எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/எண்ணிமப் பாதுகாப்பின் தேவை
ஒரு சமூகத்தின் அடையாளம், பண்பாடு, கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியன அதன் அறிவுத் தளங்களில் (knowledge bases) இருந்து கட்டியெழுப்படுகின்றன. நூலகங்கள், ஆவணகங்கள் (archives), அருங்காட்சியகங்கள், பண்பாட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இந்த அறிவுத்தளங்களை உருவாக்க, பேண, பரப்ப பெரும் பங்காற்றுகின்றன. எமது மொழி, இலக்கியம், கலைகள், தொழிற்கலைகள், வாழ்வியற் கலைகள் ஆகியன இந்த அறிவுத்தளங்களின் வெளிப்பாடுகள் ஆகும். இந்த அறிவுத்தளங்களை நாம் உருவாக்கி, பாதுகாத்துப் பயன்படுத்தாவிடால், அறிவுமயப்படுத்தப்பட்ட இன்றைய உலகில் நாம் வளர்ச்சிபெற முடியாது.
இன்று நாம் ஓர் எண்ணிம உலகில் (digital world) வாழ்கின்றோம். அன்றாட வாழ்வின் தகவல் வளங்களும் செயற்பாடுகளும் எண்ணிமப்படுத்தப்பட்டு (digitized), மென்பொருள் மயப்படுத்தப்படும் (softwareization) காலகட்டத்தில் வாழ்கிறோம். இதனை நான்காவது தொழிற்புரட்சியாக வருணிக்கின்றனர்.[1] எமது அறிவுத்தளங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி, பாதுகாத்து அனைவருக்கும் கொண்டும் செல்வதற்கான வாய்ப்பினை இந்த எண்ணிமப் புரட்சி வழங்கியுள்ளது.
எண்ணிமம், எண்ணிம வளங்கள் என்றால் என்ன? எண்ணிமப் பொருட்கள் எதிர்நோக்கும் அழிவாபத்துக்கள் எவை? எண்ணிமப் பாதுகாப்புச் (digital preservation) செயற்பாடுகள் யாவை? அணுக்கப்படுத்தல் (providing access) ஏன் முக்கியம்? எண்ணிமப் பாதுகாப்புக்கும் அணுக்கப்படுத்தலுக்கும் தேவையான தொழில்நுட்பங்களும் நிறுவனக் கட்டமைப்புக்களும் எவை? போன்ற கேள்விகளை அறிமுக நோக்கில் விளக்குவதே இந்த நூலின் நோக்கம் ஆகும்.