ஈசாப் நீதிக் கதைகள்/சிங்கமும் கரடியும் குள்ளநரியும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு சிங்கமும் கரடியும் கூட்டாக வேட்டையாடி ஒரு மானைக் கொன்றன. கொன்ற மானைப் பங்கு போடுவதில் சிங்கமும் கரடியும் பயங்கரமாகச் சண்டை செய்தன. வெகுநேரம் சண்டை செய்ததால் இரண்டும் களைப்படைந்து விட்டன. அதனால் இரண்டும் தரையில் சாய்ந்தன. அந்த சமயம் வெகுதூரத்திலிருந்தே இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு குள்ள நரி ஓடி வந்தது. அங்கிருந்த மானைத் தூக்கிகொண்டு ஒடிவிட்டது. சிங்கமும் கரடியும் ஒன்றும் செய்ய முடியாமல் அதனைப் பார்த்தபடி கீழே தரையில் கிடந்தன. இவை இரண்டும் வேட்டையில் கிடைத்ததை நல்ல முறையில் பங்கு போட்டுக் கொள்ளாமல் வீணாகச் சண்டை போட்டு இரையை இழந்தோமே என்று வருத்தப்பட்டன.

[சண்டையும் சச்சரவும் என்றும் இரு தரப்பினருக்கும் தீமையாகும்.]