அச்சப் பத்து/உரை 25-28

விக்கிநூல்கள் இலிருந்து

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்

புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்தஅம் பலத்துள் ஆடும்

முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி

அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பதப்பொருள் :

தகைவு இலா - தவிர்க்க முடியாத, பழியும் அஞ்சேன் - பழிக்கும் அஞ்ச மாட்டேன்; சாதலை முன்னம் அஞ்சேன் - இறத்தலை முதலாவதாக அஞ்ச மாட்டேன்; புகைமுகந்த எரி - புகையைக் கொண்ட நெருப்பை, கை வீசி - கையிலே ஏந்தி வீசிக்கொண்டு, பொலிந்த - விளங்குகின்ற, அம்பலத்துள் ஆடும் - பொன்னம்பலத்தில் ஆடுகின்ற, முகை - அரும்பு, நகை - மலர்கின்ற, கொன்றை மாலை - கொன்றை மாலையை அணிந்த, முன்னவன் - முதல்வனது, பாதம் ஏத்தி - திருவடியைத் துதித்து, அகம் நெகாதவரைக் கண்டால் - மனம் நெகிழாதவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் :

தம்மேல் பழி சொல்வோர், உண்மையை உணராதவராதலின், பொருட்படுத்த வேண்டுவதில்லை என்பார், 'தகைவிலாப் பழியும் அஞ்சேன்' என்றார். சாதல் என்பது உடம்பினின்றும் உயிர் பிரிதலாம். உடம்பினின்றும் உயிரைத் தனித்துக் காணும் தன்மையுடையோர் சாதலுக்கு அஞ்ச வேண்டுவதில்லையாதலின், 'சாதலை அஞ்சேன்' என்றார். எல்லா வகையான அச்சங்களிலும் முதன்மையான அச்சம் சாவிற்கு அஞ்சும் அச்சமேயாதலால், அவ்வச்சந்தான் முதலில் எனக்கு நீங்கியது என்பார், 'முன்னம் அஞ்சேன்' என்றார்.

'தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்'

என்ற நாயனார் வாக்கையும் காண்க. ஆனால், பழியைப் போக்கி இறவா நிலையையளித்து உதவுகின்ற பெருமானைத் தொழுது உள்ளம் உருகாதவரைக் காணின் நடுங்க வேண்டும் என்பார், 'முன்னவர் பாதம் ஏத்தி அகம் நெகாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.

இதனால், இறைவன் செய்த உதவியினை எண்ணி உருக வேண்டும் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=அச்சப்_பத்து/உரை_25-28&oldid=2396" இலிருந்து மீள்விக்கப்பட்டது