கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல்

விக்கிநூல்கள் இலிருந்து

ஐயுபிஏசி முறை

பல்வேறு வகையான கரிமச் சேர்மங்களுக்கும் பொதுவான ஒரு பெயரிடுவதற்காக, அடிப்படை மற்றும் பயன்சார்ந்த வேதியியலின் பன்னாட்டு சங்கம் (ஐயுபிஏசி) சில விதிமுறைகளை வகுத்துள்ளது, எந்தவொரு மூலக்கூற்று அமைப்பு கொடுக்கப்பட்டாலும் அதற்கு ஒரேயொரு ஐயுபிஏசி பெயர் மட்டுமே சூட்டமுடியும் என்பது இப்பெயரிடும் முறையின் மிகமுக்கியமான மற்றும் சிறப்பான அம்சம் ஆகும். இம்முறையில் சூட்டப்பட்ட ஒரு பெயர் ஒரேயொரு மூலக்கூற்று அமைப்பையே குறித்துக்காட்டும். ஐயுபிஏசி முறையில் பெயரிடுகையில் ஒவ்வொரு கரிமச்சேர்மமும் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவை

  • முன்னொட்டு (துவக்கும் சொல்)
  • அடிப்படைச் சொல்
  • பின்னொட்டு (முடியும் சொல்)

முன்னொட்டு:

அடிப்படைச் சொல்லுக்கு முன்னால் வரவேண்டிய பெயரின் பகுதி முன்னொட்டு எனப்படுகிறது. முன்னொட்டு இரண்டு வகைப்படும். அவை 1. முதலாம்நிலை முன்னொட்டு. 2. இரண்டாம் நிலை முன்னொட்டு என்பனவாகும்.. வளைய மற்றும் வலையமிலா என்பவை முதலாம்நிலை முன்னொட்டுகளாகும். இவை ஒரு சேர்மத்தின் அடிப்படைச் சொல்லுக்கு முன் சேர்த்து அழைக்கப்படுகின்றன.