8 கலிங்கத்துப் பரணி இராச பாரம்பரியம்

Wikibooks தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

கலிங்கத்துப் பரணி>


இமயத்தில் புலிக்கொடி

178 செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்

சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்

பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்

பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே. 1


நாரதர் கூறல்

179 கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனுங்

கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின்

போலு மன்னருள ரல்லரென ஆசி புகலாப்

புகல்வ தொன்றுளது கேளரச வென்று புகல்வான். 2


விநாயகர் பாரதம் எழுதினார்

180 பண்டு பாரதமெ னுங்கதை பராச ரன்மகன்

பகர வெங்கரிமு கன்பரு மருப்பை யொருகைக்

கொண்டு மேருசிக ரத்தொரு புறத்தி லெழுதிக்

குவல யம்பெறு தவப்பய னுரைப்ப வரிதால். 3

181 பார தத்தினுள வாகிய பவித்ர கதையெம்

பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே

நேர தற்கிதனை நான்மொழிய நீயு மெழுதி

நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதையே. 4


இதுவும் வேதம் ஆகும்

182 அதன் முதற்கண்வரு மாதிமுதன் மாய னிவனே

அப்ர மேயமெனு மெய்ப்ரியம தாக வுடனே

பதமு மிப்பதம் வகுக்கவரு பாத மதுவும்

பாத மானசில பார்புகழ வந்த அவையும். 5

183 அந்த முட்பட விருக்குமவ் விருக்கின் வழியே

ஆகி வந்தவவ் வருக்கமும் வருக்க முழுதும்

வந்த அட்டகமு மொட்டரிய சங்கி தைகளும்

வாய்மை வேதியர்கள் தாம்விதி யெனும் வகையுமே. 6

184 கமல யோனிமுத லாகவரு முங்கள் மரபிற்

காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால்

அமல வேதமிது காணுமிதி லார ணநிலத்

தமல னேயபய னாகிவரு கென்ற ருளியே. 7


நாரதர் இருப்பிடம் செல்லல்

185 அரணி வேள்வியி லகப்படு மகண்ட வுருவாய்

அரவ ணைத்துயிலு மாதிமுத லாக வபயன்

தரணி காவலள வுஞ்செல மொழிந்து முனிவன்

தானெ ழுந்தருள மாமுனி மொழிந்த படியே. 8


நாரதர் கூறிய வரலாறு

186 ஆதி மாலமல நாபிகம லத்த யனுதித்

தயன் மரீசியெனும் அண்ணலை யளித்த பரிசுங்

காதல் கூர்தரு மரீசிமக னாகி வளருங்

காசி பன்கதி ரருக்கனை யளித்த பரிசும். 9

187 அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதினி புரந்

தரிய காதலனை யாவினது கன்று நிகரென்

றெவ்வ ருக்கமும் வியப்பமுறை செய்த கதையும்

இக்கு வாகுவிவன் மைந்தனென வந்த பரிசும். 10

188 இக்கு வாகுவின் மகன்புதல்வ னான வுரவோன்

இகலு வோனிகலு ரஞ்செய்து புரந்த ரனெனுஞ்

சக்கு வாயிர முடைக்களிறு வாகன மெனத்

தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும். 11

189 ஒருது றைப்புனல்சி னப்புலியு மானு முடனே

உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும்

பொருது றைத்தலைபு குந்துமுசு குந்த னிமையோர்

புரம டங்கலும ரண்செய்து புரந்த புகழும். 12

190 கடல் கலக்கவெழு மின்னமுது தன்னை யொருவன்

கடவுள் வானவர்க ளுண்ணவருள் செய்த கதையும்

உடல்க லக்கற அரிந்துதசை யிட்டு மொருவன்

ஒருது லைப்புறவொ டொக்கநிறை புக்க புகழும். 13

191 சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள்

சோழ மண்டலம மைத்தபிற கேழு லகையும்

இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம்

இருவ ராணைபுலி ஆணையென நின்ற இதுவும். 14

192 கால னுக்கிது வழக்கென வுரைத்த அவனும்

காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின்

மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல்

வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும். 15

193 புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த அவனும்

புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்ட அவனும்

வலியி னிற்குருதி யுண்கென வளித்த அவனும்

வாத ராசனைவ லிந்துபணி கொண்ட அவனும். 16

194 தேங்கு தூங்கெயிலெ றிந்தவவ னுந்தி ரள்மணிச்

சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த அவனும்

தாங்கள் பாரதமு டிப்பளவும் நின்று தருமன்

தன்க டற்படைத னக்குதவி செய்த அவனும். 17

195 தளவ ழிக்குநகை வேல்விழி பிலத்தின் வழியே

தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட அவனும்

களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன்

கால்வ ழித் தளையை வெட்டியர சிட்ட அவனும். 18


கரிகால் வளவன்

196 என்று மற்றவர்கள் தங்கள்சரி தங்கள் பலவும்

எழுதி மீளவிதன் மேல்வழுதி சேரன் மடியத்

தன்ற னிக்களி றணைந்தருளி வீர மகள்தன்

தனத டங்களொடு தன்புய மணைந்த பரிசும். 19

197 தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்

தொடர வந்திலா முகரி யைப்படத்

தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்

றிங்க ழிக்கவே அங்க ழிந்ததும். 20


198 தத்து நீர்வரால் குருமி வென்றதுந்

தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்

பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்

பண்டு பட்டினப் பாலை கொண்டதும். 21

199 ஒருவர் முன்னொர்நாள் தந்து பின்செலா

உதியர் மன்னரே மதுரை மன்னரென்

றிருவர் தம்மையுங் கிழிகள் சுற்றுவித்

தெரிவி ளக்குவைத் திகல்வி ளைத்ததும். 22


முதலாம் பராந்தகன்

200 வேழ மொன்றுகைத் தாலி விண்ணின்வாய் விசைய டங்கவு மசைய வென்றதும்

ஈழ முந்தமிழ்க் கூடலுஞ் சிதைத் திகல்க டந்ததோ ரிசைப ரந்ததும். 23

முதலாம் இராசராச சோழன்

201 சதய நாள்விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன் றனியொர் மாவின்மேல்

உதய பானுவொத் துதகை வென்றகோன் ஒருகை வாரணம் பலக வர்ந்ததும். 24

முதலாம் இராசேந்திர சோழன்

202 களிறு கங்கைநீ ருண்ண மண்ணையிற் காய்சி னத்தொடே கலவு செம்பியன்

குளிறு தெண்டிரைக் குரைக டாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும். 25

முதலாம் இராசாதிராசன்

203 கம்பி லிச்சயத் தம்பம் நட்டதுங் கடிய ரண்கொள்கல் யாணர் கட்டறக்

கிம்பு ரிப்பணைக் கிரியு கைத்தவன் கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும். 26

இராசேந்திர சோழன்

204 ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத் துலகு யக்கொளப் பொருது கொப்பையிற்

பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும். 27

இராச மகேந்திரன்

205 பனுவலுக்கு முதலாய வேத நான்கிற்

பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கள்

மனுவினுக்கு மும்மடிநான் மடியாஞ் சோழன்

மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும். 28

முதற் குலோத்துங்கன் தோற்றம்

206 குந்தளரைக் கூடற்சங் கமத்து வென்ற கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை

இந்தநிலக் குலப்பாவை யிவன்பாற் சேர என்ன தவஞ் செய்திருந்தா ளென்னத் தோன்றி. 29


வெற்றிச் சிறப்பு

207 எவ்வளவு திரிபுவன முளவாய்த் தோன்றும் எவ்வளவு குலமறைக ளுளவாய் நிற்கும்

அவ்வளவு திகிரிவரை யளவுஞ் செங்கோல் ஆணைசெல்ல வபயன்காத் தளிக்கு மாறும். 30

கரிகாலன் எழுதி முடித்தான்

208 இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்

தெழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி

ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல்

உரைசெய் பல்புகழு மொன்றுமொழி யாத பரிசே. 31


காளி வியத்தல்

209 எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம்

எமர்பொ றுக்கவென விப்படிமு டித்த விதனைத்

தொழுது கற்றனமெ னத்தொழுது சொல்லு மளவிற்

சோழ வம்சமிது சொன்னவறி வென்னவழகோ. 32


காளி மகிழ்தல்

210 வையகமாங் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபு கேட்டே

ஐயனையான் பெற்றெடுத்த வப்பொழுதும் இப்பொழுதொத் திருந்த தில்லை. 33


காளி புகழ்தல்

211 உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகைச் சயதுங்கன் மரபு கீர்த்தி

அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ தலங்காப்பா னவனே யென்ன. 34

தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்