நிரலாக்குநர் அல்லாதவருக்கான பைத்தன் 2.7 பயிற்சி/அறிமுகம்

விக்கிநூல்கள் இலிருந்து

முதலில் செய்யவேண்டியதை முதலில் செய்யுங்கள்[தொகு]

சரி, இதுவரை நீங்கள் எந்தவொரு செய்நிரலும் எழுதியதில்லை. இப்பயிற்சிநூலின்வழியே செய்நிரல் எழுதுவது எப்படி எனச் சொல்லித்தரப்போகிறோம். நிரலாக்கம் கற்பதற்கு மெய்யாகவே ஒரேயொரு வழிதான் உள்ளது. நீங்கள் நிரல்களை (கணினிச்செய்நிரல்களை இவ்வாறும் அழைக்கலாம்.) வாசிக்கவும் எழுதவும் வேண்டும். நாங்கள் உங்களுக்கு நிறைய நிரல்களைக் காட்டப்போகின்றோம். நாங்கள் வழங்கும் நிரல்களைத் தட்டச்சிட்டு என்ன தான் நடக்கின்றதென நீங்கள் பார்க்கவேண்டும் (எங்கே தட்டச்சிடவேண்டும், பைத்தனை எப்படி நிறுவுவது என்றெல்லாம் கீழே சொல்வோம்.). அவற்றில் நீங்களாகவே மாற்றங்களை ஏற்படுத்திப் பார்க்கவேண்டும். மோசமாக ஏதாவது ஏற்படுமோ என நீங்கள் அச்சமுற்றால், நிரல் வேலைசெய்யாததே மோசமான விளைவாக இருக்கும். நீங்கள் தட்டச்சிடும் நிரல் பின்வருமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

#பைத்தன் கற்பதற்கு இலகுவானது.
print "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்."

பிற உரைப்பகுதிகளிலிருந்து இதனை இலகுவாக வேறுபடுத்திக்கொள்ளமுடியும். இதனை நீங்கள் வலைத்தளத்தில் வாசிக்கின்றீர்கள் என்றால், நிரல் நிறமூட்டப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம். நிரல் எனத் தனித்துத் தெரிவதற்காகவும் நிரலின் வெவ்வேறு பகுதிகளைத் தனித்துக் காட்டுவதற்காகவும் இந்நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் உள்ளிடும் நிரலானது நிறமூட்டப்படாமலோ வேறுபட்ட நிறங்களிலோ இருக்கலாம். இங்குள்ளபடியே நீங்கள் உள்ளிட்டீர்களானால், அதனால் நிரலுக்கு எச்சிக்கலும் இல்லை (மாற்றங்களைச் செய்துபார்க்கத் தயங்காதீர்கள்!).

கணினியால் இதற்குப் பதிக்கப்படும் வெளியீடு பின்வருமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

சிலவேளைகளில், செய்நிரலால் திரையில் பதிக்கப்படும் உரையும் நீங்கள் தட்டச்சிடும் உரையும் இங்கே காட்டப்படும். இதன்போது, நீங்கள் தட்டச்சிடும் உரை பின்வருமாறு கறுப்புநிறத்தில் காட்டப்படும்.

நிற்க!
உங்கள் பெயர் என்ன? வெற்றி
வெற்றி, நீங்கள் செல்லலாம்.

சரி, பைத்தனில் நிரல்கள் எழுதுவதற்கு முதலில் உங்களிடம் பைத்தன் மென்பொருள் இருக்கவேண்டும். உங்களிடம் ஏற்கனவே பைத்தன் மென்பொருள் இல்லாவிடின், www.python.org/downloads/ என்ற தளத்தில் பைத்தன் மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அண்மையில் பைத்தன் 3.5 வெளிவந்துள்ளது. ஆயினும், பைத்தன் 3இற்கும் பைத்தன் 2இற்கும் இடையில் சில பெரிய வேறுபாடுகள் இருப்பதாலும் நாம் இங்கே பைத்தன் 2.7 பற்றிக் கற்க இருப்பதாலும் உங்கள் இயங்குதளத்திற்குப் பொருத்தமான பைத்தன் 2.7இன் அண்மைய பதிப்பைத் தரவிறக்கம் செய்யுங்கள்.

பைத்தனை நிறுவுதல்[தொகு]

பைத்தன் நிரலாக்கம் கற்பதற்கு உங்கள் கணினியில் பைத்தன் நிறுவப்பட்டிருக்கவேண்டியிருப்பதுடன், ஓர் உரைதொகுப்பியும் தேவை. பைத்தனுடன் ஐடில் (IDLE) என்ற உரைதொகுப்பியும் சேர்த்துவழங்கப்படும். அல்லது விண்டோசு (Windows) இயங்குதளத்துடன் இணைந்துவரும் நோட்பேட்டையும் (Notepad) பயன்படுத்தலாம். ஆனால், நோட்பேட்டில் மேலே காட்டியவாறு நிறமூட்டப்பட்ட உரை பயன்படுத்தப்படாததால், பைத்தன் நிரலாக்கத்திற்கு அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் நன்று. ஈமாட்சு (Emacs), விம் (Vim), நோட்பேடு++ (Notepad++) போன்ற உரைதொகுப்பிகளையும் பைத்தன் நிரலாக்கத்திற்குப் பயன்படுத்தலாம்.

விண்டோசுப் பயனர்கள்[தொகு]

உங்கள் கணினியில் பைத்தன் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கின்றதா என அறிய, கட்டளை செயலழைப்பைத் (Command Prompt) திறந்து (இயக்கு (Run) பட்டியில் cmd எனத் தட்டச்சிட்டும் இதனைத் திறக்கலாம்.), python எனத் தட்டச்சிடுங்கள். 'python' is not recognized as an internal or external command, operable program or batch file. என்ற பதில் கிடைக்குமாயின், நீங்கள் பைத்தனை நிறுவவேண்டும். பைத்தன் நிறுவப்பட்டிருந்தால், திரையில், நிறுவப்பட்டுள்ள பைத்தன் பதிப்புக் காட்டப்படும். பைத்தன் 2.7இன் அண்மைய பதிப்பு நிறுவப்படாதிருந்தால், அதனைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.

இலினட்சு, பேர்க்கலீ மென்பொருட் பரவல், உனிட்சுப் பயனர்கள்[தொகு]

பெரும்பாலும் உங்கள் கணினியில் பைத்தன் நிறுவப்பட்டிருக்கும். ஒரு கட்டளைக் கோட்டில் python தட்டச்சிட்டு, இதனைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். பைத்தன் 2.7இன் அண்மைய பதிப்பு நிறுவப்படாதிருந்தால், அதனைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.

மக்குப் பயனர்கள்[தொகு]

மக்கு இயங்குதளம் X தைகரிலிருந்து (Mac OS X Tiger), இயங்குதளத்துடன் சேர்த்தே பைத்தன் வழங்கப்படுகின்றது. பைத்தன் 2.7இன் அண்மைய பதிப்பு நிறுவப்படாதிருந்தால், அதனைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.

ஊடாடுபயன்முறை[தொகு]

ஐடிலைத் (இது பைத்தன் வரைவியல் பயனர் இடைமுகம் (Python GUI) எனவும் அழைக்கப்படும்.) திறவுங்கள். கீழேயுள்ளது போன்ற உரைப்பகுதியைக் கொண்டுள்ள ஒரு சாளரத்தை நீங்கள் பார்க்கமுடியும்.

Python 2.7.12 (v2.7.12:d33e0cf91556, Jun 27 2016, 15:24:40) [MSC v.1500 64 bit (AMD64)] on win32
Type "copyright", "credits" or "license()" for more information.
>>>

நீங்கள் ஊடாடுபயன்முறையில் இருக்கின்றீர்கள் என்பதைத் தெரிவிக்க >>> என்பது பயன்படுத்தப்படுகின்றது. ஊடாடுபயன்முறையில் நீங்கள் தட்டச்சிடுவது உடனடியாக இயக்கப்படும். 1 + 1 எனத் தட்டச்சிட்டுப் பாருங்கள்.

2

என்ற பதில் கிடைக்கும்.

புதிய பைத்தன் கூற்றுகளைத் தட்டச்சிட்டு முயன்றுபார்ப்பதற்கு, ஊடாடுபயன்முறையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

செய்நிரல்களை உருவாக்கி இயக்குதல்[தொகு]

நீங்கள் ஏற்கனவே ஐடிலைத் திறக்காவிட்டால், இப்போது திறந்துகொள்ளுங்கள். மேலேயுள்ள பட்டியிலுள்ள File என்பதில் New File என்பதைத் தெரிவுசெய்யுங்கள். தோன்றும் புதிய சாளரத்தில் பின்வருமாறு தட்டச்சிடுங்கள்.

print "Hello, World!"

இப்போது செய்நிரலைச் சேமிப்போம். File என்பதில் Save என்பதைத் தெரிவுசெய்யுங்கள். இதனை hello.py என்ற பெயரில் சேமிப்போம் (உங்களுக்கு விருப்பமான இடத்தில் சேமியுங்கள்.). கோப்புப் பெயர் (File name) என்பதன்கீழ் hello எனத் தட்டச்சிட்டாலே போதும். .py என்பதைக் கட்டாயம் தட்டச்சிடவேண்டியதில்லை. இப்போது நீங்கள் கோப்பைச் சேமித்துள்ளதால், அதனை இயக்கிப்பார்க்கமுடியும். Run என்பதில் Run Module என்பதைத் தெரிவுசெய்யுங்கள். பைத்தன் செல் (Python Shell) சாளரத்தில்

Hello, World!

என்ற வெளியீடு பதிக்கப்படும்.

சரி, தமிழில் வெளியீட்டைப் பெற்றுப்பார்ப்போம் (ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு என்ற தளத்தில் தமிழ்த் தட்டச்சு உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.). Hello, World! என்பதைப் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். என மாற்றுங்கள்.

print "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்."

நிற்க! தமிழ் எழுத்துகள் தெரியவில்லையா? கேள்விக்குறிகள் தான் தெரிகின்றனவா? 🙁 ஐடிலில் நேரடியாகத் தமிழ் உள்ளடங்கலாக ஒருங்குறி (Unicode) வரியுருக்களை உள்ளிடமுடியாது. இன்னோரிடத்தில் தட்டச்சிட்டுப் படியெடுத்து ஒட்டத்தான் வேண்டும். அவ்வாறே செய்யுங்கள். இப்போது பைத்தன் செல் சாளரத்தில்

Hello, World!

என்ற வெளியீடு பதிக்கப்படும். சரி, ஊடாடுபயன்முறையில் இந்நிரலை இட்டுப் பாருங்கள்.

Unsupported characters in input

என்ற பிழைச்செய்தி கிடைக்கும். 🙁 ஊடாடுபயன்முறையில் ஒருங்குறி வரியுருக்களைத் திரையில் பதிக்கமுடியாது. செய்நிரலைச் சேமித்துத்தான் இயக்கவேண்டும்.

செய்நிரல்களின் கோப்புப் பெயர்கள்[தொகு]

பைத்தன் செய்நிரல்களின் கோப்புப் பெயர்கள் பின்வரும் நெறிமுறைகளுக்கு அமைவாக இருப்பது நல்லது. அவ்வாறு அமையாவிட்டால், செய்நிரல்களில் பெரிய சிக்கல்கள் ஏதும் ஏற்படப்போவதில்லையெனினும், நிரற்கூறுகளில் (நிரற்கூறுகள் பற்றிப் பின்னர் பார்ப்போம்.) சிக்கல்கள் ஏற்படலாம்.

  1. .py என்ற நீட்டிப்பிலேயே கோப்பைச் சேமியுங்கள் (ஐடிலில் இயல்பிருப்பாக அவ்வாறே சேமிக்கப்படும்.). கோப்புப் பெயரில் வேறெங்காவது புள்ளி வருவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  2. கோப்புப் பெயர்களில் பின்வரும் வரியுருக்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்: ஆங்கிலப் பேரெழுத்துகள், சிறிய ஆங்கில எழுத்துகள், இலக்கங்கள், அடிக்கோடு (_)
  3. வெளிகளைப் ( ) பயன்படுத்தவே வேண்டாம் (பதிலாக அடிக்கோடுகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.).
  4. கோப்புப் பெயரின் தொடக்க வரியுருவாக இலக்கம் இருக்கவேண்டாம்.
  5. ஆங்கிலம் தவிர்ந்த பிறமொழி, ஒருங்குறி வரியுருக்களைப் (ä, அ, අ, 😂 போன்றவை) பயன்படுத்தவேண்டாம். ஐடிலில் இவ்வரியுருக்களைக் கோப்புப் பெயராகப் பயன்படுத்திச் சேமிக்கமுடியாது; அவ்வாறு சேமிக்கப்பட்ட கோப்புகளைச் சரிவரத் திறக்கவும் முடியாது.

கட்டளைக் கோட்டில் பைத்தனைப் பயன்படுத்துதல்[தொகு]

python என்று தட்டச்சிடுவதன்மூலம் கட்டளைக் கோட்டில் பைத்தன் ஊடாடுபயன்முறையைப் பெறமுடிவதுடன், python hello.py என்று தட்டச்சிட்டு (செய்நிரல் உள்ள அடைவுக்குச் சென்றபின்) hello.py என்ற பைத்தன் செய்நிரலை இயக்கமுடியும்.

மேலதிக உதவிக்கு[தொகு]

இந்நூலானது பைத்தன் நிரலாக்கத்தின் அடிப்படைகள் பற்றியே கூறுகின்றது. பைத்தன் ஒரு பெருங்கடல் போன்றது. இந்நூலைக் கற்றுத்தேர்ந்தபின்பும், ஏதாவதொரு பைத்தன் செய்நிரலை எழுதும்போது அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத ஒரு நிலை ஏற்படலாம். அப்போது பின்வரும் இணைப்புகள் உதவும்.

பைத்தன் ஆவணப்படுத்தல்[தொகு]

docs.python.org/2.7/tutorial என்ற தளத்தில் பைத்தன் ஆவணப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளலாம். பைத்தன் நிறுவலுடனும் இது இணைத்து வழங்கப்பட்டிருக்கும். இதனை வாசிப்பதன்மூலம் பொதுவான பல சிக்கல்களைத் தீர்ப்பதற்கான உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

  • docs.python.org/2.7/library என்ற தளத்தில் பைத்தன் சீர்தர நூலகத்தை (The Python Standard Library) அணுகி, சீர்தர நிரற்கூறுகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.
  • docs.python.org/2/reference என்ற தளத்தில் பைத்தன் மொழி உசாத்துணையை (The Python Language Reference) அணுகி, பைத்தன் மொழி பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளமுடியும்.

பைத்தன் பயனர் குமுகம்[தொகு]

www.python.org/community/lists என்ற தளத்தில் பைத்தன் தொடர்பான அஞ்சற்பட்டியல்களினதும் செய்திக்குழுக்களினதும் விவரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

பயனர் குமுகத்திடமிருந்து உதவியைப் பெறும் முன்னர், நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து எதற்கும் ஒருமுறை இணையத்தில் தேடிப்பாருங்கள்.