திருப்பொற் சுண்ணம்/உரை 33-40

விக்கிநூல்கள் இலிருந்து

அறுகெடுப் பார்அய னும்அரியும்

அன்றிமற் றிந்திர னோடமரர்

நறுமுறு தேவர் கணங்களெல்லாம்

நம்மிற்பின் பல்ல தெடுக்கவொட்டோம்

செறிவுடை மும்மதில் எய்தவில்லி

திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி

முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்

காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.

பதப்பொருள் :

அயனும் அரியும் - பிரமனும் திருமாலும், அறுகு எடுப்பார் - அறுகெடுத்தலாகிய பணியைச் செய்வார், அன்றி - அவர்களைத் தவிர, மற்று - ஏனையோராகிய, இந்திரனோடு அமரர் - இந்திரன் முதலிய வானுலகத்தவர்களும், நறுமுறு தேவர் கணங்களெல்லாம் - முணுமுணுக்கின்ற தேவ கணங்களும், நம்மின் பின்பு அல்லது - நமக்குப் பின் அல்லாமல், எடுக்க ஒட்டோம் - அவ்வறுகினை எடுக்க விட மாட்டோம், செறிவு உடை - நெருங்கிய, மும்மதில் - முப்புரத்தை, எய்த வில்லி - எய்து அழித்து வில்லையுடையவனாகிய, திருவேகம்பன் - திருவேகம்பனது, செம்பொற் கோயில் பாடி - செம்பொன்னாலாகிய கோயிலைப் பாடி, முறுவல் செவ்வாயினீர் - நகையோடு கூடிய சிவந்தை வாயினையுடையீர், முக்கண் அப்பற்கு ஆட - மூன்று கண்களையுடைய எம் தந்தைக்குப் பூசிக் கொள்ளும் பொருட்டு, பொற்சுண்ணம் - பொன்போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

அறுகெடுத்தலாவது, அறுகம்புல்லை எடுத்துப் பசுவின் நெய்யில் தோய்த்துத் தலை முதலிய இடங்களில் தௌ¤த்தல். இதனை நெய்யேற்றுதல் என்றும் கூறுவர். தேவகணமாவது, சித்தர் முதலிய பதினெண் கணத்தை. இவர்கள், அயனும் மாலும் தம் அதிகாரத்தால் முதலிற்சென்று அறுகெடுத்தலைக் கண்டு மனம் புழுங்கி ஒன்றும் செய்யமாட்டாதவராய் இருப்பார் என்பார், ‘நறுமுறு தேவர் கணங்கள்’ என்றார். அத்தகைய தேவர்களுக்கும் முன்னே நாம் சென்று அறுகெடுப்போம் என்பார், ‘நம்மிற்பின்பல்லது எடுக்கவொட்டோம்’ என்றார். இறைபணியில் ஈடுபட்டோர் ஆனந்தத்தில் மூழ்கியிருப்பராதலின், ‘முறுவற்செவ்வாயினீர்’ என அழைக்கப்பட்டனர்.

இதனால், இறை பணியிலுள்ள வேட்கை கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பொற்_சுண்ணம்/உரை_33-40&oldid=2323" இலிருந்து மீள்விக்கப்பட்டது