குழந்தைப் பாடல்கள்/குருவி குருவி கொஞ்சம் நில்

விக்கிநூல்கள் இலிருந்து

குருவி குருவி கொஞ்சம் நில்
கொத்திய நெல்லைக் கீழேவை

காட்டைத் திருத்தி வைத்தாயோ
கழனி கட்டி வைத்தாயோ

மாட்டைக் கட்டி உழுதாயோ
மண்ணைக் கிளறிப் போட்டாயோ

விதையைக் காத்து வைத்தாயோ
வீசியிறைத்து விதைத்தாயோ

நாளை எண்ணிக் கிடந்தாயோ
நாற்றைப் பிடுங்கி நட்டாயோ

மழையே வாவா என்றாயோ
மானம் பார்த்து நின்றாயோ

ஏற்றம் போட்டு இறைத்தாயோ
ஏரி மடக்கி விட்டாயோ

கவலை போட்டு இறைத்தாயோ
கால்வாய் வெட்டி விட்டாயோ

களையைப் பிடுங்கி விட்டாயோ
கட்டிக் காத்து நின்றாயோ

கதிரைத் தொட்டுப் பார்த்தாயோ
கருவங் கொண்டே சென்றாயோ

அரிவாள் கொண்டு அறுத்தாயோ
அறுத்துக் களமும் போட்டாயோ

பயிரை யடித்துப் பட்டாயோ
பதரைத் தூற்றி விட்டாயோ

மண்ணில் உழைத்து வேர்த்தாயோ
மணியை எல்லாம் சேர்த்தாயோ

  கொடுக்கிறேன் - எடுத்துக்கொள்
  தடுக்கிலேன் - தாவிப்போ

உண்டு உண்டு களியடி
ஊட்டி ஊட்டி மகிழடி

எழுதியவர்: கவிஞர் சுரபி (ஜே. தங்கவேல், 1942)