நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/4ம் திருமொழி

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 08:13, 2 ஜூலை 2006 (UTC)

	        திருவேங்கடமுடையான்

  	   தரவு கொச்சகக் கலிப்பா

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்*
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்*
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து*
கோனேரி வாழும்  குருகாய்ப் பிறப்பேனே.                            1

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ*
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்*
தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்*
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.                          2

பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்*
துன்னிட்டு புகலரிய வைகுந்த  நீள்வாசல்*
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்*
பொன்வட்டில்  பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே.                  3

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்*
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு*
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து*
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே.                       4

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்*
தம்பகமாய் நிற்கும்  தவமுடையே னாவேனே.                        5

மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்*
அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்*
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்*
அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே.                 6

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்*
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்*
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே.                        7

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்*
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்*
வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்*
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே.                      8

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!*
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்*
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்*
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.                          9

உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்*
செம்பவள வாயான்  திருவேங் கடமென்னும்*
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே.                  10

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்*
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி*
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன*
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே.                     11

குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்