உள்ளடக்கத்துக்குச் செல்

லைலாவும் மஜ்னுனும்

விக்கிநூல்கள் இலிருந்து

லைலாவும் மஜ்னுனும் காதலில் விழுகின்றனர்

[தொகு]

ஆண்களின் கண்களுக்கு யோசோப்பு அழகாகத் தெரிவதைப் போல் ஒவ்வொரு அதிகாலையிலும் சூரியன் கிழக்கு வானத்திற்கு ஒளியூட்டியது, ஒரு பழுத்த ஆரஞ்சைப் போல் பார்ப்பதற்கே அழகாக, வானின் நிறத்தை திருநீற்றுப்பச்சை நிறத்திலிருந்து தங்கமாக மாற்றியது. விரல்கள் ஒரு சேர இறுக்கமாக மூடப்பட்ட தன் கையில் தன் தாடையை வைத்தவாறு லைலா அமர்ந்திருந்தாள். அவளது அழகைப் புறந்தள்ளி விட முடியாத அளவுக்கு மிக அழகாக இருந்தாள். யோசோப்பைக் கண்ட போது சுலேய்காவின் பணிப் பெண்கள் கத்திகளால் தவறுதலாக தங்களது கைகளை வெட்டிக் கொண்டதைப் போல் ஆண்கள் லைலாவைக் கண்ட போது தடுமாறினர். கய்சு லைலாவைக் கண்ட போது அவனது முகம் அதிகாலை வானின் தங்க மஞ்சள் நிறத்தைப் போல் வெளிறிப் போனது. ஒன்றாகக் கலந்த இவர்களின் நறு மணமானது இனிமையாக இருந்தது, இவர்கள் இருக்கும் போது கவலையோ அல்லது துக்கமோ அவ்விடத்தில் இருப்பதில்லை. ஆனால் இருந்த போதிலும் இவர்களது கலந்த, கசப்புணர்வு கொண்ட அழுகைகள் காலை வானத்திற்கு இவர்களது கவலையை அறிவித்தன. காதல் வந்தது. அதன் வாளானது பாரபட்சமாய் நடந்து கொள்ளவில்லை. வீட்டைத் தூய்மையாக்கியது, அதன் விதியிடம் அதை விட்டுச் சென்றது. காதல் இவர்களது இதயத்தை எடுத்துக் கொண்டது. துயரத்தை இவர்களுக்கு மாற்றாகக் கொடுத்தது. இவர்களை மனக் கலக்கமுற்றவர்களாகவும், மனம் தடுமாறியவர்களாகவும், அச்சம் கொண்டவர்களாகவும் மாற்றியது. இவர்களின் காதல் குறித்த வதந்தியைப் பரப்பிய வீண் பேச்சின் பொருளாக இவர்களது நம்பிக்கை கொண்ட இதயங்கள் மாறிப் போயின. திரை கிழிக்கப்பட்டு விட்டது. இவர்களது கதை ஒவ்வொரு திசையிலும் வார்த்தை வார்த்தையாகத் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டது. வாய் வழியாக இரகசியக் கதையானது பரவியது. ஒரு மனிதன் அறிந்ததை மற்றொரு மனிதன் சீக்கிரமே அறிந்து கொண்டான். இக்காதலர்கள் இங்கீதத்துடன் நடந்து கொண்டனர். முழுவதுமாக வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றை ஒளிவுமறைவாக வைக்க முயன்ற இவர்களின் முயற்சி வீணானது. கஸ்தூரி மானின் கொப்பூழ் காய்ந்தாலும், கஸ்தூரியின் நறுமணம் தொடர்ந்து வலிமையாக வீசுகிறது. ஒரு காதலரின் நறுமணத்தைக் கொண்டு வரும் காற்றானது அவன் விரும்பும் அனைத்து அழகானவற்றிடமிருந்தும் திரையை நீக்குகிறது. போலியான அலட்சியத்துடன் இவர்கள் உள்ளே உணர்ந்த ஒளிவு மறைவற்ற உணர்ச்சியை மறைக்கக் கடுமையாக முயற்சித்தனர். போலியான அலட்சியம் எப்போது வேலை செய்துள்ளது? களி மண்ணால் சூரியனை மறைக்கவோ அல்லது மறையச் செய்யவோ இயலுமா? ஏக்கமுடைய கண்கள் கதைகளைக் கூறும் போது இரகசியமாக மூடப்பட்ட கதை என்பது எவ்வாறு இருக்க முடியும்? ஓர் ஆயிரம் சுருள் முடிகள் ஒரு காதலனைச் சங்கிலியிடும் போது அங்கு தப்பிப்பது என்பது இயலாது, அவனுடைய போராட்டம் முடிந்து விட்டது. திருட்டு நடந்து முடிந்து விட்டது. ஒரு காதலன் புத்திசாலியாக இருந்தால் இத்திருட்டானது அவன் கண் முன்னே நடந்தது என்று அவனுக்குத் தெரியும்.

தற்போது இவன் அடிக்கப்பட்டவன் ஆனான், காதலியைப் பிரிந்ததால் இயல்பாக இவனால் நடந்து கொள்ள இயலவில்லை, காதல் உருவாக்கிய இறுக்கமான கழுத்துப் பட்டைக்குள் முழுவதுமாக மாட்டிக் கொண்டான். அழுத்தமான உணர்ச்சிகளுடன் இவன் அவளது அழகை விரும்பியதால் எந்தவொரு இடத்திலும் கய்சுவுக்கு ஓய்வோ அல்லது அமைதியோ கிடைக்கவில்லை. அவளைப் பற்றி மட்டுமே இவன் பேசினான். இது அவனை முன்பை விட மேலும் பொறுமையற்றவனாகவும், கவனம் சிதறியவனாகவும் ஆக்கியது. இவனது இதயமும், புலனுணர்வுகளும் உருண்டு விழுந்து குழப்பமடைந்தன. கழுதையின் மீதுள்ள மூட்டை அவிழ்ந்து கழுதை கீழே விழுந்ததைப் போல் சுய கட்டுப்பாட்டை இழந்தான். இவனைப் போல் காதலில் விழுகாதவர்கள் இவனை "மஜ்னுன்" என்று அழைத்தனர், இதன் பொருள் "மன நலம் குன்றியவன்" என்பதாகும். அவர்கள் இவனைப் பற்றிக் கூறியது உண்மை என உறுதிப்படுத்தும் விதமாக இவனது அழுகைகள் இருந்தன. ஒரு புதிதாக வளர்ந்த புல் பரப்பிலிருந்து மான் குட்டியை விரட்டும் குரைக்கும் நாய்களைப் போல் அவர்கள் மஜ்னுனைக் குரூரமாகச் சீண்டினர். இவன் ஏக்கம் கொண்டு தேடிய பிரகாசமான புது நிலவை இவனது பார்வையிலிருந்து மறைத்து வைத்தனர். இவனிடமிருந்து பிரிந்த லைலா இரகசியமாக இவனுக்காகத் தொடர்ந்து முத்துக்கள் போன்ற கண்ணீர்த் துளிகளைச் சிந்தினாள். லைலாவின் முகத்தைப் போதுமான அளவுக்குக் காணாததால் என்றுமே நிற்காத, ஏராளமாக ஓடிய வெள்ளத்தைப் போல் மஜ்னுனின் கண்ணீர்த் துளிகள் விழுந்தன. தன் இதயத்தில் வேதனையுடன், முகத்தில் கண்ணீருடன் வீதிகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் அலைந்து திரிந்தான். சோகமான காதலர்களின் பாடல்களைப் பாடினான். இப்பாடல்களின் மெல்லிசையும், வார்த்தைகளும் காதலின் துயரங்களை விவரித்தன. ஆண்கள் இவனைச் சீண்டியவாறு, இவனைக் கண்டு சிரித்து இவனுக்கு முன்னும், பின்னும் "மஜ்னுன்! மஜ்னுன்!" என்று மிக உரத்த குரலில் கத்தினர். அதே நேரத்தில் இவனும் தன் பங்கிற்கு, பைத்தியக்காரத் தனமான துயரத்தில் ஆழமாக மூழ்கியிருந்ததால், கடிவாளம் அவிழ்ந்த கழுதையை சமவெளியில் அலைய விட்டது போல நடப்பது நடக்கட்டும் என இருந்து விட்டான். இவனது இதயமானது இரண்டாக உடைக்கப்பட்ட மாதுளையைப் போலானது. அதில் ஒரு பாதியை மட்டுமே இவன் வைத்திருந்தான். தன் இதயத்தின் விருப்பத்தை மறைக்க இவன் கடினமாக முயன்றான். ஆனால் நெருப்பாய்க் கொதிக்கும் இதயத்தை யாரால் மறைக்க முடியும்? இவனது இதயத்தின் இரத்தமானது இவனைச் சுற்றி இவன் தலைக்கு மேல் உயர்ந்து இவனை மூழ்கடித்தது போல இருந்தது. இவனைத் துயரத்திலிருந்து விடுவிக்கக் கூடியவளான அவளை வேண்டி இவன் துயரமடைந்தான். அவள் இல்லாத போது இவனுக்கு துயரத்திருந்து விடுதலை கிடைக்கவில்லை. இவன் ஒரு மெழுகுவர்த்தி, பகலிலே பயனற்றவன், இரவில் உறங்காமல் எரிந்தான். இவன் தனக்குத் தானே அத்தைகைய வலியைக் கொடுத்துக் கொண்டான். தனக்கான வலி நிவாரணிக்கான இவனது தேடல் வீணானது. தேடலில் தன் ஆன்மாவை இவன் கிழித்தெறிந்தான். வாயிற்படியில் தன் தலையை மோதினான். ஒவ்வொரு அதிகாலையிலும் பாலைவனத் தரிசில் வெறுங்காலுடன் ஓட இவன் பரபரப்பானான்.

இது தவிர இந்தக் காதலர்கள் காற்றில் மிதந்து வரும் மற்றொருவரின் வாசனைக்கான தேடலுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. இவன் தன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு நாள் இரவும் லைலாவின் வீடு இருந்த தெருவுக்கு வருவான். யார் கண்ணிலும் படாமல் காத்திருப்பான். இருளில் அவள் வீட்டுக் கதவை இவன் முத்தமிடுவான். பிறகு திரும்பிச் செல்ல மனம் இல்லாவிட்டாலும் மீண்டும் தன் வீட்டிற்குச் செல்வான். வடக்கிலிருந்து வரும் காற்றைப் போல் இவனது வருகை இருக்கும், ஆனால் இவன் திரும்பிச் செல்வதென்பது வேதனையில் செலவழித்த முடிவிலாக் காலத்தைப் போல் இருக்கும். வரும் போது இவனது வேகத்தை அதிகப்படுத்த ஆயிரம் இறக்கைகள் இருந்தது, வீட்டுக்குத் திரும்பும் போது இவனுக்குத் தடங்கல் ஏற்படுத்த முட்கள் முளைத்தது. செல்லும் போது நீர் ஓடுவதைப் போல் சென்றான், ஆனால் திரும்பும் போது இவனது வழியை மறையச் செய்ய நூறு தடைகள் ஏற்பட்டன. காலில் கொப்புளத்துடன் இவன் நடந்த போதும் கூட லைலாவின் தெருவுக்குச் செல்லும் போது ஒரு குதிரையின் மீது அமர்ந்து செல்வது போல் உணர்ந்தான். இவனுக்குப் பின்புறம் இருந்து காற்று இவனை உந்தியது, இவனுக்கு முன்புறம் ஒரு பள்ளம் இருந்தது, வீட்டுக்குச் சித்திரவதை, கண்ணீர், மற்றும் கவலையை அடையச் சென்றான். அதிர்ஷ்டம் இவனது குரலுக்கு ஓடோடி வரும் என்ற நிலை இருந்திருந்தால் இவன் வீட்டிற்கு என்றுமே திரும்பிச் சென்றிருக்க மாட்டான்.

மஜ்னுனின் காதல் குறித்த ஒரு விளக்கம்

[தொகு]

தூக்கத்திலிருந்து எழும் அதிகாலையின் பிரபுவைப் போன்றவன் மஜ்னுன். அழுபவர்களின் துருப்புக்களின் தலைவனைப் போன்றவன். காதலின் வழியின் பக்கவாட்டில் மறைந்திருக்கும் வழிகாட்டியைப் போன்றவன். காதலின் பேராபத்து விளைவிக்கக் கூடிய இடத்தில் கதிகளின் சங்கிலியைப் போன்றவன். அழுபவர்களின் இசை இவன். துயரத்தின் ஆச்சரியங்கள் மற்றும் காதலின் அழுகைகளின் வணிகன் இவன். ஒரு போர் அச்சுறுத்தல் போன்ற இரும்பு முரசின் முரசடிப்பவன் இவன். வருத்த உணர்வின் கன்னிமாடத்திற்குள் இருக்கும் கற்புடைய ஆண் துறவியைப் போன்றவன். சாத்தான்களைக் கட்டுப்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத மந்திரவாதியைப் போன்றவன். ஆசையின் எதிர்ப்புக் குணம் கொண்ட தீய சக்திகளை வைத்து கேளிக்கைச் செயல்களைச் செய்பவன். பாரசீகர்களின் ஷாநாமாவில் வரும் மன்னன் கய் கோசுரோவைப் போன்றவன். ஆனால் இவனுக்கு மகுடமோ, அரியணையோ இல்லை. தனித்து விடப்பட்ட ஆயிரக் கணக்கான எழ்மை நிலையில் உள்ளோருக்கு ஆறுதல் கூறுபவன். தாக்குவதற்காக எறும்பு இராணுவத்தை அனுப்பும் ஒரு பிரபுவைப் போன்றவன். கழுதை முதுகில் இருக்கும் சேணமே இவனது அரியணை. சபலத்திற்கு எதிராக வைக்கோல் கேடயத்தைப் பயன்படுத்துபவன். கைவிடப்பட்ட பயனற்ற ஒரு கோட்டையைப் பாதுகாக்கும் கவலாளியைப் போன்றவன் இவன்.

மஜ்னுன் மனதுடைந்தவன் ஆனான். நிற்காது அடிக்கும் அலைகளைக் கொண்ட ஒரு பரந்த கடலைப் போல் இருந்தான். காதல் கொடுக்கும் அனைத்து வலிகளையும் கற்ற இரண்டு அல்லது மூன்று தோழர்கள் இவனுக்கு இருந்தனர். இந்த நண்பர்களுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் இவன் லைலாவின் தெருவுக்கு அங்குமிங்கும் அலைவதற்காகச் செல்வான். "லைலா" என்ற வார்த்தையைத் தவிர இவனது நண்பர்கள் கூறும் எந்தவொரு வார்த்தை மீதும் இவன் கவலை கொள்ளவில்லை. இவனுக்கு அருகில் ஒரு நண்பன் கொண்டு வரும் எந்த விசயத்திற்கும் இவனிடமிருந்து பதில் வரவில்லை. மஜ்னுன் அவற்றைக் கேட்கவில்லை. இந்தக் காதலனின் அடிகள் நஜதுவுக்கு வழிகாட்டப்பட்டன. இம்மலைப் பகுதியில் தான் லைலாவின் பழங்குடியினம் குடியிருந்தது. தன் மனதை நிரப்பிய காதல் நெருப்பிலிருந்து அமைதியானது அங்கு மட்டுமே கிடைக்கும் என்று இவன் நம்பினான். குடித்தவர்களைப் போல் இவன் கைகளைத் தட்டுவான். பிறகு தடுமாறி விழுந்து மீண்டும் எழுந்து நிற்பான். கவனம் சிதறிய நிலையில் தான் எங்குள்ளான் அல்லது தான் யார் என்று இவனுக்குத் தோராயமாகத் தான் தெரிந்திருந்த போதிலும் இவன் ஒரு காதல் பாடல் பாடினான். அதிகாலைத் தென்றலுக்கு இவன் தன் காதல் சோகப் பாட்டைப் பாடிய போது இவனது கண்ணிமை முடிகள் கண்ணீரால் நனைந்திருந்தன: "அதிகாலைத் தென்றலே எழு, செல், லைலாவின் சுருள் முடிகள் மத்தியில் நீ விளையாடும் போது கூறு, "என்னை அனுப்பியவன் நீ மிதித்து நடந்த தூசி நிறைந்த பாதையில் தன் தலையை வைத்துக் கொண்டிருக்கிறான். மென்மையான காலைத் தென்றலை உன்னிடம் அனுப்பினான். தன் அனைத்துத் துயரங்களின் மணற் தூசிகளிடம் கூறுகிறான், நீயுள்ள இடத்திலிருந்து அவனுக்கு ஒரு தென்றலை அனுப்பு, அங்குள்ள மணற் தூசிகளில் சிலவற்றை அவனுக்குக் கொடு, அதன் மூலம் அவன் உயிர் வாழலாம். உனக்காக நடுங்காதவன் காற்றினால் அடித்துச் செல்லப்படும் மணற் தூசியை விட மதிப்புடையவன் கிடையாது. உனக்காக தன் ஆன்மாவைக் கொடுக்க ஒருவன் மறுத்தால் துயரத்தால் இறப்பதே அவனால் செய்ய முடிந்த சிறந்த செயலாக இருக்கும். காதலின் சீறும் நெருப்பில் என் ஆசை என்னை அழிக்காவிட்டால் நான் இந்தக் கண்ணீர் வெள்ளத்தை அழுக மாட்டேன். காதல் என் இதயத்தை எரிக்காவிட்டால் என் தோழியே என்றுமே நிற்காத இந்த சோகக் கண்ணீர்கள் இல்லாமல் போகுமா. ஒட்டு மொத்த உலகின் வானத்தையும் ஒளிரூட்டும் சூரியன் என் அனைத்து பெரு மூச்சுகளையும் எரிக்குமா. என் ஆன்மாவின் ஒளித்து வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியே அங்கு சிறகடிக்கும் உன் அந்துப் பூச்சியான என்னை எரித்து விடாதே. என் இன்றியமையாதவை அனைத்தும் காதலால் எரிக்கப்படுவதால் உன் கண்களின் மந்திர சக்தி என் தூக்கத்தைக் கொள்ளையடித்து விட்டது. உனக்காக நான் படும் துயரமானது என் இதயத்துக்கு மென்மையாக உள்ளது. வலியும் நீயே, மருந்தும் நீயே. என் இதயத்தை மீண்டும் ஆற்றும் காயம் நீ. நிலவே உன் பார்வை மஜ்னுனின் மீது படாததால் என் மீது பிறர் கண் பட்டுவிட்டது."

லைலாவின் வீட்டிற்குச் செல்லும் மஜ்னுன் அங்கு பாடுகிறான்

[தொகு]

ஒரு மாலையில் மருள்மாலைக் காற்றானது பட்டு ஆடையைப் போல் மென்மையாக இருந்தது, வானில் மிதந்த ஒளிவட்டத்தைக் கொண்ட நிலவானது ஒளிரும் காதணியைப் போல் இருந்தது, அடர் செந்நிற சூரியனுக்குப் பக்கவாட்டில் பாதரசத் துளிகளைப் போல் விண்மீன்கள் ஒளிர்ந்தன. பாதரசத்தைப் போல் இருந்த மஜ்னுனின் இதயமானது சிந்தியது, இரண்டாகப் பிளந்தது. தனது சில நண்பர்களுடன் பொறுமையற்று, பிரார்த்தனை செய்தும், கவிதை பாடியும் தன் காதலி வாழ்ந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். இவனது இதயம் ஏற்கனவே தொலைந்து விட்டதால் ஒரு குடிகாரனைப் போல் இவனால் இழந்ததைக் கணக்கிட இயலவில்லை. அன்று தன் கூடாரத்திற்குள் லைலா அமர்ந்திருந்தாள், வாசல் திரையானது அரேபியர் முறைப் படி பின்னால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. அவள் இவனைக் கண்டாள், அன்புடன் பார்த்தாள், தனக்குக் கிடைக்க வாய்ப்பில்லாதவனைக் கண்டாள். இவன் அவளைக் கண்டான், தன் பாடலைத் தொடங்கினான். தொட்டிலில் வைக்கப்பட்ட விண்மீனைப் போல் இருந்த லைலா பிறர் பார்வையிலிருந்து பாதி மறைக்கப்பட்டிருந்தாள். இரவில் இவளைக் காக்கும் காவல் அதிகாரியாக மஜ்னுன் இருந்தான். லைலா தன் முக்காட்டை நீக்கி தன் கூந்தலை கைகளால் பற்றினாள். தன் நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையிலுள்ள பாடலை மஜ்னுன் பாடத் தொடங்கினான். லைலாவின் இதயத்தில் ஒரு யாழானது சோக கீதம் வாசித்தது. மஜ்னுனின் தலையில் ஒரு நரம்பிசைக் கருவியானது டங் எனும் தெறிப்பொலியை மீட்டியது. இருள் குறையும் போது ஏற்படும் அதிகாலை வெளிச்சம் லைலா ஆவாள். தன்னையே உருக்கிக் கொண்டு அணைந்த மெழுகுவர்த்தி மஜ்னுன். கனிகள் விளையும் நிலத்தில் உள்ள ஒரு தோட்டம் லைலா ஆவாள். தனக்குத் தன்னையே பிடிக்காது என்று முத்திரை குத்திக் கொண்டதன் வடு மஜ்னுன் ஆவான். தன்னுடைய ஒளிர் வெளிச்சத்துடன் கூடிய முழு நிலவு லைலா ஆவாள். அவளுக்கு முன் மஜ்னுன் நாணலைப் போன்றவன், பலவீனமான மெலிந்தவனாக இருந்தான். லைலா ஒரு ரோஜாப் புதரைப் போன்றவள், பிரகாசமாகவும் அழகாகவும் இருந்தாள். மஜ்னுன் அவளிடம் கெஞ்சுபவன், குனிந்து பரிதாபத்திற்குரியவனாக இருந்தான். லைலா வன தேவதைக் குழந்தையைப் போல் இருந்தாள், மஜ்னுன் காட்டுத் தனமாகப் பரவிய தீயைப் போல் இருந்தான். இன்னும் புதிதாக வளரும் ஒரு நிலத்தைப் போல் லைலா இருந்தாள், இலையுதிர் காலக் காற்றடிக்கும் நிலத்தைப் போல் மஜ்னுன் இருந்தான். அதிகாலையில் காண்பதற்கே அழகாக லைலா இருந்தாள், சூரியன் உதிக்கும் போது மறைந்து போகும் ஒரு விளக்கைப் போல் மஜ்னுன் இருந்தான். லைலாவின் பிறரைச் சீண்டும் சுருள் முடிகள் ஓர் அலையைப் போல் விழுந்தன. மஜ்னுனின் காதணியானது இவன் அவளுக்கு ஓர் அடிமை என்பதை உணர்த்தியது. லைலா பட்டை நெய்தால், மஜ்னுன் பிறர் கண் பட்ட துரதிட்டத்தைப் போக்குவதற்காக கசப்பான ரூ செடியை எரித்தான். லைலா ஒரு ரோஜாவைப் போல் இருந்தாள், அதே நேரத்தில் ஒரு ரோஜா வழங்கும் கண்ணீரான பன்னீரை மஜ்னுனின் கண்கள் சிந்தின. லைலா தன் அழகான கூந்தலை அவிழ்த்து விரித்தாள். தன் நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையில் மஜ்னுன் கண்ணீரை முத்துக்களாகச் சிந்தினான். அவளது நறுமணமானது இவன் மனதைக் கவர்ந்தது. அவள் விருப்பம் நிறைவேறியது. இவன் அவளைத் தேடினான், அவள் பக்கம் விரைந்தான். தங்களை யாரும் கண்டு விடுவார்களோ என அஞ்சிய அவர்கள், சந்திப்பதன் பிரச்சினைகளை உணர்ந்து, முன் பின் தெரியாத இருவரைப் போல் நடந்து கொண்டனர், விலகியே இருந்தனர். இவர்களது ஒரே தூதுவர்கள் வேகமாகப் பார்த்துக் கொண்ட பார்வைகள் மட்டுமே ஆகும். இவர்கள் கவனத்துடன் நடந்து கொண்டனர். பிறர் இவர்கள் குறித்துப் பேச எந்த வாய்ப்பையும் இவர்கள் வழங்கவில்லை. தங்களைப் பிரித்த ஆற்றின் மேல் இருந்த பாலமானது தற்போது நிரந்தரமாக உடைந்து விட்டது என பாசாங்கு செய்தனர்.

தன் மகனுக்காக லைலாவைப் பெண் கேட்கும் மஜ்னுனின் தந்தை

[தொகு]

கவலையுற்ற அவர்கள் இவ்வாறாகப் பிரிந்து இருந்தனர். தன் சோக துயரங்களை விவரிக்கும் பாடல்களை மஜ்னுன் பாடினான். இதே சோகமான, இக்கட்டான சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுடன் ஒவ்வொரு இரவும் பாடிக் கொண்டே நஜத்திற்குச் சென்றான். விதியால் பாதிக்கப்பட்டவர்கள், மனமுடைந்தவர்கள், காட்டுத் தோழர்கள் ஆகியோர் மனத் தயக்கமற்ற, நாணமற்ற குழுவை உருவாக்கினார்கள். இவனது தந்தை தன் மகிழ்ச்சியற்ற மகன் மீது பரிவு கொண்டார். இவன் செய்த அனைத்தையும் இவனது உறவினர்கள் புகாராகக் கூறினார்கள். இவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறினர். இவன் அவற்றைப் புறந்தள்ளினான். இவனைச் சோர்வுணர்வு கொள்ளச் செய்த அறநெறிக் கதைகளை இவனுக்குக் கூறினர். அறிவுரையானது இயல்பு கடந்ததாக மற்றும் பாராட்டுக்குரியதாக இருக்கும். ஆனால் காதல் வரும் போது அறிவுரையின் உபயோகமானது இல்லாமல் போகிறது. மஜ்னுனின் இரங்கத்தக்க தந்தை மகிழ்ச்சியை இழந்தவரைப் போல் இருந்தார். அவரது மனமானது தன் துயருற்ற மகனுக்காக வேதனையடைந்தது. குழப்பம் மற்றும் தன்னம்பிக்கையற்றுப் போன அவர் தன் மகனின் வேதனையடைந்த மனதை இலகுவாக்க ஏதேனும் வழியைத் தேட முயன்றார். என்ன நடக்கிறது என அவர் தன் குடும்பத்தாரிடம் கேட்டார். ஒவ்வொருவரும் ஒரே கதையைக் கூறினர்: "இவனது தலையும், மனமும் பைத்தியக்காரத் தனமான சுழற்சியில் உள்ளது, இவை அனைத்திற்கும் காரணம் அப்பெண் தான்." அவர்களின் இந்த வார்த்தைகளை அவர் கேட்ட போது தன் மகனைச் சரி செய்ய ஏதேனும் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என எண்ணினார். அவர் எண்ணினார்: "இத்தகைய புகழ் பெற்ற இந்த முத்துப் போன்ற பெண் கய்சுவின் மகுடத்தில் ஒரு மின்னும் ஆபரணமாக இருப்பாள். அவளது பழங்குடியினத்திலேயே அழகான இவளை என் மகன் மனைவி என்று அழைக்கலாம். இவனது வாழ்வின் அன்புடைய, ஈர்க்கும் பண்புடையவளை அன்பிற்குரியவள் என்று அழைக்கலாம்." கய்சுவின் தந்தை தற்போது முன் வைத்த திட்டத்தைப் பழங்குடியினத்தில் உள்ள எந்தவொரு மூத்தோரும் எதிர்க்கவில்லை. தங்களது ஒப்பற்ற ஆபரணத்திற்கு வாழ்க்கைத் துணையாக ஏற்றது இந்தத் துளையிடப்படாத முத்து தான் என உறுதி எடுத்தனர். வேதனையடைந்த தந்தைக்காக இப்பயணத்தை மேற்கொள்ள ஒரு குழுவாக அவர்கள் ஆயத்தம் ஆயினர். தங்களால் முடிந்தால் மஜ்னுனை அவன் மிகுந்த நேசம் கொண்ட முழு நிலவுக்கு இறுதியில் மணம் முடித்து வைப்போம் என்று அவர்கள் கூறினர். மஜ்னுனின் தந்தை சையது அமீரி இதைக் கேட்ட போது அவர் புன்னகைத்தார், தன் காதல் சோகமுடைய மகனுக்காக அழுவதை நிறுத்தினார். இந்நோக்கத்திற்குத் தேவைப்பட்ட அனைத்து கௌரவமான நடத்தையுடன் வினையார்ந்து குழுவினர் புறப்பட்டனர். லைலாவின் உயர் குடியினரும், பொது மக்களும் இவர்களைச் சந்திக்க வெளியே வந்தனர். இவர்களை வரவேற்க விருந்தோம்பலுடன் வந்தனர். அனைவரது முன்னிலையில் மஜ்னுனின் குழுவினரின் புகழைக் கூறினர். பின்னர் பசியாறுவதற்காக அவர்களுக்கு முன் உணவு மற்றும் பொருட்களை பரப்பி வைத்தனர். அவர்கள் கூறினர், "உங்களுக்கு எங்களிடமிருந்து என்ன வேண்டும், எதைப் பற்றி விவாதிக்க உங்களுக்கு ஆர்வமாக உள்ளது? உங்கள் தேவையை எங்களிடம் கூறுங்கள், உங்களுக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் ஒரு விருந்தாளி கோருவதைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்." சையது அமீரி பதிலளித்தார், "பேசுவதற்கு முன் உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம், நம் பழங்குடியினங்கள் இரண்டுமே விரும்பும் இரு மிகச் சிறந்த குழந்தைகளின் விருப்பங்களை ஊக்குவிக்கவே இது." பிறகு குழுவிலிருந்த அனைவரிலிருந்தும் அவர் லைலாவின் தந்தையைத் தனித்துக் குறிப்பிட்டார். அவர் கூறினார், "நம் இரு குழந்தைகளும் அவர்களது திருமண நாளில் ஒன்றாக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. என் மகன் ஒரு தாகமுடைய பாலைவன இளைஞன், உங்கள் தூய்மையான வெள்ளம் எங்கு பாய்கிறது என்பதை அவன் அறிந்து கவனித்து வருகிறான். அன்புடன் ஓடும் ஓர் ஓடை ஒரு தாகமுடைய ஆன்மாவுக்குப் புத்தூக்கம் அளிக்கும், அதன் நம்பிக்கைகளை உயிருடன் வைத்திருக்கும். இவ்வாறாக நான் வேண்டுவது இதுவே, நான் குறிப்பிட்ட முன்மொழிவைக் கூற எனக்கு நாணமில்லை. நீங்கள் என் புகழ் மற்றும் மதிப்பை அறிந்திருப்பீர், இந்நிலப்பரப்பின் தலைவர்களில் நான் முதலானவன் என புரிந்திருப்பீர். அன்புடைய அமைதி அல்லது பழி வாங்கும் போர் ஆகியவற்றின் வழிகளுக்கான ஆதரவாளர்கள் மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டையுமே நான் கொண்டுள்ளேன். நான் கேட்பதற்கு வந்துள்ளேன், கொடுப்பதற்கு சிறந்த ஒன்றை நீங்கள் கொண்டுள்ளீர், அனுபவ அறிவுடன் செயல்படுங்கள், கொடுங்கள், அனைத்தும் நல்லதாகவே நடக்கும். ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விலையைக் கூறுங்கள், நான் அதற்கும் மேலாகச் செலுத்துவேன், நீங்கள் சொல்ல வேண்டியது மட்டுமே பாக்கி." லைலாவின் தந்தை இதைக் கேட்ட போது பதிலளித்தார், "இது நம்மால் இயலாது, இவை சொர்க்கத்திலேயே நிச்சயிக்கப்படுகின்றன. உங்கள் வார்த்தைகள் என்னை ஈர்த்தாலும், எனக்குக் காயம் ஏற்படுத்தும் தீக்குள் நான் நடக்க முடியாது. உங்கள் கோரிக்கையில் நட்பிருந்தாலும், நீங்கள் பரிந்துரைப்பதற்கு எதிராகக் கூற நிறைய உள்ளது. உங்கள் மகன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறான் ஆனால் பொருத்தமற்றவன். இவனது எண்ணம் மறுக்க முடியாதது. இவன் மன நலம் குன்றியுள்ளான், அதைக் காண முடிகிறது. ஒரு மன நலம் குன்றியவன் எங்களுக்கு ஏற்றவன் என எண்ணுவது முட்டாள் தனமானது. கடவுள் இவனைக் குணப்படுத்துவார் எனப் பிரார்த்தியுங்கள். இவனது பிரச்சினை ஒரு முறை தீர்ந்து விட்டால் அதுவே இந்த உண்மையான காதலனைப் போற்றுவதற்கான நேரமாக இருக்கும். உங்கள் மகன் செயலாற்றலுடன் இயல்பாக மாறும் வரை இவ்விசயத்தை என்னிடம் மீண்டும் கொண்டு வராதீர்கள். குறையுடைய ஆபரணத்தை யார் வாங்குவார்? பிய்ந்து விழுவது போல் உள்ள நூலையுடைய ஒரு கழுத்து மாலையை யார் செய்வார்கள்? அரேபியர்கள் வதந்திகளை விரும்புபவர்கள், அது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் இதற்குச் சம்மதித்தால் அவர்கள் என்ன கதைகளைக் கூறுவார்கள் என யாருக்குத் தெரியும்! நாம் இவ்வாறு பேசினோம் என்பதை மறந்து விடுங்கள், இது முடிந்து விட்டது, இதைத் தொலைத்தொழித்து மறதி நிலைக்கு அனுப்பி விடுங்கள்." அமீரியும், அவரது தோழர்களும் வீட்டிற்கு மீண்டும் செல்ல வேண்டும் எனக் கண்டனர். கொள்ளையர்களால் தாக்கப்பட்ட, கவிகை வண்டி கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்ட சோகமடைந்த பயணிகளைப் போல் முடிக்கப்படாத மற்றும் ஏமாற்றமடைந்த நிலையில் அவர்கள் தற்போது வீட்டிற்குச் செல்ல வேண்டி வந்தது.

மஜ்னுன் அடைவான் என இவர்கள் அறிந்திருந்த மிகவும் மோசமான வேதனையை ஆற்றத் தங்களால் முடிந்தவற்றை அவர்கள் செய்தனர். எனினும், அவர்கள் சொன்னது அனைத்தும் முட்களை நெருப்பில் போட்டதானது விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பை கொளுந்து விட்டு எரியச் செய்தது போல் அமைந்தது. அவர்கள் கூறினர், "நம் பழங்குடியினத்தில் இதை விட அழகான பெண்கள் உள்ளனர். உன் ஆன்மாவைப் பேரின்பத்துடன் செறிவூட்டும் சிலைகலைப் போன்றவர்கள் அவர்கள். அவர்கள் வாசனைத் திராவியம் பூசிய கை கால்களையும், நார்த் துணி ஆடைகளையும் கொண்டுள்ளனர். அவர்களது காதுகள் முத்துக்களைப் போன்றவை, அவர்கள் ஓவியங்களைப் போல் அழகானவர்கள். எல்லா வகையிலும் மலர்கள் நிறைந்த ஊற்றை விட அவர்கள் மிகவும் இனியவர்கள். உனக்கு முற்றிலும் முன் பின் தெரியாத ஒரு பெண்ணை ஏன் பின் தொடர வேண்டும் என எண்ணுகிறாய்? நீ முடிவு செய்யும் எங்களில் ஒருவர் உன் மங்களகரமான, உன்னதமான மணப் பெண்ணைத் தேர்ந்தெடுப்போமாக. உன் இதயத்தை மகிழ்விக்கும் உதவித் துணையாக, இனிமையான பரிவு என்றுமே குறைந்திடாமல் அளிக்கும் ஒரு தோழியாக அவள் இருப்பாள். லைலா உன் ஆன்மாவை எவ்வாறு காயப்படுத்தினாள்! நீ அவளை அனுமதிக்காதே, தற்போது நீ அவளை மறந்து விடுவதே உனக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்."

லைலா மீதான காதலானது மஜ்னுனை காட்டியல்பான இடத்திற்குச் செல்ல வைக்கிறது

[தொகு]

அவர்களின் வார்த்தைகள் மஜ்னுனுக்குக் கசந்தன. நிலை குலைந்த, மன நோய் கொண்ட, கவனம் சிதைந்த ஒருவனைப் போல் மஜ்னுன் நடந்து கொண்டான். தன் சவப் போர்வையைக் கிழிக்கும் ஓர் இறந்தவனைப் போல் இருந்தான். தன் ஆடைகளை விரைவாகக் கிழித்தான், கை தட்டினான், சத்தமாக அழுதான். மனதளவில் இந்த, அடுத்த உலகத்தையும் விட்டு விலகிய ஒருவனுக்கு ஆடைகள் என்ன பெரிதா? ஓசுராவை வாமேக் தேடியதானது அவனை சமவெளிகள், மலைகளுக்குக் கூட்டிச் சென்றதைப் போல மஜ்னுன் திடீரென வீட்டை விட்டுக் கிளம்புகிறான். துயரத்தால் சித்திரவதை செய்யப்பட்ட அவன் காட்டியல்பான இடத்தைத் தேடி ஆர்வத்துடன் செல்கிறான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு ஒட்டுத் தையல் செய்யப்பட்ட தளர்வான மேலங்கியை உருவாக்கினான். இவனை வீட்டில் வைத்திருந்த அனைத்து தளைகளும் உடைக்கப்பட்டன. ஒரு முன் பின் தெரியாதவனாக இவனது ஆடைகள் கிழிக்கப்பட்டு, தங்க இடம் இல்லாதவனாக பழைய கிழிந்த ஆடையுடன் தனிமையில் வாடுபவனாக, நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையில் தன்னைத் தானே கொன்று கொள்ளக் கூடியவனாக, பெரிதும் மனக் கலக்கத்துடன் எங்கும் இறைவனை அழைத்துக் கொண்டு முன் குறிப்பின்றி ஓடிக் கொண்டு, தான் சென்ற இடமெல்லாம் "லைலா, லைலா" என்று அழுதான். தலைப் பாகை ஏதுமின்றி, கிழிந்த ஆடையுடன், இகழ்ச்சிப் பொருளாக, அவமானத்தின் ஆதரமாக ஆனான். நல்லது, கெட்டது ஆகியவற்றுக்கு வேறுபாடு தெரியாதவனைப் போல நல்லது, கெட்டது ஆகிய இரண்டையுமே வரவேற்றான். ஏமானின் இரவில் மாலை விண்மீனால் ஏற்படும் ஒளியைப் போன்ற இனிமையான பாடல்களைப் பாடினான். இவன் பாடிய ஒவ்வொரு வரியும் மனதால் கற்கப்பட்டிருந்தது. போலித் தனமற்ற இவனது கலையில் பிறர் மனதைப் பறி கொடுத்தனர். இவன் காலடித் தடத்தை பிறர் பின் தொடர்ந்தனர். இவன் ஏன் நம்பிக்கை அனைத்தையும் இழந்தான் என யோசித்தனர். இவன் பாடலைக் கேட்க வேண்டும் என்பதற்காகக் கண்ணீர் விட்டனர். ஆனால் இவன் அவர்கள் குறித்தோ அல்லது தன் பாடல்களில், தன் காதலில் அவர்களின் ஆர்வம் குறித்தோ கண்டு கொள்ளவில்லை. இந்த உலகம் தற்போது அவனுக்கு ஒன்றும் கிடையாது. தற்போது இவன் உயிருடன் உள்ளவனைப் போல் வாழவில்லை, ஆனால் இன்னும் இறக்காதவனைப் போலவே இருந்தான். சேறு நிறைந்த பாறையில் விழுந்தான். மற்றொரு கடினமான பாறையில் தன் மார்பு படும் படி விழுந்தான். இவனது காயமடைந்த சதையானது கண்ணாடிக் கோப்பையிலிருந்து தூக்கியெறியப்படும் அடி மண்டியைப் போல இருந்தது. தன் சோடியிடமிருந்து பிரிக்கப்பட்ட பறவையைப் போல் இருந்தான். முழுவதுமாக உருகி அணையப் போகும் மெழுகுவர்த்தியைப் போல் இருந்தான். இவனது முகத்தில் மணல் ஒட்டியிருந்தது, தனிப் பண்புடைய இவனது இதயமானது வலியுடன் இருந்தது, மணல் தூசி நிறைந்த சமவெளியில் வழிபடுவதற்கான பாயை விரித்தான். அதில் அமர்ந்து அழுதான், முனகினான், "நான் படும் சோகம் மற்றும் உணர்ச்சிகளை எது குணப்படுத்தும்? வீட்டிலிருந்து தொலை தூரத்திற்கு அலைந்து திரிந்து விட்டேன், திரும்பிச் செல்லும் வழி எனக்குத் தெரியவில்லை அல்லது எங்கு செல்ல வேண்டும் என்பதும் எனக்குத் தெரியவில்லை. என்னைத் தற்காக்கும் என் வீடு, குடும்பத்தை விட்டு தொலை தூரம் வந்து விட்டேன். என்னுடன் நட்பு கொள்ளும் பழைய தோழர்களிடமிருந்து தொலை தூரம் வந்து விட்டேன். ஒரு கல் மீது எறியப்பட்ட ஒரு கண்ணாடியை போல என் பெயரும், மரியாதையும் என்றென்றைக்கும் உடைபட்டு விட்டது. என்னைப் பொருத்த வரை, நல்ல அதிர்ஷ்டத்தின் முரசானது உடைந்து விட்டது. தற்போது அடிக்கும் முரசும் என்னை இங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடு என்கிறது. ஆண்கள் கூறுகின்றனர் நான் குடித்துள்ளேன் என்று, அல்லது சில நேரங்களில் காதலானது என்னை ஒரு சிலை வழிபாட்டாளனாக ஆக்கிவிட்டது என்று கூறுவதை விரும்புகின்றனர். போற்றுவதற்கு மனிதர்கள் சிலைகளை செதுக்குவதைப் போல் நான் குனிந்து வணங்கும் சிலை லைலா தான். அல்லது ஒரு துருக்கிய வேட்டையனின் பிடிக்கப்பட்ட, நடக்கத் தடுமாறுகிற மற்றும் தப்பிக்க இயலாத தேர்ந்தெடுக்கப்பட்ட இரை போல் நான் உள்ளேன். ஆனால் நான் என் காதலுக்குக் கீழ் படிந்துள்ளேன். என் இதயத்தில் அவளுக்காக நான் என்னைக் கொன்று கொள்வேன், அவளுடைய பாகத்தை எடுப்பேன்; நான் குடித்துள்ளேன் என்று அவள் கூறினால் நான் குடித்துள்ளேன், அவ்வாறே இருக்கட்டும். நான் தான் தோன்றியானவன் என்று அவள் கூறினால் நான் தான் தோன்றியானவன் தான், அதை என்னால் காண முடிகிறது. விதியால் கூட என்னைக் கட்டுப்படுத்தவோ அல்லது அடக்கி வைக்கவோ இயலாது, அல்லது என் காட்டியல்பான நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையைச் சங்கிலியிட்டு அடக்க இயலாது. என்னைக் கீழே கிடத்திய இந்த துயரக் காற்றானது என்னை இங்கேயே முடித்து விட்டு அடிப்பதை நிறுத்துமா, அல்லது இக்கணமே இடி மின்னல் என்னைத் தாக்குமா, வீடு போன்ற என்னையும், என்னுள் உள்ளவற்றையும் எரிக்குமா; என்னை எரிக்க ஒருவருமில்லை, ஆன்மாவைத் தன் பால் ஈர்க்கிற ஒரு நெருப்பாக என்னை மாற்ற மற்றும் எரிக்க ஒருவருமில்லை அல்லது கடல் பூதத்திற்கு என்னை இரையாகக் கொடுத்து என் இகழ்ச்சிக்கு உள்ளான நிலை மற்றும் என்னிடமிருந்து இந்த உலகை விடுவிக்க ஒருவருமில்லை. வெறுக்கத்தக்க ஒரு பைத்தியக்காரப் பேய் என மக்கள் அழைக்கும் நான் நேரம் ஒதுக்க தகுதியற்றவன், என் பழங்குடியினத்திற்குக் காயம் ஏற்படுத்தும் ஒரு முள்ளைப் போன்றவன் நான். என் பெயரைக் கேட்கும் போது என் நண்பர்கள் இழி நிலைக்கு ஆளாகின்றனர். தற்போது என் இரத்தம் சட்டப்பூர்வமாக சிந்தப்படலாம். ஓர் ஒதுக்கப்பட்டவன் கொல்லப்பட்டால் யாரும் தண்டிக்கப்படுவதில்லை. அன்பான நண்பர்களே, என் மனதின் தோழர்களே, விடை பெறுகிறேன், நம் பாடும் நாட்கள் முடிந்துவிட்டன. நாம் பிரிந்தாக வேண்டும். நாம் பகிர்ந்து கொண்ட, நம் நட்பிற்கு அடையாளமான கோப்பையானது தற்போது தரையில் விழுந்து விட்டது, உடைந்து விட்டது. என் நீங்கலானது இதை உடைக்கிறது, என் வெள்ளம் போன்ற கண்ணீரானது இதை அகற்றியது என்று நாம் கூறலாம், எனவே என் நண்பர்களின் காலை காயப்படுத்த எந்தவொரு துணுக்குகளும் இன்னும் இல்லை எனலாம். என் சோகத்தை அறியாத அல்லது புரிந்து கொள்ள இயலாதோரே என்னைச் செல்ல விடுங்கள், நான் தொலைந்து விட்டேன், என்னைத் தேடாதீர்கள், தொலைந்த ஒருவனுடன் பேச முயற்சிக்காதீர்கள்; நானே எதுவும் வேண்டாமென, பெருமூச்சு விடும் மற்றும் துயரம் மட்டுமே அடையும் இந்த இடத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டுமென எண்ணும் போது, என்னுடன் சண்டையிடுவதற்காக, என்னைக் காயப்படுத்துவதற்காக, என்னைத் துரத்தி விடுவதற்காக, என்னை வேட்டையாடுவதற்காக உங்களுடைய கவலையும் அச்சவுணர்வும் கொண்ட மனங்களை ஈடுபடுத்தி எவ்வளவு காலத்திற்கு அவற்றை சோர்வடையச் செய்யப் போகிறீர்கள்?."

"என் அன்பே, நான் வீழ்ந்து விட்டேன், என்னிடம் வா, அன்பான அனுதாபத்தில் என் கையைப் பற்று; இந்த காயப்பட்ட ஆன்மா உன்னுடையது; இறப்பதை விட உன் காதலனாக வாழ்வது மேல். பரிவு காட்டு, நான் உயிரோடு இருப்பதற்காகவாவது என் பலவீனமான ஆன்மாவிற்கு புத்தூக்கம் பெற ஒரு செய்தி அனுப்பு. நான் பைத்தியக்காரனாகி விட்டேன், மன நலம் குன்றி விட்டேன், மூளை ஒழுங்கு குலைந்து விட்டது, உன் கழுத்தில் ஏன் இத்தனை சங்கிலிகள்? உனது கழுத்தை இவ்வாறு மாட்டிக் கொள்ளாதே, கழுத்தைச் சுற்றி ஒரு சுருக்குக் கயிறு இருக்க வேண்டும் என்றால் அது எனக்கானது. என் மனம் நம்பிக்கையை நெய்கிறது, உன் சுருள் முடிகள் அவற்றை கிழித்தெறிகின்றன, உன் சுருள் முடிகளுக்கு இத்தகைய குரூரமான, அழிவை ஏற்படுத்தும் கலையைக் கற்றுத் தந்தது யார்? தற்போது எனக்கு உதவி புரி, நான் வீழ்ந்து விட்டேன், என்னைக் காப்பாற்று, பெருந்துயரத்திலிருந்து என்னை எழுப்பு, இதோ என் கையைப் பற்று துயரத்தின் படு குழியிலிருந்து மேலே இழு, வா, என் கையைப் பற்று, அல்லது உன் கையையாவது முத்தமிடக் கொடு. மோசமான நிலையில் உள்ள ஒரு மனிதனுக்கு உன்னால் உதவி புரிய இயலும் போது ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவது பாவமாகும். என் மேல் நீ ஏன் இரக்கம் கொள்ளக் கூடாது? ஒவ்வொரு வகையிலும் நாம் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என புனித நூல்கள் கூறவில்லையா? பாதிக்கப்பட்டவர்கள் அடையும் வலிகளை பாதிக்கப்படாத ஒருவரால் அறிய இயலாது, பசியால் பாதி இறந்த ஒருவனுக்கு ஒரு ரொட்டித் துணுக்கு போதுமானது என வயிறு நிறைந்த ஒருவன் எண்ணுகிறான். தவறுதலாக சுடும் ஒன்றை கையால் பற்றும் போது தான் சுடுதல் என்றால் என்ன என்று ஒருவன் அறிகிறான். நாம் இருவருமே மனிதர்கள். ஆனால் நீ ஒரு புதிய பச்சை இலை. நான் ஒரு காய்ந்த குச்சியாகவே எப்போதும் இருந்துள்ளேன். அல்லது தங்கம் மற்றும் தங்க முலாமை எண்ணு, முதலாமதின் சிறிதளவானது இரண்டாமதின் பெருமளவுக்குச் சமம் ஆனதாகும். என் ஆன்மாவுக்கு ஆறுதலானவளே, ஏன் என்னிடமிருந்து என் ஆன்மாவை எடுத்து என்னை இங்கு விட்டு விட்டாய்? தவறு செய்ததனால் வருத்த உணர்வு கொண்ட என் மனதால் உன்னைக் காதலித்ததை விட என் குற்றம் என்ன, என் பாவம் என்ன? ஆயிரக் கணக்கான இரவுகளிலிருந்து ஒரே ஒரு இரவை மட்டும் எனக்காகக் கொடு, அந்த ஓர் இரவில் என்ன பாவங்கள் அனுமதிக்கப்பட்டவை மற்றும் எது சரி எனக் கூறு. என்னை ஏற்றுக் கொள்வதிலிருந்து உன் தலையை பின்னோக்கி இழுத்துக் கொள்ளாதே. என் தலையில் நான் தவறு செய்ததால் ஏற்படும் குற்ற உணர்வாகவாவது இரு! உன் கற்பு துளியும் சீர் கெடாது, பாவம் அனைத்தும் என்னுடையதாகட்டும். என்னுடையதாக மட்டுமே இருக்கும் பலவற்றில் இதுவும் ஒன்றாகும். ஆனால் நீ கட்டுப்படுத்த முடியாத கோபாம் கொண்டால், உன்னிடம் நான் எப்போது மீண்டும் இரக்கம் பெறுவேன்? உன்னிடம் கோபமானது நெருப்பைப் போல் கொழுந்து விட்டெரிந்தால் என் அனைத்து கண்ணீராலும் அதை ஈரமாக்கு, அவை சீக்கிரமே தாகம் தணிக்கும். என் புது நிலவே, உன் விண்மீன் நான், உன் பார்வைகள் கண் கூசச் செய்யும் மற்றும் வரவேற்கும் வசியம் போன்றவை. உன்னுடைய சில சைகைகளுக்காக நான் நிழல்களைக் கேட்கக் கூடாது. நான் நிழல்களைக் கண்டு பயப்படுகிறேன். நான் என் நிழலைக் கண்டு பயப்படுகிறேன். நான் உன்னை நிழல்களில் கண்டேன். நீ என்னிடமிருந்து என் நிழலைத் திருடிக் கொண்டாய், என் மனதையும், ஆன்மாவையும் திருடிக் கொண்டாய்; இது என்ன வகையான காதல், என்ன வகையான மானக்கேடு? இது குரூரமான விசை ஆகும், காதலின் ஏமாற்று வேலை கிடையாது. என்ன வகையான பெயரை எனக்குக் கொண்டு வந்துள்ளாய்? எந்த வகையான பெயரையும் கொண்டிராமல் இருப்பது என்பது தான் நீ எனக்குக் கற்றுக் கொடுத்ததாகும். நான் உன்னுடன் இல்லை என்றால் நான் குறை சொல்ல மாட்டேன் ஏனெனில் அதன் பொருள் நான் மீண்டும் உன்னுடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகும். தாகம் கொண்ட ஒரு குழந்தை நீரால் நிரப்பப்பட்ட தங்கக் கோப்பை குறித்து கனவு காண்கிறது. அக்கோப்பையை அது குடிக்கிறது. ஆனால் அது தூக்கம் கலைந்து எழும் போது கனவு கலைந்து விடுகிறது. தாகத்துடன் அது தன் விரல்களை சூப்புகிறது, நாவால் துழாவுகிறது. வலி என் கை, கால்களை மோசமாக்குகிறது. கை, கால்களும், என் உடலும் உன் பெயரின் எழுத்துக்களாக வளைவது போல் எனக்குத் தோன்றுகிறது; உன் மீதான அன்பு என் மனதில் நிரம்பி வழிகிறது, அவ்வாறே இருக்கட்டும். ஆனால் மற்றவர்கள் இதை அறியவோ, காணவோ கூடாது. என்னை நம்பு உன் மீதான அன்பு என் தாய்ப் பாலுடன் என்னுள் நுழைந்தது, என் ஆன்மா பிரியும் போது அதுவும் என்னை விட்டுப் பிரிந்து விடும்." மஜ்னுன் மயங்கி தலை தரையில் படுமாறு விழுந்தான், துரதிட்டவசமாக அவனைக் கண்டோர் அவனைச் சுற்றிக் கூடினர்.

மெதுவாக அவர்கள் அவனை வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர், அது அவனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் என்று நம்பினர். முடிவிலாக் காலத்திற்கு நிலைக்காத ஒரு காதலானது உண்மையில் இளைய வயதுடையோரின் காம விளையாட்டுக்களேயன்றி வேறெதுவும் கிடையாது; உண்மையான காதல் என்பது மங்காதது, அது தன்னை விட்டு வெளியேறி அல்லது வேறு எங்கும் பார்ப்பது கிடையாது. கனவுகள் கட்டப்படும் காதல் அல்ல இது. அவை எப்போதுமே பலவீனமடைந்து கடைசியில் காணாமல் போகும். மஜ்னுனின் காதல் சின்னம் மற்றும் அதன் உன்னதமான பெயர் என்பவை காதலின் நுண்ணோக்கு, ஞானம், என்றும் நிலைத்திருக்கும் புகழ் ஆகியவையாகும்; வீசும் ஒவ்வொரு காற்றையும் நன்றியோடு ஏற்றுக் கொள்ளும் ஒரு ரோஜாவைப் போல் இவன் காதலின் சுமையைத் தாங்கினான்; ரோஜாக்களின் நறு மணத்தை தொடர்ந்து தக்க வைக்கும் பன்னீரைப் போல் தற்போது இவனது நறு மணம் நிலைத்துள்ளது. இந்த இனிமையான ரோஜாவின் நறு மணத்தை நான் இயற்றும் இனிமையான வரிகளில் தூய்மையாக்குவேன்.

மஜ்னுனை அவனது தந்தை புனிதப் பயணத்திற்குக் கூட்டிச் செல்லுதல்

[தொகு]

வானமானது நிலவால் ஆளப்படுவதைப் போலவே நிலவு போன்ற லைலா மீதான அன்பானது மஜ்னுனை ஆண்டது. ஒவ்வொரு நாளும் இவனது பெயர் பரவியது. ஒரு தலைக் காதலால் ஏற்பட்ட சோகத்தால் மேற்கொண்ட கற்பனைகள் அவனது தலையை நிரப்பின. நம்மை நிலையாக, சுய-கட்டுப்பாடுடையவராக, மற்றும் இயல்பான நடத்தையுள்ளவராக வைத்திருக்கும் ஒவ்வொரு சங்கிலியையும் ஒரு மனிதனின் இத்தகைய இயல்பானது உடைக்கிறது. அதிர்ஷ்டம் இவனை விட்டு விலகியது. இவனது தந்தை இவன் மீது இருந்த நம்பிக்கை அனைத்தையும் இழந்தார். இவனுக்கு மன நலம் குன்றியது என பற்றுறுதி கொண்டார். ஒவ்வொரு நாள் இரவு முழுவதும் கடவுளிடமிருந்து உதவியை வேண்டினார். காலை வெளிச்சம் வரும் வரையில் கவலையுடன் பார்த்தார். ஒவ்வொரு சன்னதி மற்றும் புனிதத் தலத்துக்குப் பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு முறையும் வேண்டுதல் நிறைவேறாமல் திரும்பி வந்தார். இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். ஏதாவது ஒரு தீர்வு இதற்குக் காணப்படலாம் என்று நம்பினர். ஒவ்வொருவரும் ஓர் உத்தி அல்லது திட்டத்தைக் குறிப்பிட்டனர். இந்த உதவியற்ற மனிதனுக்கு ஏதாவது உதவி செய்ய இயலுமா என்று எண்ணினர். அவர்கள் புனிதப் பயணம் செல்லலாம் என்று குறிப்பிட்டனர். மஜ்னுனின் தந்தை புனிதப் பயணத்திற்குத் தயாரானார்.

நேரம் வந்தது. அவர் ஓர் ஒட்டகத்தின் முதுகில் அமருவதற்கு குப்பை கூளங்களைக் கட்டினார். அங்கு தனது மகனை அமர வைத்தார். ஒரு தொட்டிலில் வைக்கப்பட்ட நிலவைப் போல மஜ்னுன் நன்முறையில் அமர்ந்திருந்தான். பயணம் முழுவதும் மெதுவாக அசைந்தாடிக் கொண்டே வந்தான். தன்னுடைய மகனின் கையை மென்மையாக பிடித்த அவர் "இளைஞனே, இது விளையாட்டல்ல; இங்கு தான் மனிதர்கள் ஒவ்வொரு சாபத்திலிருந்தும் குணப்படுத்தப்படுகின்றனர். இந்தப் புனித இடத்தை ஒரு முறை சுற்று, உன்னுடைய மனதைச் சுற்றும் கவலையில் இருந்து நீ தப்பிக்கலாம்; கடவுளே, இந்த வலியிலிருந்து என்னை விடுவி, உன்னுடைய கருணையை எனக்குக் காட்டு, என்னை மீண்டும் நலமாக்கு; என்னுடைய முழு கவனத்தையும் ஆட்கொண்டிருக்கும் இந்நிலையில் இருந்து என்னைக் காப்பாற்று; எனக்கு ஆறுதலளி, நலம் மற்றும் இயல்பான நிலைக்கு மாறும் வழியை எனக்குக் காட்டு; காதலுக்கு அடிமையானேன் மற்றும் எனக்கு எசமானனாகக் காதல் உள்ளது என்பதைத் தெரிந்து கொள், காதலின் காயத்தை ஏற்படுத்த கூடிய அழிவிலிருந்து என்னை விடுவி" என்று வேண்டிக் கொள் என்று அவனிடம் கூறினார்.

காதல் குறித்த இந்த அனைத்துப் பேச்சுக்களையும் மஜ்னுன் கேட்டான். முதலில் அவன் அழுதான். பிறகு உடல் குலுங்குமாறு சிரித்தான். மஜ்னுன், "ஒரு கதவில் உள்ள உலோகப் பொருளைப் போன்றவன் நான், காத்திருக்கும் ஒரு மோதிரத்தைப் போன்றவன், ஆனால் அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை, காதலுக்காக நான் எனது ஆன்மாவை விற்று விட்டேன், காதலின் பிரகாசமான காதணியானது என்றுமே என் காதில் இருந்து மறையாமல் இருக்கட்டும்! இவர்கள் கூறுகின்றனர் 'காதலில் இருந்து உன்னை விடு வித்துக் கொள்' என்று. ஆனால் அறிவுள்ளோர் இவ்வாறு பேசுவதில்லை! என் வலிமை அனைத்தையும் நான் காதலில் இருந்தே பெறுகின்றேன், காதல் இருந்தால் நானும் இறப்பிற்கு இரையாக மாட்டேன்; காதலே என்னை உருவாக்கியது, வடிவம் கொடுத்தது, நாகரிகப்படுத்தியது; இந்தக் காதல் இல்லை என்றால் என்னுடைய எதிர்காலம் என்னாவது? மறைத்து வைக்கக் காதல் இல்லாத மனமானது ஓடும் கவலை அலையால் அடித்துச் செல்லப்படும்! கடவுளே உன்னுடைய விண்ணுலகம் சார்ந்த இயல்புகளால், ஒருவரும் விவாதத்திற்கு உள்ளாக்காத உன்னுடைய குறைபாடற்ற சக்தியால் காதலின் அனைத்து எல்லைகளையும் என்னை அறிய வை; காலப்போக்கில் நான் இறக்கலாம். ஆனால் இத்தகைய காதல் என்றுமே இறக்கக் கூடாது. ஒளியின் ஆதாரத்தில் இருந்து என்றும் நிலைத்திருக்கிற வெளிச்சத்தைக் கொடு. எனது மங்கலான பார்வையிலிருந்து இத்தகைய கண் மையை மறைத்து வைக்காதே. இப்போது காதல் மயக்கத்தில் இருந்தாலும், இதை விடப் பெரும் காதலால் ஆட்கொள்ளப்பட்டுள்ளேன் என்பதைச் சீக்கிரமே நான் நிரூபிப்பேன். 'காதலில் இருந்து தப்பித்துக் கொள், தொடர்ந்து லைலாவை வேண்டும் உனது மனதில் இருந்து முழுவதுமாக விடுவித்துக் கொள்' என்று இவர்கள் கூறுகின்றனர். கடவுளே, எப்போதும் மற்றும் ஒவ்வொரு இடத்திலும் லைலாவின் முகத்தை கண நேரக் காட்சியாகக் காண வேண்டிய என்னுடைய தேவையை அதிகப்படுத்து, எனக்கு எஞ்சியிருக்கும் ஆயுட்கால ஆண்டுகளை எடுத்துக் கொள், அதை அவளுக்குக் கொடுத்து அவளது ஆயுட் காலத்தை நீட்டி. நம்பிக்கை இழந்த நிலையில் எனது முடிகள் உதிர்ந்துள்ளன, ஆனால் அவளுக்கு ஒரு முடி கூட உதிரக் கூடாது என்று நான் விரும்புகிறேன். நான் சாட்சியமாக அணிந்திருக்கும் எனது காதணியைப் போலவே நான் அவளுடையவன் என்பது என்னுடைய தொடர்ச்சியான சாட்சியாக இருக்கட்டும். என்னுடைய புகழானது என்றுமே அவளுடைய பெயரில் இருந்து பிரிக்கப்படாமல் இருக்கட்டும். அவளுடைய தூய்மையான அழகானது நான் தற்போது என்னுடைய ஆன்மாவை அவளுக்காகத் தியாகம் செய்து இறப்பதற்குக் காரணம் ஆகட்டும். இங்கு நான் ஒரு மெழுகுவர்த்தி போல் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு நாளைக்கு இந்த தீ சுவாலையானது அணையாமல் இருக்கட்டும். எனக்குள் இருக்கும் அனைத்து காதலும் முதிர்ச்சி அடையாமல் இருக்கட்டும். ஆனால் பெருகி நூறு மடங்காகட்டும்" என்று கூறினான்.

மஜ்னுன் பேசிய போது அவனுடைய கவலை அடைந்த தந்தை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. மஜ்னுனின் மனதானது கைதியாகி உள்ளதைக் கண்டார். இந்த மன நலக் குறைவானது குணப்படுத்த இயலாதது என்பதை உறுதி செய்து கொண்டார். தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிச் சென்றார். தன்னுடைய குடும்பத்திடம் தான் கேட்ட அனைத்தும் தனது மகன் நம்பிக்கையற்ற நிலைமையில் இருப்பதை நிரூபித்ததாகக் குறிப்பிட்டார். அவர், "அவன் புண்ணியத் தலத்துக்குச் சென்றான். மனிதர்களை அறிவார்ந்தவர்களாகவும், இயல்பானவர்களாகவும் வைத்திருக்கும் சங்கிலியானது அவனிடத்தில் உடைக்கப்பட்டது என்றார். சரதுச சமயத்தைச் சேர்ந்தவர்கள் பிரார்த்திக்கும் போது ஏற்படும் சத்தத்தைப் போலவே மஜ்னுனின் முணு முணுப்பு இருந்ததாகக் குறிப்பிட்டார். லைலா இவனுக்குக் கொடுத்த ஆழ்ந்த துன்பத்தில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பதை அங்கு படித்த பக்கமானது இவனுக்குக் கற்றுத் தந்திருக்கும் என்று நான் எண்ணினேன். எக்காலத்திற்கும் இத்தகைய நிலையுடன் இவன் சபிக்கப்பட்டான் என்பதை இவனுடைய அனைத்து நம்பிக்கைகளும், பிரார்த்தனைகளும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன" என்று அவர் கூறினார்.

லைலாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் மஜ்னுனுக்கு எதிராகத் திரும்புகின்றனர்

[தொகு]

இச்செய்தி ஒவ்வொருவரையும் அடைந்ததால் சட்டத்திற்குக் கட்டுப்படாத முரடர்களையும் கூட அடைந்தது. தன் காதலி மீதான காதலானது ஓர் இனிமையான இளைஞனை முழுவதுமாக மன நலம் குன்றியவனாக மாற்றி விட்டதை ஆண்கள் கேட்டறிந்தனர். இச்செய்தி அவர்களது ஆர்வத்தைத் தூண்டியது. அவர்கள் அதை விவாதித்தனர். ஆராய்ந்து மிகைப்படுத்தினர். அவர்கள் கூறிய அனைத்தையும் அமர்ந்திருந்த லைலா துன்பத்துடன் தாங்கிக் கொண்டாள். ஆண்கள் பரப்பிய அனைத்து வதந்திகளாலும் கவலை கொண்டாள்.

இக்கதையைப் பற்றி தங்களது பழங்குடியினத் தலைவனிடம் கூற லைலாவின் உறவினர்கள் சிலர் தவறவில்லை. அவர்கள் "ஒரு முட்டாள் தனமான இளைஞன், ஒரு தலைக் காதலால் சோகமுற்ற முன் பின் தெரியாதவன், நம் நற்பெயருக்கு அங்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒவ்வொரு நாளும் வருகிறான். அவனைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. நாய்களைப் போன்ற முரடர்களின் கூட்டம் அவனுக்குப் பின் வருகிறது. வருத்தத்துடன், முட்டாள் தனத்துடன் அவன் பதுங்கிப் பதுங்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவன் நடனமாடுகிறான், சில நேரங்களில் அவன் தரையை முத்தமிடுகிறான், அல்லது காதல் பாடல்களைப் பாடுகிறான். அவனது பாடல்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் உணர்ச்சி வயப்பட்ட மனப் பாங்கைப் போல அவனது குரலானது இனிமையாக உள்ளது. ஒவ்வொரு உட்சிக்கல் மிக்க சோகப் பாடலும் இவன் படும் பாட்டின் இரகசியங்களை வெளிக் காட்டுகிறது. அவனது பாடல்களிலிருந்து ஆண்கள் நம் நற்பெயரை சீர் குலைக்கும் வெட்கக் கேடான வாசகங்களை அறிகின்றனர். அவனது பெரு மூச்சுகள் லைலாவைக் காயப்படுத்துகின்றன. அவனது மூச்சுக் காற்று லைலாவின் சுடரொளிக்கு உயிர் கொடுக்காது இறப்பையே கொடுக்கும். அவன் ஆட்டைப் போன்றவன். எனவே ஆட்டைத் துரத்துவதைப் போலவே அவனையும் துரத்துங்கள். பிறகு அவன் செய்த சேதத்தை நாம் சரி செய்யத் தொடங்கலாம்!". இதைக் கேட்ட போது அவர்களது போர்க் குணம் கொண்ட தலைவன் (ஒரு வன்னடத்தையுடைய, சச்சரவு செய்யும், கடுமையான மற்றும் எவர் பாலும் தன்னலமின்மையைக் காணாதவன்) தன் பிரகாசமான வாளை உருவினான். அச்சம் தரத் தக்க அழுகையுடன் கூக்குரலிட்டான், "அவன் நம்மை வெட்கப்பட வைத்திருந்தால், இது தான் நம் பதில்!" என்றான். கய்சுவின் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் இவர்களின் திட்டத்தைப் பற்றி அறிந்தனர். தன் இனத்திற்குத் தகவல் தெரிவிக்க வேகமாகச் சென்றனர். தான் கேட்டதை ஆமிரியிடம் கூறினான் "துன்பமாக மாறும் வாய்ப்புடைய ஒன்றைத் தடுங்கள், அவர்கள் தலைவன் நெருப்பைப் போல் மூர்க்கமானவனாக உள்ளான், வெள்ள நீரைப் போல் இரைச்சல் ஏற்படுத்துகிறான், மிருகத் தனமாக, வெறுப்புணர்ச்சியுடன் உள்ளான். மஜ்னுன் இச்செய்தியைக் கேட்டிருக்கா விட்டால் அத்தலைவன் மஜ்னுனைப் பின் தொடர்வான். மஜ்னுன் இழக்கப் போவது அவன் தலையைத் தான் என நான் அஞ்சுகிறேன். ஓர் ஆபத்தான, தரையில் உள்ள ஆழமான துளை மஜ்னுனுக்கு முன்னால் கொட்டாவி விடுகிறது. நாம் மஜ்னுனை வீட்டிற்கு மீண்டும் வேகமாக சீக்கிரம் கூட்டி வர வேண்டும்!".

லைலா மீது காற்றிடம் புகாரளிக்கும் மஜ்னுன்

[தொகு]

லைலாவுக்குத் திருமணம் நடந்தது குறித்து மஜ்னுன் அறிந்த போது அவனது துயரம் பன்மடங்கானது, தன் விதியை அவன் சபித்தான்; தன் காதலி தற்போது ஒரு மணப்பெண் என்ற செய்தியானது மஜ்னுன் என்ற இவன் பெயர் விளக்கிய மன நலக் குறைவை அதிகரித்தது; சிறகொடிந்த பறவையைப் போல் இடறி விழுந்தான். தான் வெளியேற்றிய மூச்சுக் காற்றைப் போல் வலுவற்றவன் ஆனான். அவளுடைய வீட்டிற்கு அழுது முனகிக் கொண்டே புறப்பட ஆரம்பித்தான். அனைத்து முனகலுடன் ஒரு முடியைப் போல் உடல் மெலிய ஆரம்பித்தான். இருந்தும் மிகைப்படியான எண்ணத்தில் அவளிடம் பேசினான்: "நீ தேர்ந்தெடுத்தவன் குறித்து நீ மகிழ்ச்சியாக உள்ளாய். ஆனால் நாம் இருவரும் ஒருவர் பக்கவாட்டில் ஒருவர் அமர்ந்திருந்தது என்னவானது, நாம் கட்டிய ஆயிரம் காதல் முடிச்சுகள் என்ன ஆனது? நாம் ஆயத்தம் செய்த நம்பிக்கைக்குரிய திட்டங்கள் எங்கே, நாம் பகிர்ந்து கொண்ட தற்பெருமையற்ற உறுதி மொழிகள் எங்கே, தற்போது கருத்தற்ற வகையில் நீ சங்கற்பங்களை மீறுகிறாய், உன் பாவமற்ற முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்கிறாய்? தற்போது உன் இதயம் விசுவாசமற்றுப் போய்விட்டது, மீறப்பட்ட சங்கற்பத்தில் நட்பு என்பது எங்கே உள்ளது? நான் உன்னிடம் என் ஆன்மாவைக் கொடுத்தேன், பொய்யாகப் பாராட்டிய மற்றும் ஏமாற்றிய வெற்று வார்த்தைகளை மட்டுமே நான் பதிலுக்குப் பெற்றேன். நான் கொடுத்த ஆன்மா உன்னுடைய காதலைப் பெற உகந்தது, ஆனால் நீ எனக்குக் கடன்பட்ட காதலை ஒரு புதியவனிடம் அளித்தாய். உன் புதிய காதலுடன் நீ மகிழ்ச்சியாக உள்ளாய், என்னால் அதைக் காண முடிகிறது; உன் பழைய காதலை நீ மறந்து விட்டாய், சரி அவ்வாறே இருக்கட்டும். ஆனால் நான் இருந்தும் கேட்கிறேன், அவன் உன்னை அன்பால் அரவணைக்கும் போது என் பெயரையும், முகத்தையும் மறக்காமல் பார்த்துக் கொள்; உன் இனிமையான தோட்டத்தில் என் அனைத்து இளமையும் செலவிடப்பட்டது, நான் அடைந்த வேதனைகள் - இடர்ப்பட்ட புறா நான் தான், இருந்த போதிலும் கனிந்த கனியானது ஒரு காக்கையால் திருடப்பட்டது; நான் உனக்காக விட்ட வெப்பமான உணர்ச்சி முனைப்புள்ள பெருமூச்சுகள், உன் தோட்டத்திற்கு உகந்தவன் என்னைப் போல் ஒருவனுமில்லை. நீ தேர்ந்தெடுத்த முதல் காதல் நான் தான், ஆனால் பிறகு, மனிதர்களிலேயே மோசமானவர்களை நடத்துவதைப் போல் என்னை நடத்தும் வழியை நீ தேர்ந்தெடுத்தாய்; என் மனதை உனக்குக் கொடுத்தேன், அந்நாளில் நீ இவ்வாறு செயல்படுவாய் என நான் எண்ணவில்லை. உன் சங்கற்பங்கள் மூலம் நீ என்னை ஏமாற்றினாய், ஆனால் நான் தொடர்ந்து உனக்கு விசுவாசமுடையவனாய், நான் எடுத்த சங்கற்பங்களுக்கு உண்மையானவனாய் இருந்தேன். உன் சங்கற்பங்களை, நீ கூறிய இனிமையான வார்த்தைகளைப் பார், பிறகு நீ என்ன செய்துள்ளாய் என்பதையும், யாரை நீ மணந்துள்ளாய் என்பதையும் பார்; உன் இதயமானது மற்றொருவனின் சுடரொளியால் வெது வெதுப்பாக்கப்பட்டுள்ளது. இதற்காக நீ வெட்கமடையவில்லை என என் கண் முன்னே நீ காட்டிவிட்டாய். நம்மால் நன்மையிலிருந்து தீமையை வேறுபடுத்த இயலாவிட்டால் நம்மைப் பின்தொடரும் மற்றோரால் எவ்வாறு இயலும், மனம் வரும். நம்மிடம் இருக்கும் எது நல்லது எது தீயது என்பதை முடிவெடுக்கும் மத்தியஸ்தர்களாக அவர்கள் இருப்பார்கள்; நான் எவ்வாறு துயரமுற்றேன் என அவர்கள் காண்பார்கள், நான் உனக்கு என்ன செய்தேன், நீ எனக்கு என்ன செய்தாய் என்பதைக் காண்பார்கள். நான் கண்மூடித்தனமானவனாக இருந்துள்ளேன் என எண்ணுகிறேன், அவர்களும் அவ்வாறே எண்ணுவார்கள். தன் சங்கற்பங்களை மீறியவள் நீ தான் என எண்ணுவார்கள். கற்புடன் வளரும் ரோஜாவுக்கு முற்கள் இருப்பதில்லை, அது திறக்கிறது, தன் உறுதியை மீறுகிறது, முற்கள் உருவாகின்றன; குடித்து விட்டுப் பிரச்சினை செய்வோர் கெட்ட பெயரைக் கொடுக்கும் வரை மதுவானது புகழ்ச்சிக்கோ அல்லது இகழ்ச்சிக்கோ உரியதல்ல; தேயும் நிலவு மறையும் போது தான் அந்த இரவு ஒளியற்ற, அச்சத்தை ஏற்படுத்தும் இருளாகிறது. என் அனைத்து வாழ்வும் நீ எடுத்த உறுதி மொழியுடன் பிணைக்கப்பட்டுள்ளது, உனக்கு அது மீறக் கூடிய ஓர் உறுதி மொழியாகும். என்னை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக நடந்து கொள்ளாதே, ஆனால் நான் இறக்கும் வரை உன்னை மறக்க மாட்டேன். என்னை நீ உள்ளாக்கிய அனைத்து துயரங்களையும் எடுத்துக் கொள்ளும் போது, நான் உன்னை வெறுத்திருந்தால் இதை விட மேலும் துயரங்களுக்கு ஆளாகி இருப்பேன் என்பது புலப்படுகிறது. என் இதயத்தை நீ துயரத்தால் நிரப்பினாய், என் இகழ்ச்சியால் வெட்கமடைய என் இதயத்தில் இடம் இல்லை. நீ மாறிவிட்டாய், எனக்கு உன்னைத் தெரியவில்லை; இன்று எனக்கு விசுவாசமற்றதாய் இருப்பது உன் இதயம் என என்னால் கூற இயலாது; பிறர் உதவியின்றி இருக்க இயலாத நிலையில் நான் உள்ளேன், முன்னர் போலவே நீ இருக்கிறாயா என வியக்கிறேன், இப்போது உனக்கு என்ன பெயர் கொடுப்பது என எனக்குத் தெரியவில்லை. உன் குரூரமானது வாழ்வதற்கான எண்ணத்தை என்னிடமிருந்து எடுத்துவிட்டது. ஆனால், உன்னை மன்னிக்க வேண்டும் என உன் அழகு எனக்குக் கூறுகிறது; அத்தைகைய அழகுக்குத் தைரியம் இருந்தால் அது விரும்பும் எவரின் உயிரையும் எடுக்க அதற்கு உண்மையிலேயே உரிமையுள்ளது; நீ அதிகாலையின் ஒளி, நான் அணையப் போகும் விளக்கு; அதிகாலை வரும் போது விளக்குகளுக்கான தேவை என்பது இருப்பதில்லை. நிலவுகள் இனிமையானவை என்றால் நீ ஒரு நிலவு, மன்னர்கள் இரட்டை முகம் உடையவர்கள் என்றால் நீ மன்னர்களிலேயே மிகச் சிறந்தவள். உன் உன்னதமான ஒளிரும் வெளிச்சத்துக்கு முன்னாள் தொலை தூரத்திலேயே நெருப்பின் வாயானது நீராக மாறி விடும். தோட்டமானது மலர்களால் நிரம்பியுள்ளது, அது உன்னைச் சந்தித்தால் உன் அழகான கவரும் தன்மையால் அதற்கு உன்னைத் தின்ன ஆசை வரும். சிவப்பு நிற பட்டு ஆடையானது உன் முகத்துக்கு அருகில் வைத்து ஒப்பிடப்படும் போது ஒரு வைக்கோலைப் போல் உள்ளதால் அது வெட்கமடைகிறது. விருந்து நாள் மீண்டும் வந்ததைப் போல் காட்டுவதால் உன் புருவ வளவானது ஒரு புது நிலவைப் போல் உள்ளது. கற்றாழைகளும், சந்தன மரங்களும் உன் ஒளிரும் அழகுக்கு முன்னாள் மதிப்பற்றவையாகிப் போகின்றன. உன் கூந்தலால் மூடப்பட்ட உன் வெளிர் முகமானது சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் செல்வங்கள் அங்கு மறைந்துள்ளன என எனக்குக் காட்டுகின்றன. இத்தகைய முகத்தின் அழகை விட்டுப் பிரிய, துயரம் கொள்ள ஒருவனுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும். ஆனால், என் ஆன்மாவை உனக்குத் தியாகம் செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை; நான் இதைச் சகித்துக் கொள்கிறேன், எந்தப் பக்கம் என் கடிவாளமானது விதியால் இழுக்கப்படுகிறது என்பதைக் காண நான் காத்திருக்கிறேன்."

லைலாவின் முன்னிலையில் பாடும் மஜ்னுன்

[தொகு]

"நான் எங்கே இருக்கிறேன்? நீ எங்கே உள்ளாய்? நான் எங்கு அலைந்து திரிந்தாலும் நான் உன்னுடையவன் என்று இருக்குமாறு நீ எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளாய்? நான் சுருதியற்ற ஒரு பாடல், நீ எனக்கு எதிரி என்றால் கடவுள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். நான் என் வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன், பாதி பயணம் மேற்கொண்ட முழு நிலவைப் போல் நான் ஆள்கிறேன், சுற்றித் திரிகிறேன்; பிரச்சினைகள் என்னுடையதாகட்டும், நல்ல ஆடைகளை எனக்குக் கொடு நான் அவற்றைக் கிழித்தெறிவேன், கோணிப்பைத் துணி ஆடைகளை எனக்குக் கொடு நான் அவற்றை அணிந்து கொள்வேன், விதி என் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை, துயரங்களின் இனிய நட்பில் நான் மகிழ்வதைப் போலவே துயரங்கள் என்னிடம் மகிழ்ச்சி அடைகின்றன. தாகத்தால் நான் இறக்கப் போகிறேனோ என எனக்குத் தோன்றுகிறது, இருந்த போதிலும் என்னைச் சுற்றிலும் நீர் மட்டம் வேகமாக உயருகிறது, என்னை மூழ்கடிக்கிறது. இரவை விரும்பும் ஒரு வௌவாலைப் போன்றவன் நான், ஆனால் தற்போது சூரியனே என்னுடைய விருப்பத்திற்குரிய நண்பனாக உள்ளது. நான் வழி தவறிவிட்டேன், ஆனால் ஒரு வழிகாட்டி என என்னை நானே கூறிக் கொள்கிறேன். நான் வீடில்லாதவன், ஆனால் நாட்டுப் புறத்தை நான் சொந்தமாக வைத்திருப்பதாக பெருமை பேசிக் கொள்கிறேன்; நான் ஓர் ஏமாற்றுப் பேர் வழி, ஆனால் மன்னன் சாலமனைப் போல் சிறந்தவன் என்று கூறிக் கொள்கிறேன். என்னிடம் குதிரை கிடையாது, ஆனால் போர்க் குதிரை ரக்சில் நான் பயணம் செய்கிறேன் என்று கூறிக் கொள்கிறேன். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் கிடைக்க வாய்ப்பில்லாத நீ கிடைக்க வேண்டுமென பெரிதும் விரும்புகிறேன், தோழியே இந்த விருப்பம் முடிவுக்கு வர வேண்டும் என எனக்கு விருப்பம் கிடையாது; வெளியில் செயலற்றவனாகத் தோன்றினாலும், என் மனதில் முழுவதும் பொறுமையற்றவனாக உள்ளேன், புறப்பட எனக்கு மனம் வரவில்லை."

"நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்தவற்றை விஞ்சியவளாக இருக்கிறாய், உன்னை விரும்பும் வெறும் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போன்றவன் நான், ஆனால் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் ஒருத்தியைப் பிடித்தால் அவன் அவளைக் கைதியாக்குகிறான் அவளால் அவனிடமிருந்து விடுபட முடியாது; ஒரு செயலை எண்ணாமல் துணிகிறவன் வாழ்ந்தாலும், இறந்தாலும் பயப்படுவதில்லை, நல்லவை, கெட்டவை என இரண்டையுமே அவன் கொல்கிறான்; தன் இரையைக் கண்டு பயப்படும் ஓநாய் தன் நாணம் மற்றும் தலை குனிவுக்கு தன்னை மட்டுமே குறை சொல்ல முடியும். நீ இங்கு வருவதற்கு முன்னர், நீ என்னை இங்கு தனியாக விட்டு விட்டாயா. . .? நீ என்றுமே விதைக்காததை எவ்வாறு அறுவடை செய்வாய்? 'நல்லிரவு' என்று கூறாதே, நீ என்னுடன் தொடர்ந்து இருக்கப் போவதில்லை எனும் போது எவ்வாறு அது 'நல்லிரவாக' இருக்க முடியும்? நான் இருக்கும் திசையில் நீ அடியெடுத்து வைக்க இயலாத வகையில் நம் ஆன்மாக்கள் வேறு வேறு உலகத்திலா உள்ளன? இது உண்மையா? அப்படியெனில் வலியைத் தாங்கிக் கொள்வதற்கு எனக்கு மற்றொரு ஆன்மாவைக் கொடு, அல்லது நீ மீண்டும் வரும் போது என்னை நன்முறையில் நடத்து. என்னை நீ தாராள குணத்துடன் நடத்தவில்லை என்றால் என் ஆன்மா பிரிகிறது, இறப்பு நெருங்கி விட்டது என நான் அச்சமடைகிறேன். நீ பரிவுடன் பேசும் எந்த ஆன்மாவும் உன்னால் இறப்பற்ற வாழ்வைப் பெறும். ஏராளமான ஆண்கள் உன் அடிமைகளாக மாற விருப்பம் கொண்டுள்ளனர். எனினும் என்னைப் போல அவர்கள் ஒருவர் கூட நடந்து கொள்வதில்லை. உன் நினைவு நீடித்திருக்கும் வரை என் மனம் அடக்கம், மகிழ்ச்சி, உவகை, மனம் ஒவ்வாத ஆனால் மாற்ற முடியாத ஒன்றை ஏற்றுக் கொள்கிற பண்புகளைக் கொண்டுள்ளது. உன்னை நான் மறக்கும் இரவு என் மனம் உனக்கு எதிரியாகும் இரவாகட்டும்."

"தற்போதிலிருந்து நீயும் நானும், நானும் நீயும், நாம் இருவராக இருந்தாலும் ஓர் இதயம் நமக்காகத் துடிக்கட்டும். அந்த இதயம் உன்னுடையதாக இருப்பதே சரியாக இருக்கும். ஏனெனில், வருத்தத்திற்குரிய என் இதயம் உடைந்து விட்டது, அது இறக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலையைப் போல நாம் ஓர் ஒற்றை சூரியனை, ஒற்றை இதயத்தைக் கொண்டிருப்போம். அச்சூரியன் தோன்றும் போது நூறு சூரியன்கள் மறைகின்றன. நாம் இருவரும் ஒருவராக ஒற்றை நாணயத்தைப் போல் இருப்போம். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் இருவரின் உருவமும் இணைந்தே இருக்கட்டும். நாம் ஒற்றை வாதுமையாக இருக்க வேண்டும். ஆனால், அதன் உட்பகுதியில் இரு பகுதிகளாக இருக்க வேண்டும். எனவே நாம் ஒருவராக இருப்போம். நம்மை இரண்டாக மாற்றிய அனைத்தும் தூக்கியெறியப்படும் காலணியைப் போல் ஆகட்டும். உன்னுடன் நான் இருக்கும் போது ஒளியாக மாறுகிறேன். ஒவ்வொன்றிலிருந்தும் விலகிச் செல்கிறேன். ஆனால் நீ யார். யாருடைய உடல் இது, உரிமையுடன் இதனால் எதைக் கோர முடியும்? உன் பெயரில் மீண்டும் அச்சடிக்கப்பட்ட நாணயத்தைப் போல் இது உள்ளது. அத்தகைய விழாவில் எந்தவொரு கவலையும் இருக்கக் கூடாது. உன்னுடைய துகிற்கொடி காற்றில் அசைந்தாடும் போது கவலை இருக்கக் கூடாது. நம் ஒற்றை ஆன்மா உன்னுடையது. நீ சுதந்திரத்தைக் கொண்டுள்ளாய். ஓர் ஒற்றை சைப்ரசு மரத்தை விட மிகவும் உன்னதமானவள் நீ. உன் ஆடைகளை இணைக்கும் அரைப்பட்டிகைக்குள் திணிக்கப்பட்டுள்ள ரோஜாவைப் போல் நான் முழுவதும் உன்னுடையவன். உன் வாசத்தைக் கொண்டு வரும் தென்றல் என் ஆன்மாவை புத்துயிர் பெறச் செய்கிறது. என் இதயத்தை அழுத்தித் தேய்த்துத் துருவை நீக்கித் தூய்மைப்படுத்தி முழுமையாக்குகிறது. காய்ச்சல், நோய் வாய்ப்பட்ட உடல் உணரும் வலியை முமியா மருந்தைப் போல் குணப்படுத்துகிறது. நீ மனதளவில் ஒரு நாயாக இருந்தால் நாய்கள் தெருவில் மிதித்து நடக்கும் தூசியாக நான் இருக்க வேண்டும். நீ நாய்க் கூட்டத்தை வைத்திருக்கிறாய் என்றால் உனக்காக அவற்றில் ஒரு நாயாக ஓர் அடக்கமான இடத்தை நான் ஏற்றுக் கொள்வேன். என் பரிவாரத்தில் உள்ள அனைத்து விலங்குகளும் தங்களது சேவையை உனக்காக அர்ப்பணிக்கும். நான் ஏழ்மையானவன், நீ செல்வமுடையவள், இது என் பணியாகும். நான் ஒன்றுமில்லாதவன், நீ முழுமையான அழகுடையவள். உன் அழகான முகப் புள்ளிகள் வெள்ளி நாணயத்தைப் போன்றவை பிறருக்கு சங்கடம் ஏற்படுத்தாதவை. உன் தங்க நாணயங்கள் உன் காலில் உள்ள காப்பைப் போன்றவை. உன் அனைத்து அழகு மற்றும் மெல்லமைதியுடனும் அடக்கமாகவும் இயங்கும் திறனைக் கண்ட பிறகு உன் காலின் தங்கக் காப்பு இருக்கும் இடத்தைப் பெற நான் விருப்பம் கொள்கிறேன். மேகங்களின் மழைக் கண்ணீர்த் துளிகள் இளவேனிற்காலம் வந்து விட்டது என்பதை அறிவிக்கின்றன. உனக்காக மஜ்னுன் வழிந்தோடும் பல கண்ணீர்த் துளிகளைச் சிந்துகிறான். மனிதர்கள் ஓர் இந்தியக் காவலாளியை கவனித்துக் காப்பதற்காக நிறுத்துகின்றனர். உன் வாயிலில் நிற்கும் இந்தியக் காவலாளி மஜ்னுன் தான். உன் முகம் மஜ்னுனுக்கு அதிர்ஷ்டங்களைக் கூறுவதைப் போல் சொர்க்கங்கள் நிலவிலிருந்து தம் அழகைப் பெறுகின்றன. உதிரும் ரோஜாக்களைப் பெறத் துடிக்கும் தொலை தூரத்தில் உள்ள இராப்பாடிப் பறவையைப் போன்றவன் மஜ்னுன். மனிதர்கள் மாணிக்கக் கல்லை பூமியிலுள்ள சுரங்கங்களில் தேடுகின்றனர். ஆனால், உன்னைத் தேடிய போது மஜ்னுன் தன் ஆன்மாவைக் கண்டு கொண்டான்!"

லைலாவின் சமாதியில் மஜ்னுன் இறக்கிறான்

[தொகு]

அவன் இவ்வாறு அழுதான். ஆனால், தற்போது அதை விட மேலும் அழுதான். முன்னரை விட மிகவும் பலவீனமாகவும், உடல் நலம் குன்றியும் இருந்தான். இரவுக்குப் பகல் வழி விட்ட போது அவனது ஆன்மாவானது பிரியும் தருவாயில் இருந்தது. அது சீக்கிரமே பிரியப் போகிறது. கருப்பான நீரைக் கொண்ட கடலில் புயலால் தூக்கி எறியப்பட்ட, மிதக்க இயலாத ஒரு மூழ்கும் படகைப் போல, லைலாவின் மணல் படிந்திருந்த சமாதி எங்கு அமைந்திருந்ததோ அதை அழுது புலம்பியவாறு அடைந்தான். மணலில் உடலை நெளித்து, நடுங்க ஆரம்பித்தான். ஒரு காயமடைந்த எறும்பு அல்லது பாம்பைப் போல விருப்பம் நிறைவேறா வருத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு வரிகளைப் பாடினான், ஒன்று அல்லது இரண்டு துளி கண்ணீரைச் சிந்தினான், பிறகு தனது தலையை உயர்த்தினான். வானத்தை நோக்கி தனது விரல்களை நீட்டியவாறு தன்னுடைய சோகமான கண்களை மூடிக் கொண்டான், அழுதான்: "இறைவனே, இந்தப் பூமியைப் படைத்தவனே, மதிப்புக்குரிய அனைத்துக்கும் பாதுகாப்பு அளிப்பவனே, என்னுடைய அனைத்து துன்பங்களில் இருந்தும் என்னை விடுவி, என்னுடைய உண்மையான தோழி லைலா இருக்கும் இடத்திற்கு என்னை அனுப்பி வை, துயரப்படும் எனது ஆன்மாவை விடுவி, வேகமாக அவளிடம் என்னைக் கொண்டு சென்று முடிவிலாக் காலத்திற்கு அவளுடனே என்னை விட்டு விடு." பிறகு மணலில் கை கால்களைப் பரப்பிக் கொண்டு படுத்திருந்தான், மணலைப் பிடித்து இறுகப் பற்றிக் கொண்டான், தனது கைகளில் எடுத்து தனது மார்புக்கு எதிராக மணலைப் பிடித்தான், தன்னுடைய தோலின் மீது மணலை உணர்ந்த போது அழுதான், "தோழியே . . ." என்றவாறு ஆன்மாவை விடுவித்துக் கொண்டான், இறந்தான். அவனும் தற்போது இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து விட்டான், இறப்பு எனும் இத்தகைய பாதையை மிதித்து நடக்கத் தேவையில்லாதோர் என்று யாரேனும் உள்ளனரா?

உணர்விழந்த நிலையின் நெடுஞ்சாலை முடியும் அந்தத் தருணத்தில் ஏற்படும் பேரச்சத்தை ஒருவரும் தவிர்ப்பதில்லை. நாள் நாளாக எப்போதும் காலம் நகரும் வழியிலிருந்து தப்பிப்போர் என்று எவரும் உள்ளனரா? தன் மாமிசத்தை வாட்டும் ஒரு நெருப்பைப் போன்றது உலகம். தன் நிலையிலிருந்து இறங்கி உண்பதற்கு முன்னால் காயங்கள் மீது அது உப்பைத் தடவுகிறது. சோகத்தின் விதிகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்று எந்தவொரு வாழ்வும் இல்லை. குரூரத்தின் வளை நகங்களால் சுரண்டப்படாமல் எந்தவொரு முகமும் இருப்பதில்லை. ஓர் ஆலையில் வருந்தி வேலை செய்யும் ஒரு நடக்க இயலா கழுதையைப் போன்றவன் நீ. அக்கழுதை ஆலைக் கல்லை சுற்றுகிறது. அது எப்போதும் ஓய்வெடுப்பதில்லை. எனவே அது ஆலையிலிருந்து வெளியேறுகிறது! ஆனால் இந்த உலகத்தையே விட்டுச் செல்லும் போது இது நடைபெறுகிறது. வழக்கத்தை விட அதிகமான நேரத்திற்கு இந்த வெள்ளம் புகுந்த வீட்டில் ஏன் தங்கியிருக்க வேண்டும்? காத்திருக்காதே, வெள்ளம் வந்து விட்டது, தாமதமாகும் முன்னரே வெளியேறு, வெற்றிடத்தின் வழியாக உன்னைத் தூக்கிச் செல்லும் பாலத்தை சொர்க்கமானது அழிப்பதற்கு முன்னரே வெளியேறு. உலகின் கொப்பூழ் பகுதிக்குள் ஒன்றுமில்லா நிலையின் காற்றானது வீசுகிறது. அதில் நாம் சுழற்றி எறியப்படுகிறோம். நீ எப்படிப்பட்டவன் என்று பெருமை பேசாதே, உன் அனைத்து வாழ்வும் அந்த பெரும் சத்தத்தின் காற்றுச் சச்சரவைத் தவிர வேறொன்றுமில்லை. எனவே இந்த உலகை விட்டு நீங்கு, உடனடியாகச் செல், தாமதப்படுத்தாதே, கவிகை வண்டியானது இங்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏழு தலை டிராகனானது உன்னைச் சுற்றி வளைத்து முறுக்குகிறது. அதன் அனைத்து நொறுக்கக் கூடிய சுருள்களால் உன்னைச் சுற்றி வளைக்கும் வரை முறுக்குகிறது. உனது ஏதாவது ஒரு பாகம் நீங்குவதற்குத் தயங்க வேண்டும் என்றால் தற்போது நீ தப்பித்து விடலாம் என்று எண்ணாதே, தற்போது மிகவும் தாமதமாகி விட்டது! இந்த பண்டைய, சுருக்கம் மற்றும் கூன் விழுந்த பெண் தன்னுடைய டிராகன் இயல்பைக் காட்டுகிறாள், அவள் அனைத்து வகையிலும் இரக்கமற்ற இந்த டிராகன் படைப்பு ஆவாள், இந்தப் போலியான உலகை விட்டு நீங்கி விடு, இந்த துர் நாற்ற, கெட்ட பெயர் எடுத்த திருடன் போன்ற, திருட்டு விரல்களுடைய மற்றும் நம்புவதற்கு மதிப்பற்ற உலகிலிருந்து நீங்கி விடு; தவறான வழியில் நடக்காதே, நீ செய்யும் தீய செயல்களுக்கு பாதிப்பு அடைபவனாக நீ தான் இருப்பாய், உண்மை வழிக்கு உன் மனதை மாற்றுவதென உறுதி கொள், தோன்றுவதற்கு வாய்ப்புள்ள எந்தவொரு அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களுக்கு என்றுமே அஞ்சாதே. மமதை எனும் குதிரையிலிருந்து இறங்கு, உன்னுடைய இயலாமை மற்றும் வலுவற்ற நிலையை அடக்கத்துடன் ஒப்புக் கொள். அடக்கத்துடன் நடந்து கொள், இறப்பு எனும் சிங்கம் உனக்கு ஆறுதல் அளிக்குமே தவிர உனது எதிரியாக இருக்காது.

மஜ்னுன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து விட்டான். பிறரின் இகழ்ச்சி மற்றும் கேலியிலிருந்து தற்போது விடுதலை பெற்று விட்டான். தன் தூங்கும் மணப் பெண்ணின் அடக்கம் செய்யப்பட்ட உடலுக்குப் பக்கவாட்டில் அவன் தூங்குவதால் அவனது கண்கள் தற்போது மூடியிருந்தன. அவன் அனுபவித்த உலக வாழ்வின் துன்பங்களிலிருந்து குணப்படுத்தும் மதிப்பு மிக்க கைமாறாக இந்தத் தூக்கம் அமைந்தது. இவ்வாறாக அவனது உடல் அங்கு குறைந்தது ஒரு மாதத்திற்காகவாவது கிடந்தது என நான் உறுதியாகக் கூறுவேன். ஓர் ஆண்டு அல்லது அதற்கும் மேலாக அவன் உடல் அங்கு கிடந்தது என சிலர் கூறுகின்றனர். அவனைச் சுற்றிலும் அவனது விலங்குகள் கூடின. அவனைச் சுற்றிப் பாதுகாப்பதற்காக மாசிடோனிய காலாட்படையின் பேலன்க்சு போன்ற அமைப்பை ஏற்படுத்தின. படுத்தவாறு இருக்கும் ஓர் இறந்த மன்னனின் பக்கவாட்டில் நின்று காவல் காக்கும் காவலாளிகளைப் போல் நின்றன. ஓய்வெடுக்கும் இடமாக, ஒரு கூடாக அவனைச் சுற்றிய இடத்தைப் பாவித்து நின்றன. வழிப் போக்கர்கள் மிகவும் அருகில் வந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இக்காவலாளிகள் வழிப் போக்கர்களைப் பின் வாங்க வைத்தன. குளவிகள் கொட்டி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோரைப் போல் வழிப் போக்கர்கள் உடலைச் சுற்றி வளைத்துச் சென்றனர். தாங்கள் படுத்திருப்பதாகக் காணும் முன் பின் தெரியாத ஒருவன் விசித்திரமான காரணத்திற்காக எதையும் பகிரவில்லை என்று எண்ணினர். அவன் அநேகமாக ஒரு மன்னனாக இருக்கலாம், தன் தனிமையில் யாரும் தலையிடக் கூடாது என்பதைக் கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட காவலாளிகளுடன் இருந்தான். வழிப் போக்கர்கள் யாருக்கும் இந்த முன் பின் தெரியாத "மன்னன்" இறந்து விட்டான் என்பது தெரியவில்லை. காலத்தின் காற்றானது இவனது மகுடத்தை இவனது தலையிலிருந்து தள்ளி விட்டிருந்தது, அவனது உடலில் இரத்தம் தற்போது இல்லை, அவனது அனைத்து எலும்புகளும் மணலிலும், கற்களின் மத்தியிலும் சிதறி விடப்பட்ட முத்துக்களைப் போல கிடந்தன. அவன் ஒரு கட்டத்தில் எவ்வாறு இருந்தான் மற்றும் அவனது சோக வாழ்வில் எஞ்சியவையாக ஒழுங்கு முறையற்ற வகையில் கிடந்த எலும்புகளே தற்போது காணக் கூடியவையாக இருந்தன. எந்தவொரு ஓநாயும் இந்த எலும்புகளை கடிக்கவில்லை. அவனது விலங்குகள் கவனித்துக் கொண்டிருந்த போது எந்தவொரு மனிதனாலும் மஜ்னுனின் உடலைத் தொட இயலவில்லை.

பிறகு ஓர் ஆண்டு கடந்திருந்தது. சமாதியின் கவனித்துக் கொண்டிருந்த காவலாளிகள் ஒருவர் பின் ஒருவராக விலகிச் சென்றனர். மெதுவாகத் தேய்ந்து போய் மறைந்து போன ஒரு பூட்டைப் போல காலம் கடந்தது. படிப்படியாக துடுக்கான ஆன்மாக்கள் அழையாது நுழைந்தன. காவலாளிகள் விட்டு விலகிச் சென்ற சமாதியைக் கண்டறிந்தன. அங்கு எலும்புகள் கிடப்பதை அவர்கள் கண்டனர். அந்த எலும்புகளில் சதை இல்லை. எலும்புக் கூடு மட்டுமே இருந்தது. அவனது நம்பிக்கைக்குரிய குடும்பமானது வந்தது. தாங்கள் தேடிக் கொண்டிருந்த தங்கள் மகன் தான் அவன் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். குடும்பத்தார், அவனது நலம் விரும்பிகள் மற்றும் அவனது சோகமான இறப்பால் இழப்பைச் சந்தித்திருந்த அனைவரும் துக்கத்தையும், துயரத்தையும் அடைந்தனர். வலியுடைய மனங்களுடன் அவர்கள் தங்களது உடைகளைக் கிழித்தனர். பெருமூச்சு விட்டனர். அவன் இறக்கும் வரை காதல் அவனுக்குத் துயரம் அளித்தது. அவர்களது கண்ணீர்த் துளிகள் முத்துக்கள் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களைப் போல மழையாகப் பொழிந்தன. சூரியனால் வெண்மையாக்கப்பட்ட அவனது எலும்புகளின் வெள்ளை ஓடு மீது கண்ணீர் விட்டனர். அவர்களது கண்ணீரின் மூலம் பூமிக்குள் எலும்புகள் புதைந்தன. அங்கு எஞ்சியிருந்த அவனது உலக வாழ்வின் எச்சங்களை அவர்கள் சிதறச் செய்தனர்; அரபு நிலங்கள் வழியாக இவனது கதையும், இவனது பெயரும் காதலின் சின்னமாக உருவாகின. இவனது புகழை உறுதி செய்தன. ஆண்கள் இவனுக்காக சமாதி அமைத்தனர். அவன் நீண்ட நாள் ஏக்கம் கொண்ட மணப் பெண்ணான அவனது லைலாவை அவனுக்குப் பக்கவாட்டில் அடக்கம் செய்தனர். தனது மன்னன் விரும்பிய காதலை அன்பான கோப்பையில் கொண்டு வந்தவளாக அவள் திகழ்ந்தாள். அவர்கள் மீது இனி மேல் யாரும் குற்றம் சுமத்தவோ அல்லது இகழப் போவதோ இல்லை. அவர்கள் அமைதியாக ஒருவர் பக்கவாட்டில் ஒருவராக இறைவன் நீதி வழங்கும் நாள் வரை உறங்குகின்றனர். அவர்கள் இந்த உலகில் ஒரு சபதத்தை எடுத்திருந்தனர். சொர்க்கத்தில் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு தொட்டில் அவர்களுக்குத் தற்போது கொடுக்கப்பட்டது.

இப்பூமியில் அவர்களின் உறங்குமிடம் மற்றும் சமாதியைச் சுற்றி ஓர் அழகான தோட்டம் உருவாக்கப்பட்டது. அதன் அழகு மற்றும் அதன் புகழில் அதற்கு இணை எதுவுமில்லை. இந்தத் தோட்டத்திற்குத் தான் உலகின் சோகமான புனிதப் பயணிகள் வருகின்றனர். காதலுக்கான சபதம் எடுத்தவர்களின் மகிழ்ச்சியானது இங்கு அவர்களுக்கு மீண்டும் கொடுக்கப்பட்டது. மனஅமைதியும் கிடைத்தது. தேவை காரணமாக கட்டாயப்படுத்தி அவர்கள் வெளியேற்றப்பட்டாலே தவிர இந்தத் தோட்டத்திலிருந்து மனமுவந்து வெளியேற யாருக்கும் மனமில்லை.

இறைவனே அந்த இருவரும் இந்த உலகத்திலிருந்து இன்னும் தூயவர்களாகவும், கற்புடனும் வெளியேறினர். அவர்கள் இப்பூவுலக தனிப் பண்புகளைப் பெற்றிருந்த போதிலும் ஒருவர் அன்பில் மற்றொருவர் பாதுகாப்பாக, அமைதியாக வாழ்வதை உறுதி செய். மேலுள்ள உலகத்தில் கருணையுடன் அவர்களை வரவேற்பாயாக.

சொர்க்கத்தில் லைலாவையும் மஜ்னுனையும் காண்பதாகக் கனவு காணும் சயத்

[தொகு]

அந்த இரு ஒளி ஓடைகளுக்காக, அவன் காதலர்களின் சமாதியில் துக்கம் அனுஷ்டிக்க வழக்கத்தை விட அதிகமான நேரம் அங்கு சுற்றிக் கொண்டிருந்தான். தனக்குத் தானே மஜ்னுனின் இனிமையான வரிகளை முணு முணுத்தான். ஒவ்வொரு வரியும் சிவப்பு நிற மாணிக்கக் கல்லைப் போல ஒளிர்ந்தன. இந்தக் காதலனால் எழுதப்பட்ட அனைத்து வரிகளையும் கண்டுபிடிப்பதற்காக ஆர்வத்துடன் முயற்சி செய்தான். இவ்வாறு செய்கையில் அவர்களது புகழுக்கும், அவர்களுக்கு உகந்த கரவொலிக்கும் காரணமானான். இவன் மூலமாகவே இக்காதலர்களின் கதையானது அனைவராலும் விரும்பப்படுவதாகவும், பரவியதாகவும், பெரும் புகழையும் எட்டியது.

அவர்கள் இருவரையும் குறித்து ஒரு நாள் எண்ணிய போது, இருவரும் தற்போது எவ்வாறு உள்ளனர் என எண்ணினான். இக்கருப்பு பூமி அவர்களின் வீடா? சொர்க்கத்தில் கடவுளின் ஒளிரும் அரியணைக்குப் பக்கவாட்டில் அவர்களுக்கு என்று ஓர் இடம் கொடுக்கப்பட்டுள்ளதா? வைகறைக்கு முன்னர் தென்றல் அசைவுறும் நேரத்தில் ஓர் இரவில் கஸ்தூரி காலை ஒளிக்கு இரவு வழி விடும் நேரத்தில் சயத் ஒரு தேவதூதன் வருவதாகக் கனவு கண்டான். அத்தேவதூதன் ஒளிரும் காற்றில் மின்னும் ஒரு தோட்டம் இருக்கும் இடத்தைக் காட்டினான். உயர்ந்த மரங்களின் ஒல்லியான வடிவமானது அதை ஒரு மகிழ்ச்சியான மற்றும் மந்திர இடமாக ஆக்கிய காட்சி அங்கு இருந்தது. ரோஜாக்களுக்குள் புதுத் தோட்டங்களை கண நேரக் காட்சிகளாகக் காண முடிந்தது. ஒவ்வொரு பூவிதழும் சிறு பூங்கொத்துகளைக் கொடுக்க வல்லதாக இருந்தது. மதிப்பைக் கண்டறிய வல்லோருக்கு அங்கிருந்த புற்கள் விண்ணுலக நீலத்தில், சொர்க்கத்தின் மேகமற்ற வானத்தைப் போல ஒளிர்ந்தன. தோட்டத்தின் பச்சை நிறமானது மரகதத்தின் பச்சை நிறத்தை விட அதிகமாக ஒளிர்ந்தது. இதை விட அழகான நிழலை எங்குமே காண இயலாது. ஏற்கப்படா காதலால் வருந்திய மற்றும் துயரக் கதைகளை இராப்பாடிப் பறவைகள் அவர்களுக்காகப் பாடின. இசைக் கலைஞர்கள் இனிமையான மென்கயிறுகளை மீட்டினர். அங்கு புறாக்கள் இருந்தன. சரதுச பிரார்த்தனையைப் போல் கூவின. வளைவு போன்று அமைந்திருந்த நிழலுக்கு அடியில் மென்மையாக ஒலி எழுப்பிய ஓர் ஓடைக்கு அருகில் ஓர் அரியணை அமைக்கப்பட்டிருந்தது. சொர்க்கத்தின் மண்டபங்களை அலங்கரிக்கப் போதுமான அளவுக்கு அழகாக இருந்த துணிகள் அரியணையை அலங்கரித்தன. இத்தகைய அழகாகப் போர்த்திய துணிகள் மீது மிகவும் அழாகாக மாறியிருந்த மற்றும் மன நிறைவு அடைந்த காதலர்கள் அமர்ந்திருந்தனர். தலை முதல் கால் வரை அவர்களைக் கண்டோருக்கு அவர்கள் மீது மதிப்புணர்வு ஏற்பட்டது. விண்ணுலக ஒளியால் அவள் ஒளியூட்டப்பட்டிருந்தாள். தங்களது இனிமையான பகிரப்பட்ட கதையில் இருவரும் மூழ்கியிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் இளவேனிற்காலத்தின் பேரெழில் குழுமியிருந்தது. சில நேரம் அவர்கள் இந்த உலகில் தங்களுக்கு மறுக்கப்பட்ட அனைத்தையும் குறித்துப் பேசினர். சில நேரம் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்தனர். அரியணைக்கு அருகில் ஒரு முதியவர் நின்றார். சிறிது சிறிது இடைவெளி விட்டு அவர்கள் மீது மலர்களைத் தூவிக் கொண்டிருந்தார். சயத், "தெய்வீகமாகத் தெரியும் இந்த இருவர் யார், ஏரம் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் இவர்கள் யார், இங்கு இவர்கள் எவ்வாறு வந்தனர்? எங்கிருந்து இவர்கள் வந்துள்ளனர்?" என்று கேட்டான். முதியவர் மிக அமைதியாக அவனுக்குப் பதில் அளித்தார், "இந்த இருவரும் முடிவிலாக் காலத்திற்கு நண்பர்களாக இருக்கப் போகிறவர்கள், இவன் இந்த உலகத்திலேயே மிக எளிமையான மன்னன் ஆவான், இவள் பெண்களிலேயே சிறந்தவள் ஆவாள், பெண்களிலேயே முழு நிலவைப் போன்றவள், மிக அழகானவள், இவன், இந்த மன்னன் மஜ்னுன் என்று எப்போதும் அழைக்கப்படுவான்; இந்த இருவரும் துளையிடப்படாத மாணிக்கக் கல்லைப் போன்றவர்கள். விசுவாசம் எனும் இனிமையான பெட்டகத்தின் கைதிகள் ஆவர். இவர்கள் அன்பால் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வுலகில் இருந்த போது தடைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் அமைதியை அறிந்திருக்கவில்லை. இவர்களது சோகம் என்றுமே முடியாது என்று தோன்றியது. இங்கு இவர்கள் அத்தகைய துயரத்தைக் காண்பதில்லை. நீ தற்போது காண்பதைப் போலவே இவர்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பர். உலகில் நினைத்தது நடக்காததால் ஏமாற்றம் அடைந்தோர் சொர்க்கத்தில் நீ தற்போது காண்பதைப் போன்ற இழப்பீடுகளைப் பெறுகின்றனர். அந்த உலகத்தில் இவர்கள் சோகத்தை அறிந்திருந்தனர், இங்கு முடிவிலாக் காலத்திற்கு நிறைவான மகிழ்ச்சியுடன் இவர்கள் வாழ்கின்றனர்."

இரவின் அறுவடையை எரித்த தீ சுவாலையை காலை மெழுகுவர்த்தி ஏற்றிய போது பகல் திரும்பி வந்தது. தன் கனவு நிலையிலிருந்து சயத் எழுந்தான். அது வரை ஒளித்து வைக்கப்பட்டிருந்த இரகசியங்களை வெளிக்கொணர்ந்தான். அவன், "அந்த உலகை (சொர்க்கத்தை) அறிந்தவர்கள் இந்த உலகத்தின் களிப்புகளை மிதித்து அவற்றை இங்கேயே இறப்பதற்காக விட்டு விடுவர். இந்த உலகமானது விரைவானது, வெற்றிடமானது, மற்றும் உறுதியில்லாதது, அந்த உலகமானது நீடித்திருப்பது, பாதுகாப்பானது, மற்றும் தூய்மையானது. தூசி மற்றும் பயனற்ற செயல்களைத் தவிர்த்து நிலைபேறுடைமையைத் தேர்ந்தெடுப்பது என்பது மேலானது; எந்த ரோஜாவுக்காக நீ பிறந்தாயோ அது ஒரு முள்ளாக மாறுவதில்லை, நீ என்றுமே கண்டெடுக்கப் போகாத ஆபரணங்களைத் தேடாதே, அத்தகைய ஆபரணங்களை இந்த உலகில் நீ தோண்டியெடுக்கப் போவதில்லை. காதலில் உன்னை ஈடுபடுத்திக் கொள், எனவே உன் ஆன்மாவிற்குப் புத்துணர்ச்சியூட்டு, நீ ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து மாறு. காதலானது ஓர் அம்பைப் போல் இருந்தால் நீ நீண்ட காலமாக வேண்டிய இலக்கைக் குறி வை, அதை அடைவதில் தோல்வியடையாதே. காதலானது சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும், உன்னை மட்டுமே திரும்பத் திரும்பப் பார்க்கும் சுழலிலிருந்து காதல் நம்மைக் காக்கிறது. காதலின் சோகங்கள் ஆன்மாவுக்கு நலத்தைக் கொடுக்கும் ஒரு மருந்தாகும், அவை தீங்கு செய்வதில்லை, அவை வாழ்வதற்கு உதவுகின்றன; வாழ்வு நம் மீது ஆர்வத்தைத் தூண்டுகிற வகையில் கசப்பான அனுபவங்களைத் திணிக்கும் போது வாழ்வின் கசப்பான அனுபவங்கள் இனிமையாக இருக்க காதல் உதவுகிறது, காதல் ஒரு மனிதனின் மன அமைதி குலையச் செய்தாலும் அவை நல்லவை என்று அறிந்ததனால் அவன் அதை எடுத்துக் கொள்கிறான், ஏனெனில் காதலே அவர்களை உருவாக்குகிறது."

"https://ta.wikibooks.org/w/index.php?title=லைலாவும்_மஜ்னுனும்&oldid=18017" இலிருந்து மீள்விக்கப்பட்டது