உள்ளடக்கத்துக்குச் செல்

தனிநபர் நிதி/நிதி அறிவின் முக்கியத்துவம்

விக்கிநூல்கள் இலிருந்து

நிதி அல்லது பணம் என்பது வளங்களுக்கு மதிப்பீடாக அமைவது. உணவு, உடை, உறையுள், நலம், போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இருந்து ஆடம்பரங்கள் வரைக்கும் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் நிதி அல்லது வளங்கள் அவசியமாக அமைகிறன. நிதி அறிவு என்பது நிதி தொடர்பாக பொறுப்பான முடிவுகளை எடுக்கத் தேவையான தகவலறிவு, திறன்கள், தன்நம்பிக்கை ஆகியவற்றை ஒருவர் பெற்றிருப்பது ஆகும். நிதியை எப்படி உருவாகுவது அல்லது பெறுவது, பயன்படுத்துவது, முதலீடு செய்வது. மேலாண்மை செய்வது என்பவை நிதி அறிவில் அடங்கும்.

எழுத்தறிவு, கணினி அறிவு போன்று நிதி அறிவும் இன்று எல்லொருக்கும் தேவையான ஒன்று. நிதி அறிவு ஒருவரின் வளங்களை திறனாகப் பயன்படுத்தி உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள உதவும்.

வங்கி, கடன் அட்டை, பல்வேறு வகையான முதலீடுகள் என்று இன்றைய நிதிக் கருவிகளும் நிறுவனங்களும் சிக்கலானவை. மீனுக்குத் தூண்டில் போடுவது போன்று கடன்களைத் தந்து ஒருவரின் நிதியை சூறையாடும் முதலை நிறுவனங்கள் பல உண்டு. தெளிவான புரிதல் இல்லாமல் ஒருவரால் இவை தொடர்பாக உச்சபயன் தரும் முடிவுகளை எடுக்க முடியாது.

இன்றைய நுகர்வுப் பண்பாட்டில் அடிப்படைத் தேவைகளுக்கும் மிதமான ஆசைகளுக்கும் இடையே தெளிவான வாழ்க்கை மற்றும் நிதி இலக்குகளை முன்வைத்து செயற்பட வேண்டும். அதற்கும் நிதி அறிவும், நிதித் திட்டமிடலும் தேவை.

நிதி அறிவு ஒரு சமூகத்தில் உயரும் போது அச் சமூகம் நிதி தொடர்பான கூடிய பொறுப்புள்ள முடிவுகளை எடுக்க உதவும். நாட்டின் நிதி, நிதி தொடர்பான சட்டங்கள், நிதி நிறுவனங்கள், அவற்றின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்ளவும் நிதி அறிவு ஒருவருக்கு உதவுகிறது.