அன்னமாக மாற முயன்ற அண்டங்காக்கை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

அண்டங்காக்கை ஒன்று தாமரை நிறைந்த குளம் ஒன்றை அடைந்தது. அதில் அழகான அன்னப் பறவைகள் நீந்திச் சென்று கொண்டிருந்தன. அன்னங்களிம் பால் போன்ற வெண்மையான சிறகுகளைக் கண்ட அக்காக்கை தனக்கும் அது போல வெள்ளைச் சிறகுகள் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்றும், தனக்கு மட்டும் கறுமையாகவும், சாம்பல் நிறமாகவும் ஏன் சிறகுகள் இருக்க வேண்டும் என்றும் சிந்திக்கத் தொடங்கியது.


அடிக்கடி அன்னப் பறவைகள் பூச்சி புழுக்களைப் பிடிக்க நீருக்குள் மூழ்கி வெளிவந்து கொண்டிருந்தன. இதைக் கண்ட காக்கை ' ஆகா! அன்னப் பறவையின் சிறகுகள் வெண்மையாக இருப்பதன் காரணம் இப்போது விளங்கிவிட்டது. அடிக்கடி அன்னப் பறவைகள் சீரில் குளித்துக் கொண்டேயிருப்பதால் தான் அவைகளின் சிறகுகள் தூசி, தும்பு படியாமல் வெண்மையாக இருக்கின்றன. நாம் அடிக்கடி குளிக்காமல் இருப்பதால் காற்றிலுள்ள தூசி படிந்து, நம் சிறகுகள் பழுப்பேறிவிட்டன போலும்' என்ற முடிவுக்கு வந்தது.


உடனே காகை குளக்கரைக்குச் சென்றது; குளிக்கத்தொடங்கியது; ஒருமுறை, பலமுறை எனக் குளித்தது; தன் சிறகுகள் வெளுத்துவிட்டனவா என்று ஒவ்வொரு முறையும் பார்த்தவண்ணம் இருந்தது. சிறகுகள் வெளுக்கவில்லை. ஆனால், காகை குளிப்பதை விடவில்லை. 'குளித்துக்கொண்டே இருந்தால் சிறகுகள் வெளுத்துவிடும்' என்று இடைவிடாது குளித்துக் கொண்டே இருந்தது. சிறகுகள் வெளுக்கவில்லை. ஆனால், காக்கை காய்ச்சல் கண்டு இறந்தது.