8-வது திருமொழி - பொன்னியற்கிண்கிணி
அச்சோப் பருவம்
[தொகு]கலித்தாழிசை
பொன்னியற் கிண்கிணி சுட்டிபுறம் கட்டி*
தன்னிய லோசை சலன்சல னென்றிட*
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்*
என்னிடைக் கோட்டாரா அச்சோவச்சோ எம்பெருமான்!வாரா அச்சோவச்சோ. (1)
செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டேபோல்*
பங்கிகள் வந்து உன் பவள வாய்மொய்ப்ப*
சஙகுவில் வாள்தண்டு சக்கர மேந்திய*
அங்கைகளாலே வந்து அச்சோவச்சோ ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ. (2)
பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து*
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கை புக்கு*
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சண வண்ணனே!அச்சோவச்சோ ஆயர்பெருமானே! அச்சோவச்சோ. (3)
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன*
தேறி அவளும் திருவுடம்பில் பூச*
ஊறிய கூனினை உள்ளே யொடுங்க* அன்று
ஏறவுருவினாய்!அச்சோவச்சோ எம்பெருமான்!வாரா அச்சோவச்சோ. (4)
கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி*
எழலுற்று மீண்டே இருநதுஉன்னை நோக்கும்*
சுழலைப் பெரிதுடைத் துச்சோ தனனை*
அழல விழித்தானே!அச்சோவச்சோ ஆழியங்கையனே! அச்சோவச்சோ. (5)
போரொக்கப் பண்ணி இப்பூமிப் பொறைதீர்ப்பான்*
தேரொக்க வூர்ந்தாய் ! செழுந்தார் விசயற்காய்*
காரொக்கும் மேனி கரும்பெரும் கண்ணனே!*
ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ ஆயர்கள் போரேறே! அச்சோவச்சோ. (6)
மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்*
தக்த திதன்றென்று தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய*
சக்கரக் கையனே!அச்சோவச்சோ சங்க மிடத்தானே! அச்சோவச்சோ. (7)
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே கொண்டு அளவா யென்ன*
மன்னு நமுசியை வானில் சுழற்றிய*
மின்னு முடியனே! அச்சோவச்சோ வேங்கட வாணனே! அச்சோவச்சோ. (8)
கண்ட கடலும் மலையும் உலகேழும்*
முண்டத்துக் காற்றா முகில்வண்ணாவோ! என்று*
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள*
மண்டை நிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில் மறுவனே! அச்சோவச்சோ. (9)
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகைமூட*
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட*
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க* அன்று
அன்னம தானானே!அச்சோவச்சோ அருமறை தந்தானே! அச்சோவச்சோ. (10)
தரவுகொச்சகக்கலிப்பா
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை*
அச்சோ வருகவென ஆய்ச்சி யுரைத்தன*
மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்*
நிச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வாரே. (11)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்