உள்ளடக்கத்துக்குச் செல்

யாத்திரைப் பத்து/உரை 33-36

விக்கிநூல்கள் இலிருந்து

சேரக் கருதிச் சிந்தனையைத்

திருந்த வைத்துச் சிந்திமின்

போரிற் பொலியும் வேற்கண்ணாள்

பங்கன் புயங்கன் அருளமுதம்

ஆரப் பருகி ஆராத

ஆர்வங் கூர அழுந்துவீர்

போரப் புரிமின் சிவன்கழற்கே

பொய்யிற் கிடந்து புரளாதே.


பதப்பொருள் :

போரில் பொலியும் வேல் - போரில் விளங்குகின்ற வேல் போன்ற, கண்ணாள் - கண்களையுடைய உமையம்மையின், பங்கன் - பாகனும், புயங்கன் - பாம்பணிந்தவனும் ஆகிய இறைவனது, அருள் அமுதம் - திருவருள் அமுதத்தை, ஆரப் பருகி - நிரம்பப் பருகி, ஆராத ஆர்வம் கூர - தணியாத ஆசை மிக, அழுந்துவீர் - மூழ்கியிருப்பவர்களே, பொய்யில் கிடந்து புரளாதே - பொய்யான வாழ்வில் கிடந்து புரளாமல், சிவன் கழற்கே - சிவபெருமானது திருவடியிலே, போரப் புரிமின் - அடைய விரும்புங்கள், சேரக் கருதி - அதனையடைய எண்ணி, சிந்தனையை - சித்தத்தை, திருந்த வைத்து - தூய்மையாக வைத்துக்கொண்டு, சிந்திமின் - இடைவிடாமல் நினையுங்கள்.

விளக்கம் :

போத என்பது போர் என எதுகை நோக்கித் திரிந்தது. சிவன் திருவடியே உண்மையானது ஆதலின், அதனையடைய வேண்டும் என்பார், 'போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே' என்றார். அதற்கு உபாயம் எது என்னில், சித்தத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு சிவனது திருமேனியைத் தியானிக்க வேண்டும் என்பதாம். 'வேற்கண்ணாள் பங்கன்' என்றதால், அவன் பொய்யை ஒழித்து அருளும் திறமுடையான் என்பதும் குறிப்பிட்டார்.

இதனால், இறைவன் திருமேனியைத் தியானித்திருக்க வேண்டும் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாத்திரைப்_பத்து/உரை_33-36&oldid=2378" இலிருந்து மீள்விக்கப்பட்டது