உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் ஈழம்: கல்வி: அதிபர்கள்: கதிர் பாலசுந்தரம்

விக்கிநூல்கள் இலிருந்து

தமிழ்ஈழக் கல்லூரி அதிபர் ஒருவரின் மனதைச்சுண்டும் இரசமான, வித்தியாசமான கதை. “அற்பணிப்பு, அரசியல் செல்வாக்கு, உழைப்பு - யூனியனில் ஒரு பொற்காலம் பதிவு செய்தன” சொல்கிறார் யூனியன் கல்லூரி முன்னாள் அதிபர் கதிர் பாலசுந்தரம் B.A., S.L.E.A.S. - நாடக, சிறுகதை, சுயசரிதை, ஆங்கில-தமிழ் நாவல் எழுத்தாளர்.

'

ஓய்வு பெற்று இரு தசாப்தங்கள் ஒடிக்கழிந்த பின்னர் யூனியன் கல்லூரிச் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கின்றேன். வியப்பாக இருக்கின்றது.

அதிபர் பதவி ஏற்ற வேளை, குறுகிய காலகட்டத்துள் வாகைசூடி மேலெழுந்து ஒய்யாரமாகப் பறக்கலாம் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. வெகுவிரைவில் குப்புற விழுந்து புதைந்து மறைந்துவிடுவேன் என்று சிலர் பேசிக்கொண்டனர். பீனிக்ஸ் பறவை போல சாம்பலை உதறிவிட்டு மின்னாமல் முழங்காமல் இறைக்கை அடித்து மேலெழுந்து யூனியன் கல்லூரி பறக்கும் என்று யாரும் ஆரூடம் கூறவில்லை.

கண் முன்னே இராட்சத பணி காத்துக்கிடந்தது. வெற்றி தோல்வியைப் பற்றிச் சிந்திக்கவில்லை. விளைவைப் பற்றிக் கருத்தில் கொள்ளவில்லை. எடுத்த முயற்சியைத் தியாக சிந்தையோடு சிறப்புற நிறைவேற்றவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எந்தவேளையையும், எந்த நாளையும் நிராகரித்துவிட்டு ஒதுங்கவில்லை. கல்லூரி நேரத்துக்கு முன்னும் பின்னும், வார இறுதி இரு திளங்களிலும், தவணை முடிவு நீண்ட விடுதலை நாட்களிலும் உழைப்புத் தேவைப்பட்டது. அதனைச் சுமையாகக் கருதியது கிடையாது. கல்லூரியின் சேவகனான இருப்பதில் - முகாமைத்துவத்தின் எஜமானாக செயல்படுவதில் இதயம் நிறைவு கண்டது. அதுதான் எனது இலட்சிய வெற்றியின் மூல சூத்திரம்.

அதிபர் பதவியில் அமர முன்னர், யூனியனில் ஆறு ஆண்டுகள் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருந்தேன். அந்த அனுபவம் அளப்பரிய நன்மை புரிந்தது. கல்லூரியைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக உணர்ந்திருந்தேன். ஆசிரியர் குழுவின் கடமையுணர்வு எந்தளவுக்கு இருந்தது என்பது தெரியும். பாடசாலையின் குறைபாடுகள் பற்றிய தெளிவான கருத்து இருந்தது. என்ன நோய் என்பது நிட்சயமாகத் தெரிந்திருந்தது. அதற்கு என்ன மருந்துகொடுக்கவேண்டும் என்பது உறுதியாகப் புரிந்திருந்தது. வைத்தியம் பகைமையைக் கொண்டுவரும் என்பது தெரியும். ஆனால் எல்லாப் பகைமைகளையும் கல்லூரியின் மீள் எழுச்சியின் பொருட்டுச் சகித்துக்கொண்டேன்.

1978 இறுதியில் கல்லூரித் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தபொழுது, கல்லூரி முழுவதிலும் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பெற்ற ஒரேஒரு மாணவனே பயின்றார். அவர் செ.சுகுமார். யூனியனில் படித்து ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பெற்றவர்கள் தொடர்ந்தும் அங்கு படிப்பதில்லை. வடமாநில ஆசிரியர் சங்கம் நடாத்திய எட்டாம் வகுப்புத் தேர்வு, அரச சிரேட்ட தராதரப் பத்திர தேர்வு என்பனவற்றில் சிறந்த பெறுபேறுகள் பெற்றவர்கள்கூடத் தொடர்ந்து யூனியனில் படிப்பதில்லை. புகழ்பூத்த கல்லூரிகளில் சேர்வதற்காகப் பறந்துவிடுவார்கள். பெரும்பான்மையானவர்கள் மகாஜனக் கல்லூரிக்குப் போய்விடுவர். வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாழ் இந்து அல்லது வேம்படிக்குத் தாவிவிடுவார்கள். மகாஜனவுக்குச் சிறந்த மாணவர்களை வழங்கும் பாடசாலையாகவே யூனியன் மிக நீண்ட காலமாகத் திகழ்ந்தது. அந்தப் பாரம்பரியம் தலைகீழாக மாறியது. மகாஜன, யாழ் இந்து, வேம்படி கல்லூரிகளிலிருந்து புலமைப் பரிசில் பெற்றவர்களும், மற்றும் சிறந்த மாணவர்களும் யூனியனை நாடி வந்தனர். சென் ஜோன்ஸ் கல்லூரியிலிருந்தும் வந்தனர். அவர்கள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்பாகச் சித்தி எய்தி, பல்கலைக்கழகச் சிறந்த படிப்புத் துறைகளுக்குத் தெரிவாகினர். அவ்வாறான சிலரின் பெயர்களைப் ‘பொற்காலம் - யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்’ நூலில் பதிவு செய்துள்ளேன். 1987 பெப்புருவரி 28ந் திகதி ஓய்வு பெற்ற வேளை, ஆறாம் ஆண்டில் உள்ள ஐந்து பிரிவுகளில், ஒரு பிரிவு (ஒவ்வொரு பிரிவிலும் 40 மாணவர்) தனிப்படப் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அம்சம் ஒரு தசாப்த உழைப்பின் சாதனையைத் தெளிவாகப் பேசும்.

அரசியல் பக்கபலம்

பதிவு செய்யப்பட்ட சாதனைகளுக்கு ஏதுவாக அமைந்த முதன்மையான காரணம் ஒன்றுண்டு. பதவி ஆரம்பகாலத்தில் வலுவவான அரசியல் பக்கபலம் எனக்கிருந்தது. எப்பவோ சம்பாதித்துச் சேமிப்பில் இருந்த சொத்தும் ஒரு காரணம். குடும்ப அரசியல் உறவும் இன்னொரு காரணம். காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் கொளரவ அ.அமிர்தலிங்கம் அவர்கள், அச்சமயம் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்தார். அவருடைய பேருதவியின் மூலம் சிறந்த ஆசிரியர்களைக் கல்லூரிக்குக் கொண்டுவர முடிந்தது. அதாவது அங்கு கடமை புரிந்த ஆசிரியர்களில் 90 சதவீதமானவர்களின் பணி திருப்தியில்லாமல் இருந்தது. புதிய கடமையுணர்வுமிக்க துடிப்பான இளம் ஆசிரியர்களின் வருகையே கல்லூரியின் புனர்ஜென்மத்துக்கு முக்கிய மூலகாரணம். ஆனால் 1983 ஆடி இனக் கலவரத்தை அடுத்து அந்தக் கட்சித் தலைவர்கள் இந்தியா சென்றுவிட்டார்கள். அரசியல் செல்வாக்கு இல்லாது ஒழிந்த பின்னரும் தொடர்ந்து கல்வித் திணைக்களம் கல்லூரி வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றது. அதற்குக் காரணம் அவர்கள் கல்லூரியின் சாதனைகளால் மிகவும் கவரப்பட்டிருந்தனர். ஒழிவு மறைவின்றிப் பேசுவதானால், ஆரம்ப காலத்தில் கிடைத்த அரசியல் பக்கபலம் இல்லாதிருந்தால், யூனியன் புதையுண்டு கிடந்த புழுதிச் சேற்றுக்குள்ளிருந்து சிறகடித்து எழுந்து மேலே பறந்திருக்கவே முடியாது.

வருடாந்த முகாமைத்துவ செயல் திட்டம்

ஜனவரி மாதம் முதல் தினமே வருடாந்த செயல் திட்டம் கல்லூரிச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்படும். கல்லூரியின் சுமுகமான சாதுரியமான செயற்பாட்டிற்கு முழுமையாக அந்தத் திட்டத்திலேயே தங்கியிருந்தோம். பதவி ஏற்ற சமயம் அவ்வகையான எந்தத் திட்டமும் நடைமுறையில் இருக்கவில்லை. முகாமைத்துவப் பணிகள் ஒழுங்குமுறையாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. தேவை ஏற்படும் வேளைகளில் வாய்மொழி மூலம் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. முகாமைத்துவப் பணிகள் மிகப் பொருத்தமான சிறந்த ஆசிரியர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டன. ஏறக்குறைய எல்லா முகாமைத்துவப் பணிகளும் பகிர்ந்து வழங்கப்படடன. பணிகளைப் பகிர்ந்து வழங்கும் சமயம் மிகவும் அவதானம் தேவைப்பட்டது. நு}று வீதம் ஒரு ஆசிரியரில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அவருக்கு அந்தப் பணி வழங்கப்பட்டது. சில ஆசிரியர்கள் வகுப்புப் பாட வேலைகளில் மிகவும் சிறப்பாகப் பணி ஆற்றினர். ஆனால் வகுப்பறைக்கு வெளியே அவர்கள் எதுவித பணியையும் ஆர்வத்துடன் செய்யக்கூடியவர்களாக இருக்கவில்லை. அவ்வாறானவர்களுக்கு வகுப்பு வேலைகளுக்கு வெளியே - விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா, அல்லது நீர் வினியோகம், துப்பரவு, போன்ற எந்த மேற்பார்வைப் பணிகளும் வழங்கப்படவில்லை. எனது பணி முகாமைத்துவம் செய்பவர்களை முகாமைத்துவம் செய்வதாக அமைந்திருந்தது. இந்த முகாமைத்துவக் கட்டமைப்பே கல்லூரியை இலகுவாகக் கட்டியெழுப்ப அடிப்படையாக அமைந்த இன்னொரு காரணியாகும்.

ஆண்டு தோறும் முதல் தினத்தன்று வருடாந்த முகாமைத்துவ வேலைத் திட்டம் காலைப் பிரார்த்தனை வேளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். அதனை அவர்களுக்கு விளக்கக் கிட்டத்தட்ட மூன்று பாடவேகைள் தேவைப்பட்டது. அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறேன் என்பதைச் சொல்வதே அதன் தனித்த நோக்கம். உதாரணமாக ஓர் அம்சம் இவ்வாறு விளக்கப்படும்: “பாடத்துக்கு மணி அடித்த பின்னர் 3 நிமிடங்களுள் வகுப்பு வேலை ஆரம்பிக்கப்படவேண்டும். அதன் பின்னர் ஒரு தலைதன்னும் வகுப்பு அறைக்கு வெளியே தென்படக் கூடாது. அத்தோடு பாட முடிவைக் குறிக்கும் மணி அடிக்கும் வரை, எவரும் வகுப்பு அறைக்கு வெளியே வரக்கூடாது. எவராவது அவசரதேவை கருதி வெளியே வருவதாயின், ஆசிரியரின் கடிதத்துடன்தான் வெளிவரவேண்டும். வகுப்பு ஆசிரியர் வராவிட்டால்? அதைப்பற்றிச் சொல்லப்போகிறேன்..” இது நேரடியாக மாணவர்களுக்குச் சொல்லப்பட்டதாயினும், உதவி ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள் யாவருக்கும் மறைமுகமான எச்சரிக்கையாகும். மூன்று நிமிடங்களின் பின்னர் கல்லூரி வளாகத்தில் ஊசிவிழுந்தாலும் கேட்கும். கல்வித் திணைக்களத்திலிருந்து வந்த ஒவ்வொரு அதிகாரியையும் இந்த அம்சம் வியப்பில் ஆழ்த்தியது.

உதவி அதிபர்கள்

அது ஒரு பொல்லாத திங்கட்கிழமை. இருதய நோய் காரணமாக வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதிபர் பதவி கையேற்றதை அடுத்து அன்றுதான் முதன் முதலில் ‘லீவு’ எடுத்திருந்தேன். எனது கடமையை ஏற்றிருந்த உதவி அதிபரினால் ஒரு தினங்கூடப் பாடசாலையைச் சுமுகமாக நடாத்த முடியவில்லை. எனது பதவிக் காலத்தில் என்றுமே கூட்டாத ஒழுக்கக் கட்டுப்பாட்டுச் சபையைக்கூட்டிப் பிரச்சினையைப் பூதாகாரமாக்கினார். இரண்டு மாணவர்களுக்கிடையிலான பிரச்சினை. இருவரும் வகுப்பு நேரத்தில் பிரார்த்தனை மண்டபத்தில் அடிபட்டிருக்கிறார்கள். இரண்டு தட்டுப் போட்டுத் தீர்க்க வேண்டிய அர்ப்ப பிரச்சினை. அவரின் தப்பான செயற்பாடு அவரைப் பாதிக்கவில்லை. என்னையே பாதித்தது.

உதவி அதிபரானவர், அதிபர் சமூகமளிக்காதவிடத்து உடனடியாகவே அவரின் கடமைகளைப் பொறுப்பேற்றுப் பாடசாலையைச் சுமுகமாக வழிநடத்தும் சாதுரியம் உடையவராக இருத்தல் அவசியம். இதய பூர்வமாகப் பாடசாலையில் அக்கறை கொண்டவராக, அதனை நேசிப்பவராக இருக்கவேண்டும். சுறுசுறுப்பானவராகவும், கடும் உழைப்பாளியாகவும் இருத்தல் அவசியம். அதிபர் கடமையில் இருந்தாலும், பல தடவைகள் பாடசாலையைச் சுந்றிவந்து அமைதியையும் ஒழுக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு அவருடையது. அதிபரை மேற்பார்வைக் கடமைகளிலிருந்து விடுவித்து - அவர் திட்டமிடல், நிர்வாகம், மேலாண்மையாளர்களை மேற்பார்வைசெய்தல், அலுவலக கடமை, பெற்றாரைச் சந்தித்தல் முதலிய கடமைகளிலில் ஈடுபட வாய்ப்பளிக்க வேண்டும். கொக்குவில் உப அதிபர் திரு. ஏ.பஞ்சலிங்கம் (1971-1979) அவர்களுடைய செயற்பாடுகளை ஆர்வத்துடன் கவனித்திருக்கிறேன். (அவர் பின்னர் யாழ். இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமை பார்த்தவர்.) அதிபர் திரு. எம்.மகாதேவன் அவர்கள் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருக்க, அவரே பாடசாலையை இயக்கினார். அவ்வகையான சிறந்த உப அதிபர்கள் பலரைச் சுட்டிப் பேசமுடியும்.

ஐந்து பிரதி அதிபர்கள் குறித்த சகாப்தத்தில் கடமையாற்றினர். அவர்கள் கண்ணியவான்கள். ஆனால் அவர்கள் எவராலும் எனது எதிர் பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. காரணம் அவர்கள் முதுமை காரணமாகச் சுறுசுறுப்புப் போதாமையுடையவர்களாக விருந்தனர். தயக்கத்துடன் சொல்வது என்னவெனில், அவர்கள் அப்பதவியை ஏற்றமை ஓய்வு கருதியே. அப்பதவியை மிகச் சிரேட்ட சேவையுடைய, உற்சாகம் போதாத, முகாமைத்துவ கடமைகளைச் சுமக்க லாயக்கற்ற வயது முதிர்ந்த ஆசிரியருக்கு வழங்கும் வழமையே அதற்குக் காரணம். அவர்களால் முதுமைகாரணமாகப் பாடசாலையை அடிக்கடி சுற்றி வந்து மேற்பார்வை செய்ய முடியாது: அத்தோடு ஒவ்வொரு ஆசிரியரும் முகாமைத்துவக் கடமைகளுக்குப் பொருத்தமானவர் என்று கருதுவது தவறானதாகும். வழமையான நடைமுறைகளிலிருந்து விலகி எனது விருப்பத்துக்கு ஒருவரை உப அதிபராக நியமிக்க முடியவில்லை. அதன்பேறாக உப அதிபர்களது கடமைகளையும் தலையில் சுமக்க வேண்டியிருந்தது.

ஐவரின் பக்கபலங்கள்

சிறந்த பிரதி அதிபர்கள் வாய்க்கவில்லை. அதிட்டவசமாக ஐந்து சிறந்த பகுதித் தலைவர்கள் வாய்த்திருந்தார்கள். மிகவும் மெச்சக்கூடிய வகையில் கடமையாற்றினார்கள். யாவரும் நான் தெரிவு செய்து நியமித்தவர்களே. முதலில் இருவரைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர் திருமதி பத்மாவதி சந்திரசேகரி. மற்றவர் செல்வி ஜெயரத்தினதேவி சபாரத்தினம். ஒருவர் பின் மற்றவர் கடமையாற்றினார். இவர்களிடம் மாணவிகள் தொடர்பான முகாமைத்துவப் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆண்கள் பெண்கள் இருபாலாரும் சம எண்ணிக்கையில் உள்ள கல்லூரி. மாணவிகள் ஒழுக்கம் பற்றிய எந்தக் கவலையும் இருக்கவில்லை. எனது பதவிக் காலம் முழுவதிலும் பெற்றோரிடமிருந்து ஒரு முறைப்பாடுதன்னும் வராமல் எவ்வாறு அவர்களால் முகாமைத்துவம் பண்ண முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது. இருவரும்; தங்களது கடமைகளை அற்புதமாக நிறைவேற்றினர். அவர்களது உற்சாகம் நிறைந்த அர்ப்பணிப்பான பணிகள் எனது சுமையைப் பெரிதும் குறைத்தன. மூன்றம் நபர் திரு.ஏ.பரமநாதன். பிரதான வாயிலை அடுத்த புதிய மேன்மாடிக் கட்டிடத் தொகுதியின் கீழ்ப்பிரிவு மாணவர்களுக்குப் பொறுப்பாக இருந்தவர். கடமைப் பொறுப்பு உணர்ந்த கடும் உழைப்பாளி. அவருடைய பகுதிக்கு அருமைபெருமையாகவே மேற்பார்வைக்குச் செல்வேன். எனது பணியை இலகுபடுத்தினார். நான்காம் நபர் திரு.செல்லத்துரை சிவகுமாரன். க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். இளவயதினராக இருந்தபோதிலும் மந்திரவாதிபோல மாணவர்களை மடக்கி வைத்திருந்தார். ஐந்தாம் நபர் திரு.பி.கமலநாதன். சிறந்த கணக்கியல் ஆசிரியர். அதனால் உயர்தர வர்த்தக வகுப்புகளை மேற்பார்வை செய்வது அவருக்குச் சிரமமாக இருக்கவில்லை. மேலே குறித்த பணிகளைத் தவிர, பகுதித் தலைவர்கள் ஐவரும் வருடாந்த முகாமைத்துவ செயல் திட்டத்தை வெற்றியோடு நடமுறைப்படுத்தப் பாரியளவில் உதவினர். இன்னொரு உதவி ஆசிரியரைப்பற்றி விசேடமாகச் சொல்லவேண்டும். அவர் விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த திரு. விசுவலிங்கம் பாலசிங்கம். கிறிகட், உதைபந்தாட்டம் என்பனவற்றில் கல்லூரி சாதனைகள் புரியவும், தொடர்ந்தும் முன்னணியில் திகழவும் அவரது அர்ப்பணிப்பான கடும் உழைப்பே காரணம். மேலும் விடுதியை போற்றக்கூடிய முறையில் மேற்பார்வை செய்தவர்.

உதவி ஆசிரியர்கள்

வகுப்பு வேலையோடு உதவி ஆசிரியரின் கடமை முடிந்துவிடுவதில்லை. யூனியனுக்குப் புதிதாகக் கொண்டு வந்த ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பறைகளில் உன்னதமாகக் கடமையாற்றினர். ஆனாலும் ஒரு அம்சத்தில் அதி~;டம் கிட்டவில்லை. பாடசாலை முடிந்த பின்னர் அல்லது விடுமுறை நாட்களில் ஒரு ஆசிரியர்கூடச் சேவைக்காகப் பாடசாலைப் பக்கம் தலைகாட்டவில்லை. அவர்களுடன் பகுதித் தலைவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். பாடசாலையை மேலும் உயர்த்தவேண்டும் என்பதற்காக, அதிபரைக் காட்டிலும் பாடவேளைக்கு அப்பால் பாடசாலை முடிந்த பின்னரும், விடுதலை நாட்களிலும் சேவை செய்த வேறு பாடசாலை உதவி ஆசிரியர்களைத் தெரியும். அவ்வகையிலே மகாஜனக் கல்லூரி உதவி ஆசிரியர் திரு.விநாயகமூர்த்தி அவர்களை நம்பிக்கையோடு குறிப்பிடலாம். அவரைப் போன்ற ஓரிருவரின் சேவை கிடைத்திருந்தால் யூனியனுக்கு மேலும் தொண்டாற்றியிருக்கலாம். பாடசாலை முடிந்தும், கிழமை முடிவு நாட்களிலும், தவணை முடிவு நாட்களிலும் கல்லூரியில் கடமை காத்திருந்தது. கடமையை உதாசீனம் செய்ய முடியவில்லை.

எவ்வாறாயினும் சகல உதவி ஆசிரியர்களும் வகுப்புச் சுவர்களுள் அற்புதமாகக் கடமை ஆற்றினர். அவர்கள்தான் தங்களது வியக்கத்தக்க உற்சாகமான பணிகளால் யூனியனைக் கட்டி எழுப்பி மறுமலர்ச்சி ஏற்படுத்தி, யூனியன் மேலும் மேலும் எழுந்து பறக்கச் செய்தவர்கள். எனது பதவிக் காலத்தில் நான் சந்தித்த உச்சச் சிறப்பான ஆசிரியர்கள் மூவர் பெயரைச் சொல்லும்படி கேட்டால் மிக மகிழ்ச்சியோடு சமர்ப்பிக்க முடியும்: 1. திருமதி பராசக்தி பரமேஸ்வரன் (சமூகக் கல்வி) 2. திருமதி கிருபைமலர் இராசையா (தாவரவியல்) 3. திரு.ஏ.மகாதேவன் (இரசாயனவியல்)

அதிபராகக் கடமை புரிந்த கலத்தில் உதவி ஆசிரியர்களின் சேவையில் பூரண திருப்தி கண்டேன். புரூணை, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் பெற்ற அனுபவம் எனது பழைய கருத்தை ஐயுற வைக்கிறது. பின்வரும் துறைகளில்; உதவி ஆசிரியர்களின் சேவை உலக தரத்தில் அமையவில்லை என்பதை உணர்கின்றேன்: தினமும் கட்டாய வீட்டு வேலை அளவோடு வழங்கி அவற்றைத் தவறாமல் திருத்துதல், வகுப்பில் தினமும் போதிய எழுத்துவேலை கொடுத்து அவற்றைத் தினமும் பாடநேரத்துக்கு அப்பால் திருத்துதல். புரூணையில் இரண்டு விடயங்களை அவதானித்தேன். பாடசாலை முடிந்த பின்னர், வகுப்பில் கொடுத்த எழுத்து வேலையைத் திருத்திய பின்னரே வீடு செல்லாம். மற்றது பாடசாலைக்கு விடுதலை எடுத்திருந்தால், பாடசாலை நேரம் முடிய வகுப்பு வைத்துக் குறித்த தவறிய பணியை முடிக்கவேண்டும். மாணவர்களுக்குப் பாடசாலை முடியும் வேளை, ஆசிரியர்களுக்கு முடிவதில்லை.

“ஆசிரியர்கள்தான் சமூகத்தின் மிகவும் பொறுப்பு வாய்ந்த பிரதான அங்கத்தவர்கள். ஏனெனில் அவர்களது தொழில்சார்ந்த முயற்சிகள் பூமியின் விதியைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்தவை.” ஹெலன் கல்டிகொற்

அனுமதி நெருக்குவாரம்

அதிபர் பதவியை ஏற்க முன்னர் பாடசாலை அனுமதியில் எவ்வாறான கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்படவில்லை. அனுமதி கேட்டு வந்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டார்கள். இதில் கவலைக்குரிய கதை என்னவென்றால், புகழ்மிக்க கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டவர்களே அனுமதிகேட்டு வந்தனர். மற்றக் கல்லூரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்கள் உயர்தர வகுப்புகளில் முட்டிவழிந்தனர். பலர் சாதாரண தரத் தேர்வில் மிகக் குறைந்ததரச் சித்திகளைக் கொண்டவர்கள். பலர் சாதாரணதரத் தேர்வில் மூன்றாவது அல்லது நான்காவது, ஐந்தாவது எத்தனங்களில் சித்தி அடைந்தவர்கள். இரண்டொருவர் போலித் தேர்வுப் பத்திரம் வைத்திருந்தார்கள். கணினிக்குப் பதிலாகத் தட்டச்சு இயந்திர எழுத்தை உடையவை. வேறு ஓரிருவர் உண்மையான தேர்வுப் பத்திரங்கள் உடையவர்கள் - அவர்களுக்காகத் தேர்வு எழுதியவர்கள் வேறு நபர்கள். அவர்கள் ‘குதிரைகள்’ என்று நொடிக்கப்பட்டார்கள். அனேகர் வயதுகூடியவர்கள். அதனால் எமது கல்லூரியை ‘முதியோர் மடம்’ என்று கிண்டல் செய்தனர்.

விரைவிலேயே யூனியன் விண்ணொலி எழுப்பியபடி வானத்தில் பறக்க ஆரம்பித்தது. அதனோடுகூடவே அனுமதி நெருக்குவாரமும் ஆரம்பித்தது. க.பொ.த. (சா.த.) தேர்வில் குறைந்த தரச் சித்திகளோடு சித்தி அடைந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தனிப்பட்ட பீட்சார்த்திகளாகத் தேர்வு எழுதியவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. கீழ் வகுப்புகளுக்கும் அனுமதி கேட்பவர்களின்; நெருக்குவாரம் தொடர்ந்தது.

யூனியன் அதிசயிக்கத் தக்க மலர்ச்சியும் எழுச்சியும் பெற்றது. கல்வித் திணைக்களத்தினர் பாடசாலை அனுமதியை மையமாக வைத்தே பாடசாலைகளின் தரத்தை எடைபோடுவர். யூனியனுக்கு அனுமதி கேட்டுக் கல்வித் திணைக்களத்திற்குப் பெற்றார் படை எடுத்தமை, இன்னொரு புறத்தில் யூனியனுக்கு உதவியாக அமைந்தது. கல்வித் திணைக்களம் கல்லூரி விடயத்தில் அக்கறை காட்டத் தொடங்கியது. வேண்டிய எல்லாவித உதவிகளையும் மகிழ்ச்சியோடு செய்தது. புறநடைகளும் உண்டு. ஒரு தடவை ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளர் தனது ஊர்ப் பெற்றார் ஒருவரை அனுப்பியிருந்தார். அவர் கொடுத்த கடதாசித் துண்டில் குறித்த இரண்டு மாணவர்களுக்கும் அனுமதி வழங்கும்படி எழுதியிருந்தார். நியாயத்தை விளக்கி அனுமதி வழங்காது அப்பெற்றாரைத் திருப்பி அனுப்பிவிட்டேன். வினை தேடி வந்தது. அடுத்த தினம் உதவிக் கல்விப் பணிப்பாளர் விறுவிறென்று அலுவலகத்துள் புகுந்தார். “குளறுபடிகள் நடப்பதாக அறிந்தேன்” என்றார். பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதிசேகரிப்புக்கு வழங்கும் சிட்டைகளின் அடிக்கட்டைகளை ஆராயத் தொடங்கினார். அலுவலகத்தைவிட்டு வெளியேறிவிட்டேன். நீண்ட நேரத்தின் பின்னர் எழுதுவினைஞரிடம் ‘அதிபர் வருவாரா?’ என்று விசாரித்தார். அவர் சாதகமாகப் பதில் சொல்லவில்லை. சமூகமளித்தமைக்கு அடையாளமாக ‘லொக்’ புத்தகத்தில் பதிவு செய்யாமலே உடனடியாகத் திரும்பிப் போய்விட்டார். இன்னொரு சுவையான கதை. எனது மருமகன் 1993இல் கொழும்பில் விவாகம் முடிந்த பின்னர் மணமகளையும் அழைத்துக்கொண்டு விருந்துக்கு வந்தார். கதைநடுவே மணப்பெண் தனக்கு ஏஐம் ஆண்டு அனுமதி மறுத்தமையால், எங்கள் கல்லூரிக்குச் சற்று அப்பால் உள்ள கல்லூரிக்குப் போகவேண்டி ஏற்பட்டதாகவும், அதனால் பல்கலைக்கழக வாய்ப்புத் தவறியதாகவும் வருத்தப்பட்டார். அவர் ஒரு வர்த்தக மாணவி. அனுமதி மறுப்பால் நிரம்ப மனக்கசப்புகள் - வெளியாரிடம் மட்டுமல்ல. உறவினர்களிடமும் வளர்ந்தன. அவை எனது பதவிக் காலத்தோடு மங்கிமறைந்து போகவில்லை. கல்லூரி நன்மைக்காகச் சகித்துக்கொண்டேன். அனுமதி விடயத்தில் சிறிதும் நெகிழ்வு காட்டவில்லை. காரணம் அது படுவேகமாக வீழ்ச்சிப் பாதைக்குத் திருப்பியிருக்கும். மறுபக்கத்தில் அனுமதி நெருக்கு வாரம் யூனியனின் எழுச்சியை மறுமலர்ச்சியை ஓங்கி விளம்பரப்படுத்தியது.

முறைப்பாடு

யூனியன் கல்லூரியை 1962இல் அரசு பொறுப்பேற்றது. அதன் முன்னர் அமெரிக்க இலங்கை மிசனின் சொத்து. மாணவர்களில் 95 % துக்கு மேற்பட்டவர்கள் சைவ சமயத்தவர்கள். சைவ சமயச் சின்னங்களாகிய திருநீறு, சந்தனப்பொட்டு, பூவுடன் வகுப்புகளுள் செல்வது தடைசெய்யப்பட்டிருந்தது. கிறீஸ்தவ மாணவர்கள் தினமும் காலை வேளையில் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய ஒழுங்கு இருந்தது. சைவசமயப் பிள்ளைகளுக்கு அவ்வகையான வசதிகள் வழங்கப்படவில்லை. யூனியன் கல்லூரியின் சிற்பி என அழைக்கப்படும் திரு.ஐ.பி.துரைரத்தினம் அவர்களே இந்துசமயக் கொண்டாட்டத்தை கல்லூரிக்குள் முதன்முதலில் அனுமதித்தவர். 1962இல் அரசு கல்லூரியைப் பாரமெடுத்ததை அடுத்து சரஸ்வதி பூசை கொண்டாடும் உரிமையை வழங்கியிருந்தார்.

பெற்றார், பழைய மாணவர்கள், கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்கள் இரண்டு விடயங்களை நிறைவேற்றக் கேட்டுத் தொடர்ந்து முறையிட்டனர். அவர்களுடைய வாதம் - எனது பதவிக் காலத்தில் அதனை ஒப்பேற்றாவிட்டால் பின்னர் எதிர் காலத்தில் எவராலும் நிறைவேற்ற முடியாதுபோய்விடும் என்பதாக இருந்தது. சந்தர்ப்ப சு10ழ்நிலைகள் பாரிய அளவில் சாதகமாக இருந்தன. கல்லூரி அனுபவிதித்துக்கொண்டிருந்த மறுமலர்ச்சி காரணமாகச் சகல பக்கங்களில் இருந்தும்; கேள்விக்கிடமற்ற ஆதரவு இருந்தது. எமது அயற் பாடசாலைகளாகிய மகாஜனக் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி, வீமன்காமம் மகா வித்யாலயம் என்பன பிரபலம்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழாவில் உபயகாரர்களாகவிருந்தனர். “ஏன் நாங்கள் திருவிழாச் செய்யக்கூடாது?” இந்தக் கேள்வி உயர்தர வகுப்பு மாணவர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டது. அவர்களுடைய கேள்வி நியாயமானது. மறுக்க முடியாதது. 1985ஆம் ஆண்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் திருவிழாச் செய்ய வேண்டிய ஒழுங்குகளைச் செய்தோம். கல்லூரிக்கு ஆறாந் திருவிழா வழங்கப்பட்டது. தந்தை செல்வா ஆரம்ப பாடசாலையையும் பங்குகொள்ள அழைத்தோம். அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள்.

வளாகத்தில் இந்துக் கோவில் கட்டவேண்டும் என்பது இரண்டாவது வேண்டுகோள். கல்விப் பணிப்பாளரைச் சந்தித்தேன். ஏலவே வளாக எல்லை ஓரமாகக் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தது. சட்டப் பிரகாரம் 200 மீட்டருக்குள் வேறு சமய தலம் அமைக்க முடியாது. அம்பாள் திருக்கோவிலை அமைக்கத் தேர்ந்தெடுத்த இடம் 200 மீட்டருக்குச் சற்று அப்பால் இருந்தது. அந்த அம்சத்தைச் சுட்டிக்காட்டினேன். கல்விப் பணிப்பாளர் அந்தச் சட்ட அம்சம் வேறுபாடசாலையில் வெற்றிபெறத் தவறிவிட்டதைச் சுட்டிக்காட்டி, ‘புனிததலம்’ அமைக்க அனுமதி தந்தார். அவர் கோவில் என்ற பதத்தைப் பாவிக்கவில்லை. ஆகமவிதிப்படி கோவில் கட்டப்போவது அவருக்குத் தெரியும். புனிததலம் அமைக்கவே உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டதை யாருக்கும் வெளியிடவில்லை. ஒரு செயற்குழுவைக்கூட்டி கோவில் கட்டும் திருப்பணியை அவர்களிடம் ஒப்படைத்தேன். ஆசிரியர்கள் தாராளமாக நிதியுதவி செய்து திருப்பணியை நிறைவேற்றி வைத்தனர். 1986 ஜனவரியில் அடிக்கல் நாட்டும் வேளை - திருப்பணிச் சபையினர் அதிபர் நாளுக்கு அத்திபாரமிட்டு ஆரம்பித்து வைப்பார் என்ற எண்ணத்தில் இருந்தனர். அவர்களது அனுமதி பெறாமலே வேறு ஒருவரை அந்தப் புனித நாள்பணிக்கு ஒழுங்குசெய்திருந்தேன். அது செல்வன் பொ.நா.சுகந்தன் ஆகும். (இப்பொழுது சிங்கப்பூர் யேலெயபெ வுநஉhழெடழபiஉயட ருniஎநசளவைல யில் பேராசிரியாக உள்ளார்.) அவர் அப்பொழுது மாணவர் தலைவர்களது தலைவராக இருந்தார். தனித்துவ சிறப்புக்கள் பல ஒருங்கேபொருந்திய மாணவர். மாணவர்கள் ஆசிரியர்கள் யாவரது நன்மதிப்பையும் பெற்றவர். ஆசிரியர்களுக்கு அந்த செயல் திருப்தியாக இருக்கவில்லை. நான் அத்திபாரம் இட்டிருந்தால் ஏதாவது பூகம்பம் வெடித்து முயற்சி தடைபடக்கூடும் என்பதை அவர்கள் உணரவில்லை. இப்பொழுது - யாராவது இடைஞ்சல்தர முற்பட்டால் முழு மாணவச் சமூகமுமே போராடப் புறப்பட்டிருக்கும். எனக்கு அதில் நம்பிக்கை இருந்தது. அதிட்ட வசமாக 1986 ஆகஸ்ற் மாதம் திருப்பணிகள் முடியும்வரை யாரும் புரளிபண்ண முன்வரவில்லை. புவனேஸ்வரி அம்பாள் ஆலயத் திருப்பணிகள் முடிந்த பின்னர், கல்லூரி வாயிலில் சிலர் எதிர்கோசம் எழுப்பினர். சிலநாட்கள் கழித்துப் பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் ஒருவர், கோவில் கட்ட முன்னர் தங்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தவறான அபிப்பிராயங்களைப் போக்க அவருக்கு மிக நீண்ட பதில் அளிக்க வேண்டியிருந்தது. அது ‘பொற்காலம்’ நு}லில் பதிவாகி உள்ளது.

பொற்காலமாக மலர்ந்து நறுமணம் வீசிய 1986

உன்னத சிறப்புகள் பல ஒருங்கே நிறைந்த பொன்னான ஆண்டு 1986. அவ்வாண்டில் சைவமாணவர்கள் நலன்கருதி அம்பாள் ஆலயம் அமைக்கும் திருப்பணி நிறைவேறியது. 1986 க.பொ.த. உயர்தரத் தேர்வில் செல்வன் பி.என்.சுகந்தன் 372 புள்ளிகள் பெற்றுப் புதிய தேசிய சாதனை படைத்தார். இலகுவில் முறியடிக்கப்படமுடியாத இமய சாதனை. கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் எனது சிபாரிசைப் பெற்றுச் சுகந்தனுக்குப் புலமைப் பரிசில் வழங்கியது. 1986 தேர்வு அடிப்படையில் இருபத்திநான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றார்கள். யூனியன் வரலாற்றில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான அதிகூடிய எண்ணிக்கை. எனது சிறுகதைகளின் தொகுப்பான ‘அந்நிய விருந்தாளி’ என்னும் நு}லை யாழ் இலக்கிய வட்டம் கல்லூரி மண்டபத்தில் வெளியிட்டது. இவை ஓய்வின் சமயம் கிடைத்த மனம் நிறைந்த பரிசில்கள்.

இக்கட்டுரையில் பதிவாகியுள்ள சாதனைகள் கைகூடுவதற்கு ஆதாரமாக இருந்தவர்கள்: உதவி ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், கல்வித் திணைக்களம், மற்றும் கௌரவ காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோராகும். அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.