நூறு ரூபாய் நோட்டு

விக்கிநூல்கள் இலிருந்து

கிழக்கே சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் நேரம் காலை 8.30 மணிதான் ஆகியிருந்தது. அய்யாசாமி சோர்வாய் வானத்தைப் பார்த்தார். நெற்றியில் வியர்வை துளிர்விடத் துவங்கியிருந்தது..!

“என்ன அய்யாசாமி, இன்னிக்கு நீ போய்தான் தீரனுமா..? ஏறு வெயிலு ஆயிடுச்சி... கிளம்பனும்னா விடியக்காத்தாலேயே கிளம்ப வேண்டியதானே..!” –கருப்பண்ணன்.. அய்யாசாமியின் நீண்ட கால நண்பர்..

“ஒடம்புக்கு ஒன்னும் முடியல.. நேத்து பழைய சோத்துக்கு மாவள்ளி கெழங்க நெறையா சேத்துக்கிட்டனா.. அது சூட்ட தூக்கி விட்ருச்சு.. விடியகாத்தால எழுந்திரிக்க முடியல”

“சரி.. படுத்திருந்துட்டு நாளைக்குத்தான் போப்பா...”

“இல்ல கருப்பா.. பெரியய்யா வீட்டுல கண்டிசனா சொல்லிபுட்டாங்க.. இன்னிக்குள்ள வேணுமாம்.. நாளான்னிக்கு அவங்க சின்ன மவளுக்கு சீமந்தமாம்..! என்னோட வெறவு வந்தாதான் சமையலேனு சொல்லிட்டாங்க..!”

“என்னவோ போ.. சொன்னாலும் கேக்க மாட்ட.. தோலுக்கு ஒசந்த புள்ளய பெத்து, படிக்கவச்சி, அவன் வேலைக்கி போயிம் உன் கஷ்டம் கொறையல..”

”என்ன செய்யறது.. இப்பதான வேலைக்கி போயிருக்கான்.. ஆரம்பத்துல டவுனுல நெறயா செலவு இருக்குமுள்ள..! கொஞ்ச நாள் போனா சரியாபோயிடும்..”

சொல்லிகொண்டே அய்யாசாமி கொடுவாளையும், கயிறு சுருட்டையும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்..!

அரை மைல் கடந்ததும் ஆற்றங்கரை வந்தது.. நிமிர்ந்து பார்த்தார் அய்யாசாமி.. மலை முகடு நாலு மைல் தாண்டி தெரிந்தது. அதன் அடிவாரத்தில் உள்ள மலைக்காட்டில் தான் விறகு கிடைக்கும். மெதுவாய் நடக்கத் துவங்கினார்.

பொன்னுத்தாயின் நினைவு வந்து போனது. இருபத்து ரெண்டு வருடத்திற்கு முன்பு வரை இருவருமாய் விறகு வெட்ட சென்ற நிகழ்வுகள் அவர் மனத்திரையில் வந்தோடின..

பொன்னுத்தாயி.. கல்யாணம் செய்துகொண்ட நாள் முதலே கழனி வேலையில் இருந்து, விறகு சுமப்பது வரை அய்யாசாமியின் சுமைகளை பகிர்ந்துகொண்டவள்..

“மவன் ரமேசு பொறந்து நாலு நாள் கைப்புள்ள.. நெறைஞ்ச காமால.. கிராமத்து கவுருமெண்ட்டு ஆஸ்பத்திரியில அதுக்கெல்லாம் மருந்து இல்லைனு கைய விரிச்சிட்டாங்க.. பக்கத்து டவுனுல இருக்கிற தனியாருங்க ஆஸ்பத்திரிக்கு போனா யெரனூறூ ரூபா ஆகும்னு சொல்லிட்டாங்க.. பெரியய்யா கைய, காலப் புடிச்சி நூறு வாங்கிட்டேன்.. இன்னும் நூறு வேணும்..!”

“மச்சான், புள்ள பொசுக்குன்னு போயிக்கிட்டு இருக்கு.. எங்கியாச்சும் போயி நூறு ரூபா பொறட்டிகிட்டு வாயா..”

“எல்லாத்துக்கிட்டயும் கேட்டுட்டேன் பொன்னு.. ஒன்னும் பொறல மாட்டங்குது..”

கவலையுடன் இருவரும் இருக்க இட்லிகடை கோவிந்தன் கூப்பிடுவது கேட்டது..

“ஏ, அய்யாசாமி.. நாலு சொம வெறவு அவசரமா தேவைப்படுது.. இன்னிக்கு சாயாங்காலத்துக்குள்ள வேணும்.. ஏற்பாடு பண்ண முடியுமா..?”

கடவுளே பணத்திற்கு வழிகாட்டியது போல இருந்தது..

“நூறு ரூபா ஆவும்.. பரவால்லியா..?”

“எதுக்கு நூறு ரூபா.. பச்ச வெறவா குடுப்ப.. வேணா ஒன்னு பண்ணு.. காஞ்ச வெறவா, சொம பெருசா இருந்தா கொண்டா.. நூறு ரூபா தாரேன்..!” சொல்லிவிட்டு போய்விட்டான்..

“மச்சான்.. சீக்கிரம் கெளம்பு.. பொழுது இப்பவே உச்சிக்கு வ்ரப்போவுது..”

“எப்படி பொன்னு முடியும்.. ராப்பொழுதுக்குள்ள ரெண்டு சொமதான் வெட்டியார முடியும்.. மலைக்காடு என்ன இங்க பக்கமாவா இருக்கு.. நாலஞ்சு மைலு நடந்து போயி வெட்டியாரவேணாம்..”

பொன்னுத்தாயின் கண்கள் கலங்கி இருந்தது..!

“புள்ள ஒரு சொட்டு பாலு கூட குடிக்கல மச்சான்..!”

செய்வது அறியாமல் இருவரின் கண்களும் கலங்கி கொண்டிருந்த வேளையில் விருட்டென்று பொன்னுத்தாயி எழுந்தாள்..

“பொறப்படு மச்சான்.. நானும் வாரேன்.. ஆளுக்கு ரெண்டு சொமையா தூக்கியாந்து போட்டுருவோம்.. புள்ளய ராமாயி அக்காகிட்ட பாத்துக்க சொல்லி குடுத்துட்டு போயிடுவோம் ”

“என்ன பொன்னு சொல்ற.. நீ பச்ச ஒடம்புக்காரி.. ஒன்னால எப்படி அவ்வளவு தூரம் வந்து சொமத் தூக்க முடியும்..?”

“முடியும் ம்ச்சான்.. கெளம்பு வெரசா..” –சொல்லிக்கொண்டே எழத் தடுமாறியவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

முதல் சுமை தூக்கி வந்த உடனேயே பொன்னுத்தாயிக்கு தலை சுற்றியது..!

“போதும் பொன்னு.. நீ இருந்துக்கோ.. அடுத்த நட நான் மட்டும் போயிட்டு வந்துடறேன்..”

கம்மங்கூழை கரைத்து இரண்டு முழுங்கு குடித்துவிட்டு அவரது பேச்சை காதில் வாங்காதவளாய் நடைக்கட்ட ஆரம்பித்தாள் பொன்னுத்தாயி..

பொழுது போய் இரவாகிவிட்டது.. மெதுவாய் விறகு கட்டைகளை கோவிந்தன் கடை முன்னால் போட்டுவிட்டு அவன் தந்த நூறு ரூபாவை வாங்கி வந்து பொன்னுவிடம் போய் கொடுத்தார் அய்யாசாமி..!

“என்னால முடியல மச்சான்.. உடம்பு என்னவோ பண்ணுது.. ரொம்ப அசதியா இருக்கு.. நீ ராமாயீ அக்காவ துணைக்கு கூட்டிகிட்டு டவுனு ஆஸ்பத்ரிக்கு போயிட்டு வந்துடு.. நான் செத்த படுக்கறேன்.. வெரசா கெளம்பு மச்சான்.. புள்ள பத்ரம்..”

பொன்னுக்கு சுக்கு காபி போட்டு கொடுத்துவிட்டு, குழந்தை மற்றும் ராமாயியுடன் டவுன் ஆஸ்பத்திரி சென்று கொடுத்த மருந்தை வாங்கி வீடு வந்து சேர்ந்தபோது நடுநிசி தாண்டி இருந்தது..

பொன்னுத்தாயி நன்றாக தூங்கிபோனாள் போல.. எழுப்ப மனமில்லாமல் புட்டிபாலை பிள்ளைக்கு கொடுத்துவிட்டு அய்யாசாமியும் நன்றாக உறங்கிபோனார்.

பொழுது விடிந்த பின்தான் தெரிந்தது.. பொன்னுத்தாயி இனி எழுந்திருக்கவே மாட்டாள் என்று.

“ஜன்னி, சீதம், நிக்காம இருந்த தீட்டு காரணமா ரத்தம் நெறையா போயி.. செத்திருக்கலாம் என ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாங்க.. என்ன காரணம்னாலும் இனிமே என் பொன்னு என் கூட இருக்கபோவது இல்ல..! என்னையும், என் புள்ளயையும் தனியா உட்டுட்டு போயிட்டா..!”

அதன் பிறகு பல கஷ்டங்கள் இருந்தாலும், ரமேசை நன்றாக படிக்கவைத்து அவன் இன்று சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறார் அய்யாசாமி..

பொன்னுதாயின் நினைவுகளில் இருந்து விலகி விறகு சுமையை பெரியய்யா வீட்டின் முன்னால் போட்டார்..

“என்ன அய்யாசாமி.. கொஞ்சம் வெறவு பச்சையா இருக்கும் போல இருக்கு.. சரி.. எவ்வளவு ரூபா வேணும்..”

“நான் எப்பயா உங்ககிட்ட அதிகமா சொல்லிருக்கேன்.. நூறுதான்யா..”

“என்னவோ போ.. முன்னல்லாம் சொம பெருசா இருக்கும்.. இப்ப கொறைஞ்சு போச்சு..”

“வயசாகுது இல்லயா.. என் பலம்கொண்ட மட்டும் கட்டிதான்யா எடுத்துகுட்டு வாரேன்..”

“சரி..சரி.. இந்தா நூறு.. அடுத்த தடவயாவது சொமய பெருசா கொண்டா..”

கொடுத்த பணத்தை தன் கந்தல் வேட்டியின் இடுப்பு பகுதியில் முடிச்சுபோட்டு அய்யாசாமி வைக்கும் அதே நேரத்தில், சென்னையின் நட்சத்திர அந்தஸ்த்து விடுதி ஒன்றில் தன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது நண்பர்கள் அனைவருடன் மது அருந்திவிட்டு அதற்கான பில்லை செட்டில் செய்யும்போது நூறு ரூபாய் நோட்டு ஒன்றை டிப்ஸாக வைத்தான் அய்யாசாமியின் அன்பு மகன் ரமேஷ்..!!

"https://ta.wikibooks.org/w/index.php?title=நூறு_ரூபாய்_நோட்டு&oldid=5382" இலிருந்து மீள்விக்கப்பட்டது