உள்ளடக்கத்துக்குச் செல்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/6ம் திருமொழி

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 08:04, 6 ஜூலை 2006 (UTC)

         ஆய்ச்சியர் ஊடி அமலனை எள்கல்

          எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏர்மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் எனைப்பலர் உள்ள இவ்வூரில்* உன்தன்
மார்வு தழுவுதற் காசை யின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு*
கூர்மழை போல்பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில்*
வார்மணற் குன்றில் புலர நின்றேன் வாசு தேவா! உன்வரவு பார்த்தே.    1
 
கொண்டை யொண்கண் மடவாள் ஒருத்தி கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டு*ஒல்லை நானும் கடைவ  னென்று  கள்ள விழியை விழித்துப் புக்கு*
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ  வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப*
தண்தயிர் நீகடைந் திட்ட வண்ணம்  தாமோத ரா!மெய் யறிவன்நானே.  2

கருமலர்க் கூந்த லொருத்தி தன்னைக்  கடைக்கணித்து* ஆங்கே யொருத்தி தன்பால்
மருவி மனம்வைத்து மற்றொருத்திக்கு உரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து*
புரிகுழல் மங்கை யொருத்தி தன்னைப்  புணர்தி யவளுக்கும் மெய்யன் அல்லை*
மருதிறுத் தாய்உன் வளர்த்தி யூடே வளர்கின்ற தாலுன்றன் மாயை தானே.3

தாய்முலைப் பாலில் அமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை யிட்டுச் சென்று*
பேய்முலை வாய்வைத்து நஞ்சை யுண்டு பித்தனென் றேபிறர் ஏச நின்றாய்*
ஆய்மிகு காதலோடு யானிருப்ப  யான்விட வந்தவென் தூதி யோடே*
நீமிகு போகத்தை நன்கு கந்தாய்  அதுவுமுன் கோரம்புக் கேற்கு மன்றே.  4

மின்னொத்த நுண்ணிடை யாளைக் கொண்டு* வீங்கிருள் வாயென்றன் வீதி யூடே
பொன்னொத்த வாடைகுக் கூட லிட்டுப் போகின்ற போதுநான் கண்டு  நின்றேன்*
கண்ணுற் றவளைநீ கண்ணா லிட்டுக்  கைவிளிக் கின்றதும் கண்டே நின்றேன்*
என்னுக் கவளைவிட் டிங்கு வந்தாய் இன்னமங் கேநட நம்பி நீயே.       5

மற்பொரு தோளுடை வாசு தேவா! வல்வினை யேன்துயில் கொண்ட வாறே*
இற்றை யிரவிடை யேமத் தென்னை இன்னணை மேலிட்ட கன்று நீபோய்*
அற்றை யிரவுமோர் பிற்றைநாளும் அரிவைய ரோடும் அணைந்து வந்தாய்*
எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய் எம்பெருமான்நீ யெழுந்தருளே.       6

பையர வின்னணைப் பள்ளி யினாய் பண்டையோ மல்லோம் நாம்*நீ யுகக்கும்
மையரி யொண்கண்ணி னாரு மல்லோம் வைகியெம் சேரி வரவொழிநீ*
செய்ய வுடையும் திருமுகமும்  செங்கனி வாயும் குழலும் கண்டு*
பொய்யொரு நாள்பட்ட தேயமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ!    7

என்னை வருகவெனக் குறித்திட் டினமலர் முல்லையின் பந்தர் நீழல்*
மன்னி யவளைப் புணரப் புக்கு மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்*
பொன்னிற வாடையைக் கையில் தாங்கிப் பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்*
இன்னமென் கையகத் தீங்கொருநாள்  வருதியேல் என்சினம் தீர்வன் நானே.8

மங்கல நல்வன மாலை மார்வில் இலங்க மயில்தழைப் பீலிசூடி*
பொங்கிள வாடை யரையில் சாத்திப் பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து*
கொங்கு நறுங்குழ லார்களோடு  குழைந்து குழலினி தூதி வந்தாய்*
எங்களுக் கேயொரு நாள்வந்தூத  உன்குழ லின்னிசை போத ராதே.       9
 
அல்லி மலர்த்திரு மங்கை கேள்வன் றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்*
எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி எள்கி யுரைத்த வுரையதனை*
கொல்லி நகர்க்கிறை கூடற் கோமான் குலசே கரனின் னிசையில் மேவி*
சொல்லிய இன்தமிழ் மாலை பத்தும்  சொல்ல வல்லார்க் கில்லை துன்பந்தானே.10

குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்