத்தையுங்
கொண்டு வந்தபேய் கூடிய போதிலக் குமரி மாதர்பெ றக்குற ளானவும். 17
கூன் பேய்
151 பரக்கு மோதக்க டாரம ழித்தநாள் பாய்ந்த செம்புன லாடியும் நீந்தியுங்
குரக்கு வாதம்பி டித்தவி தத்தினிற் குடிய டங்கலுங் கூன்முது கானவும். 18
கடல் விளையாட்டு
152 சிங்க ளத்தொடு தென்மது ராபுரி செற்ற கொற்றவன் வெற்றிகொள் காலையே
வெங்க ளத்தில டுமடைப் பேய்க்குலம் வேலை புக்குவி ரல்கள் திறந்தவும். 19