நான்கு நெறிகள்

விக்கிநூல்கள் இலிருந்து

நாம் பயன்படுத்தும் மென்பொருளின் மூல நிரல் கிடைத்தால் மட்டும் போதுமா? வேறெதுவும் வேண்டாமா? கட்டற்ற மென்பொருளென்றால் மூல நிரல் கிடைக்கப் பெறுவது மட்டும் தானா?

முதலான அம்சம் மூல நிரல். பொதுவாக மென்பொருளொன்று கட்டற்று இருக்க வேண்டுமாயின் அது நான்கு நெறிகளுக்கு இணங்கி இருத்தல் வேண்டும். இந்நான்கு நெறிகளும் மென்நுகரும் யவருக்கும் இயல்பாகவே கிடைக்க வேண்டிய நான்கு சுதந்தரங்களைப் பற்றியது. இந்த நான்கு சுதந்தரங்களை தன்னைப் பயன்படுத்தும் எவருக்கும் தரக்கூடிய மென்பொருள் கட்டற்ற மென்பொருள்.

நமதாகிப் போன ஒரு பொருளிடமிருந்து நமது எதிப்பார்ப்புகள் எத்தன்மையதாக இருக்கும் என சாதாரணமாக சிந்தித்தாலே மென்பொருளொன்றின் மீதான நமது உரிமைகளும் புலப்பட்டுவிடும்.

நமதாகிப்போன ஒரு பொருளை நமது வரம்பிற்குட்பட்டு எப்பொருட்டும் எந்நோக்கத்திற்காகவும் பயன்படுத்த கூடிய உரிமம் நமக்குள்ளது தானே! இங்ஙனம் செய்வதை நாம் யாரிடமிருந்து வாங்கினோமோ அல்லது யார் அப்பொருளை உருவாக்கினாரோ அவரிடம் சொல்லிவிட்டா செய்வோம்? நிச்சயம் கிடையாது!

தனிப்பட்ட தங்களின் தேவைகளுக்காக ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ, மென்பொருளினை உருவாக்கியவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்பிற்கோ முன்னறிவிப்புச் செய்யாதவாறே எப்பொருட்டும் பயன்படுத்தக் கூடிய சுதந்தரத்தை ஒரு மென்பொருள் அதன் பயனருக்கு வழங்க வேண்டும். அதாவது எந்நோக்கத்திற்காவும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம்.

பொருளொன்று தங்களின் நோக்கங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது என வைத்துக் கொள்வோம். அடுத்த எதிர் பார்ப்பு என்ன? அப்பொருளின் இயல்பை, அது பணிசெய்யும் விதத்தைக் கற்க கூடிய உரிமை நுகர்வோருக்கு உண்டு தானே! அங்ஙனம் கற்றவர் அதை தமது தேவைக் கேற்றாற் போல் மாற்றி வடிவமைத்துப் பயன்படுத்துவதும் இயல்புதானே!

ஆக தாங்கள் பயன்படுத்தும் மென்பொருளொன்று தம்மைக் கற்கவும், தங்களின் தேவைக்கேற்றாற் போல் மாற்றியமைத்து பயன்படுத்தவும் தங்களை அனுமதிக்கவேண்டும். சுருக்கமாக நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று சுயத் தேவைக் கேற்றாற் போல் ஆக்கிக் கொள்ளக் கூடிய சுதந்தரம்.

சரி பொருளொன்று நன்றாக இருக்கிறது. அண்டை வீட்டாருக்கும் நண்பருக்கும் கூட அது பயன்படும் எனத் தோன்றுகிறது. அல்லது தாங்கள் ஒரு பொருளைப் பயன்படுத்துவதைப் பார்க்கும் தங்களின் நண்பரொருவர் அதனைக் கேட்கிறார். என்ன செய்வோம்? பழகவாவது கொடுப்போம் தானே!

தாங்கள் பயன்படுத்தும் மென்பொருள் தன்னை நகலெடுத்து அண்டை அயலாருடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய உரிமத்தைத் தங்களுக்குத் தர வேண்டும். அதாவது பிறரும் பயனுற வேண்டி படி யெடுத்து பகிர்ந்து கொள்வதற்கானச் சுதந்தரம்.

சரி மேற்கூடிய மூன்று சுதந்தரங்களும் தங்களுக்கு கிடைத்த பிறகு வேறென்ன இருக்க முடியும்? பெற்ற பொருளைக் கற்று தங்களின் தேவைகளுக்கேற்றாற் போல் மாற்றி மேம்படுத்திய பிறகு அதனைச் சமூகத்திற்கு வெளிவிட விழைந்தால் விலங்கிட யாரும் இருக்கக் கூடாது தானே!

ஆம்! கற்க, படியெடுக்க, பகிர்ந்துக் கொள்ள, மேம்படுத்த தங்களை அனுமதித்த தங்களின் மென்பொருள் அங்ஙனம் செய்த மாற்றங்களை, மேம்பாட்டினை வெளியிடுவதற்கான உரிமத்தினையும் தரவேண்டும். அதாவது ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்திரம்.

இந்நான்கு சுதந்தரங்களையும் தரக் கூடிய மென்பொருள் யாவர்க்குமான அறம் போற்றும் கட்டற்ற மென்பொருள்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=நான்கு_நெறிகள்&oldid=11603" இலிருந்து மீள்விக்கப்பட்டது