நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/9ம் திருமொழி
தோற்றம்
(9ம் திருமொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
--வெ.ராமன் 07:36, 23 ஜூலை 2006 (UTC)
தலைமகன் கானகம் செல்லத் தசரதன் புலம்பல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வன்தாளி னிணைவணங்கி வளநகரம் தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை* அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு
என்றாள்*எம் இராமாவோ! உனைப்பயந்த கைகேசி தன்சொற் கேட்டு*
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே! உன்னை நானே. 1
வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை வேண்டாதே விரைந்து* வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி*
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக*
எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ! எம்பெருமான் என்செய் கேனே! 2
கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும்*
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்*
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல்*
கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! 3
வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல்*
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்*
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே!* இன்று
நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறே! 4
பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய மெல்லடிகள் குருதி சோர*
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப வெம்பசிநோய் கூர* இன்று
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய் கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற*
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன் என்செய்கேன்? அந்தோ! யானே. 5
அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம்*
என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே முழுசாதே மோவா துச்சி*
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமும் காணாது *
எம்மானை யென்மகனை யிழந்திட்ட இழிதகையே னிருக்கின் றேனே. 6
பூமருவு நறுங்குஞ்சி புன்சடையாய்ப் புனைந்துபூந் துகில்சே ரல்குல்*
காமரெழில் விழலுடுத்துக் கலனணியா தங்கங்க ளழகு மாறி*
ஏமருதோ ளென்புதல்வன் யானின்று செலத்தக்க வனந்தான் சேர்தல்*
தூமறையீர் இதுதகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே. 7
பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்*
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென் மருகிகையும் வனத்தில் போக்கி*
நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட் டென்னையும்நீள் வானில் போக்க*
என்பெற்றாய்? கைகேசீ! இருநிலத்தில் இனிதாக விருக்கின் றாயே. 8
முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய்*
உன்னையுமுன் னருமையையு முன்மோயின் வருத்தமுமொன் றாகக் கொள்ளாது*
என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய்!*
நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! 9
தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ*
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு* இன்று
கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து* நானும்
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே! 10
ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய் வனம்புக்க அதனுக் காற்றா*
தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்தான் புலம்பியஅப் புலம்பல் தன்னை*
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த*
சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார் தீநெறிக்கண் செல்லார் தாமே. 11
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்