திருச்சந்த விருத்தம்

விக்கிநூல்கள் இலிருந்து
   தத்துவநிலை பரந்தாமனே எனல்

         சந்தக் கலி விருத்தம்

பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்*
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்*
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்*
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே?                     1

ஆறுமாறு மாறுமாய்  ஓரைந்துமைந்தும் ஐந்துமாய்*
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்*
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்*
ஊறொடோ சையாயஐந்தும் ஆயஆய மாயனே!                       2

ஐந்துமைந்தும் ஐந்துமாகி யல்லவற்று ளாயுமாய்*
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றவாதி தேவனே!*
ஐந்துமைந்தும் ஐந்துமாகி  யந்தரத்த ணைந்துநின்று*
ஐந்துமைந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே?                    3

மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய்*
மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய*
மூன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்*
ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோ?எம் மீசனே!                   4

நின்றியங்கும் ஒன்றலா உருக்கள்தோறும் ஆவியாய்*
ஒன்றியுள் கலந்துநின்ற  நின்னதன்மை யின்னதென்று*
என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்!நின் னுந்திவாய்*
அன்றுநான் முகற்பயந்த  ஆதிதேவ னல்லையே?                      5

நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மண்ணினை*
நாகமேந்து மாகமாக மாகமேந்து வார்புனல்*
மாகமேந்து மங்குல்தீயொர் வாயுவைந் தமைந்துகாத்து*
ஏகமேந்தி நின்றநீர்மை நின்கணே இயன்றதே.                         6

ஒன்றிரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்*
ஒன்றிரண்டு காலமாகி  வேலைஞால மாயினாய்*
ஒன்றிரண்டு தீயுமாகி  யாயனாய மாயனே!
ஒன்றிரண்டு கண்ணினாலும் உன்னையேத்த வல்லனே?                7

ஆதியான வானவர்க்கும் அண்டமாய அப்புறத்து*
ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதிநீ*
ஆதியான வானவாணர் அந்தகாலம் நீயுரைத்தி*
ஆதியான காலநின்னை யாவர்காண வல்லரே?                        8

தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்*
நீதியால் வணங்குபாத நின்மலா நிலாயசீர்*
வேதவாணர் கீதவேள்வி நீதியான வேள்வியார்*
நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே.                     9

தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண் தடங்கடல்*
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல்*
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்*
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே.                    10

சொல்லினால் தொடர்ச்சிநீ சொலப்படும் பொருளும்நீ*
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ*
சொல்லினால் படைக்கநீ படைக்கவந்து தோன்றினார்*
சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்ல வல்லரே?               11

உலகுதன்னை நீபடைத்தி உள்ளொடுக்கி வைத்தி* மீண்டு
உலகுதன்னுளே பிறத்தி யோரிடத்தை யல்லையால்*
உலகுநின்னொடு ஒன்றிநிற்க வேறுநிற்றி யாதலால்*
உலகில்நின்னை யுள்ளசூழல் யாவருள்ளா வல்லரே?                   12

இன்னையென்று சொல்லலாவது இல்லையாதும் இட்டிடைப்*
பின்னைகேள்வன் என்பர்உன் பிணக்குணர்ந்த பெற்றியோர்*
பின்னையாய கோலமோடு பேரும்ஊரும் ஆதியும்*
நின்னையார் நினைக்கவல்லர்? நீர்மையால் நினைக்கிலே.              13

தூய்மையோக மாயினாய்! துழாயலங்கல் மாலையாய்!*
ஆமையாகி யாழ்கடல் துயின்றவாதி தேவ!*நின்
நாமதேய மின்னதென்ன வல்லமல்ல மாகிலும்*
சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே?                           14

அங்கமாறும் வேதநான்கும் ஆகிநின்ற வற்றுளே*
தங்குகின்ற தன்மையாய்! தடங்கடல் பணத்தலை*
செங்கண்நா கணைக்கிடந்த செல்வமல்கு சீரினாய்!*
சங்கவண்ண மன்னமேனி சார்ங்கபாணி யல்லையே?                   15

தலைக்கணத் துகள்குழம்பு சாதிசோதி தோற்றாமாய்*
நிலைக்கணங்கள் காணவந்து நிற்றியேலும் நீடிரும்*
கலைக்கணங்கள் சொற்பொருள் கருத்தினால் நினைக்கொணா*
மலைக்கணங்கள் போலுணர்த்தும் மாட்சிநின்றன் மாட்சியே.            16

ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர்*
போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்*
நாகமூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து*மேல்
ஆகமூர்த்தி யாயவண்ணம் என்கொல்?ஆதி தேவனே!                  17

விடத்தவாய் ஓராயிரம் இராயிரம்கண் வெந்தழல்*
விடத்துவீழ் விலாதபோகம் மிக்கசோதி தொக்கசீர்*
தொடுத்துமேல் விதானமாய பௌவநீர ராவணை
படுத்தபாயல் பள்ளிகொள்வ து என்கொல்!வேலை வண்ணணே.        18

புள்ளாதாகி வேதநான்கும் ஓதினாய்! அதன்றியும்*
புள்ளின்வாய் பிளந்துபுட் கொடிப்பிடித்த பின்னரும்*
புள்ளையூர்தி யாதலால் அதென்கொல்?மின்கொள் நேமியாய்!*
புள்ளின்மெய்ப் பகைக்கடல் கிடத்தல் காதலித்ததே.                    19

கூசமொன்று மின்றிமா சுணம்படுத்து வேலைநீர்*
பேசநின்ற தேவர்வந்து பாடமுன் கிடந்ததும்*
பாசம்நின்ற நீரில்வாழும் ஆமையான கேசவா!*
ஏசவன்று நீகிடந்த வாறுகூறு தேறவே.                              20

அரங்கனே! தரங்கநீர் கலங்கவன்று குன்றுசூழ்*
மரங்கள்தேய மாநிலம் குலுங்கமா சுணம்சுலாய்*
நெருங்கநீ கடைந்தபோது  நின்றசூரர் என்செய்தார்?*
குரங்கையா ளுகந்தவெந்தை! கூறுதேற வேறிதே.                    21

பண்டுமின்று மேலுமாயொர் பாலனாகி ஞாலமேழ்*
உண்டுமண்டி யாலிலைத் துயின்றஆதி தேவனே!*
வண்டுகிண்டு தண்டுழாய் அலங்கலாய்! கலந்தசீர்ப்*
புண்டரீக பாவைசேரு மார்ப!பூமி நாதனே!                           22

வானிறத்தொர் சீயமாய் வளைந்தவாள் எயிற்றவன்*
ஊன்நிறத்து கிர்த்தலம் அழுத்தினாய்! உலாயசீர்*
நால்நிறத்த வேதநாவர் நல்லயோகி னால்வணங்கு*
பால்நிறக் கடல்கிடந்த பற்பநாபன் அல்லையே?                       23

கங்கைநீர் பயந்தபாத பங்கயத்தெம் அண்ணலே!*
அங்கையாழி சங்குதண்டு வில்லும்வாளும் ஏந்தினாய்!*
சிங்கமாய தேவதேவ! தேனுலாவு மென்மலர்*
மங்கைமன்னி வாழுமார்ப! ஆழிமேனி மாயனே!                      24

வரத்தினில் சிரத்தைமிக்க வாளெயிற்று மற்றவன்*
உரத்தினில் கரத்தைவைத் துகிர்த்தலத்தை யூன்றினாய்*
இரத்தநீயி தென்னபொய்? இரந்தமண்வ யிற்றுளே
கரத்தி*உன் கருத்தையாவர் காணவல்லர்? கண்ணனே!                25
"https://ta.wikibooks.org/w/index.php?title=திருச்சந்த_விருத்தம்&oldid=4947" இலிருந்து மீள்விக்கப்பட்டது