திருவாசகம்/சிவபுராணம் உரை 33-35

விக்கிநூல்கள் இலிருந்து

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

35. ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

பதப்பொருள் :

உய்ய - நான் உய்யும்படி, என் உள்ளத்துள் - என் மனத்தில், ஓங்காரம் ஆய் நின்ற - பிரணவ உருவாய் நின்ற, மெய்யா - மெய்யனே, விமலா - மாசற்றவனே, விடைப்பாகா - இடபவாகனனே, வேதங்கள் - மறைகள், ஐயா என - ஐயனே என்று துதிக்க, ஓங்கி - உயர்ந்து, ஆழ்ந்து அகன்ற - ஆழ்ந்து பரந்த, நுண்ணியனே - நுண்பொருளானவனே.

விளக்கம் :

ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்குமாதலின் அவையே உள்ளத்துள் நினைவின் தோற்றம், நிலை, இறுதியைச் செய்வனவாம். அவ்வெழுத்துகளால் உண்டாகும் ஒலியை இறைவனது சத்தியே செலுத்தி நிற்றலால் "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா," என்றார்.

சைவ நூல்கள், இடப ஊர்தியை உயிர் என்று கூறும். ஆகவே, "விடைபாகா" என்றது, உயிருக்கு நாதன் என்றதாம்.

இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது.

"அல்ல யீதல்ல யீதென மறைகளு மன்மைச் சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தரன்"

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல் ஆகையால், அறிவால் இறைவனைக் காண முடியாது; அருளால்தான் காணமுடியும் என்ற நயமும், "வேதங்கள் ஐயா என ஓங்கி" என்பதனால் கிடைக்கிறது.

இறைவன் மிக நுட்பமானவன்; அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுண்டு. அதைக் குறிப்பிட "ஆழ்ந்தகன்ற நுண்ணியனே" என்றார். "அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்" என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார்.

இவற்றால், இறைவன் உயிர்களிடத்து நிற்கும் நிலை கூறப்பட்டது.