அச்சப் பத்து/உரை 17-20

விக்கிநூல்கள் இலிருந்து

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்

துணிநிலா அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்

திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீ

றணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பதப்பொருள் :

பிணி எலாம் - எல்லா வகையான நோய்களும், வரினும் - வந்தாலும், அஞ்சேன் - அஞ்ச மாட்டேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் - பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன்; துணிநிலா அணியினான்றன் - துண்டப் பிறையை அணிகலனாகவுடைய சிவபெருமானது, தொழும்பரோடு அழுந்தி - தொண்டரோடு பொருந்தி, அம்மால் - அத்திருமால், திணி நலம் பிளந்தும் காணா - வலிமையான நிலத்தை அகழ்ந்தும் காணமாட்டாத, சேவடி பரவி - சிவந்த திருவடியைத் துதித்து, வெண்ணீறு அணிகிலாதவரை - திரு வெண்ணீறு அணியாதவரை, கண்டால் - காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் :

தீராத நோயைத் தீர்த்து அருள வல்ல பெருமானது அடியாரோடு கலந்து இருப்பார்க்கு, நோய் துன்பம் தாராது ஆதலின், 'பிணியெலாம் வரினும் அஞ்சேன்' என்றார். பிறப்பு இறப்பு இல்லாத இறைவனது திருவடியை அடைந்தார்க்குப் பிறப்பு இறப்பு இல்லையாதலின், 'பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்' என்றார். ஆனால், பிறவிப் பிணிக்கு மருந்தாகிய பெருமானுக்கேயுரிய திருவெண்ணீற்றினையணிந்து மகிழாதவரைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்றார்.

'கங்காளன் பூசங் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வாரே'

என்றார் திருமூலரும்.

இதனால், திருவருள் நெறியில் நிற்பவர்களுக்கும் திருவெண்ணீறு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=அச்சப்_பத்து/உரை_17-20&oldid=2394" இலிருந்து மீள்விக்கப்பட்டது